போலிச் செய்திகளை எதிர்கொள்ள உங்களுடன் கரம் கோர்க்கும் பிபிசி #BeyondFakeNews

- எழுதியவர், ரூபா ஜா
- பதவி, தலைவர், இந்திய மொழிகள், பிபிசி உலக சேவை
ஊடகங்களில் வரும் செய்தியை எப்படி எடுத்துக் கொள்வது, நாம் பார்க்கும் செய்திகளின் நம்பகத்தன்மையை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பதை தெரிந்து கொண்டவர்கள் போலிச் செய்திகளை பரப்புவது குறைவு.
இதனால்தான், பிரிட்டன் மற்றும் இந்தியாவில் உள்ள பள்ளிகளுக்கு, ஊடக அறிவூட்டல் குறித்த பயிலரங்குகளை நடத்த பிபிசி செய்தியாளர்கள் குழு சென்றது. உலகெங்கிலும் தவறான தகவல் பரப்பப்படுவதை எவ்வாறு சமாளிப்பது என்பதற்கான நடைமுறை தீர்வுகளை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு, நவம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் #Beyond Fake News திட்டம் தொடங்க இருக்கிறது.
'உண்மை செய்திகள்' குறித்த பயிலரங்கங்களும் இதன் ஒரு பகுதியே. ஊடக அறிவில் முக்கிய கவனம் செலுத்த பிபிசி உலக சேவை முன்னெடுத்துள்ள முயற்சிகளில் இத்திட்டமும் ஒன்று. அண்மைய ஆண்டுகளில் பிரிட்டனில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இதே மாதிரியான ஒரு திட்டத்தின் அடிப்படையில், இந்த 'உண்மை செய்திகள்' ஊடக அறிவூட்டல் பயிலரங்குகள் இருக்கும். போலிச் செய்திகள் என்றால் என்ன என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளவும், இதனை தடுக்க என்ன தீர்வு என்பது குறித்து அவர்கள் யோசிக்கவும் இவை உதவும்.

இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்ட மொபைல் போன் தொடர்புகள் செயல்பாட்டில் உள்ளதாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறுகிறது. மேலும், கோடிக்கணக்கான இந்தியர்கள் குறுகிய இடைவெளிக்கும் இணைய தொடர்புப் பயன்பாட்டை அதிகப்படுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலான மக்கள் தங்கள் மொபைல் போன் மூலம் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். அதில் சாட் செய்யக்கூடிய செயலிகள் மூலம் செய்திகளை பெற்றும் பகிர்ந்தும் வருகின்றனர். இது ஒரு சிறந்த வழி என்றாலும், இங்கு தவறான தகவல்கள் சரிபார்க்கப்படாமல் வேகமாக பரப்பப்படலாம். அப்படி பெறப்படும் தகவல்கள் உண்மையா இல்லையா என்று அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனாலேயே செய்திகளை எப்படி புரிந்து கொள்ள வேண்டும், அதனை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்று பிபிசி கருதுகிறது.
செய்திகளை படிப்பதற்கு இணையதளம் மற்றும் சாட் செயலிகளை பயன்படுத்துவது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமே கிடையாது என்ற போதிலும், இவர்களுக்கு பயிலரங்குகள் நடத்த நாங்கள் கவனம் செலுத்துவதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இவர்களை சுற்றியிருக்கும் நபர்களை எந்த தலைமுறையினராக இருந்தாலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி இளைஞர்களுக்கு உண்டு. இரண்டாவது காரணம், இணையதள யுகத்தில் வளர்ந்து சாட் செயலிகள் மூலம் தொடர்பு கொள்ள விரும்புவது இளைஞர்களே. இதனை மனதில் வைத்துக் கொண்டு, மாணவர்களுக்கு ஊடகம் மற்றும் டிஜிட்டல் அறிவூட்டல் குறித்த விழப்புணர்வை ஏற்படுத்தி, தங்கள் போன்களில் வரும் செய்திகள் குறித்து யோசிக்கவும், போலிச் செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கவும் ஊக்குவிக்கும் வகையிலும் எங்கள் பயிலரங்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், BLOOMBERG
பிபிசியின் இந்திய மொழிகள் தலைமையகம் இருக்கும் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இந்த பயிலரங்குகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமல்லாது, சென்னை,அகமதாபாத், அமிர்தசரஸ், புனே மற்றும் விஜயவாடாவில் உள்ள பள்ளிகளிலும் எங்கள் குழு இதனை நடத்தியது. இந்த நான்கு மணி நேர பயிலரங்கத்தில், விளையாடுப் போட்டிகள், வீடியோக்கள், மற்றும் குழு பயிற்சிகளும் இடம்பெற்றன. ஆங்கிலத்தைத் தவிர தமிழ், ஹிந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, மற்றும் பஞ்சாபி ஆகிய பிராந்திய மொழிகளிலும் இது நடத்தப்பட்டது. பயிலரங்கத்தின் இறுதியில், மாணவர்கள் இதற்கான தீர்வை யோசித்து செயல்படவும் ஊக்குவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில், போலிச் செய்திகள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தும் வகையில், மாணவர்கள் போஸ்டர்கள், சுவர் ஓவியங்கள், இசை ஆகியவற்றை தயாரித்தனர்.
நவம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் பல இடங்களில் நடைபெறும் Beyond Fake News நிகழ்ச்சியில் இந்த மாணவர்கள் தயாரித்த சில திட்டங்களும் திரையிடப்படும். மேலும், இந்த வாரத்தில் ஐ.ஐ.டி மாணவர்கள் ஹேக்கத்தானில் பங்குபெறுவதும் நடைபெறும். கூகுளின் இந்திய தலைமையகத்தில் நடைபெறும் இந்த ஹேக்கத்தானில் தொழில்நுட்ப யோசனைகள் பற்றி விவாதிக்கப்படும். இதில் இணையத்தில் பரப்பப்படும் போலிச் செய்திகளை தடுப்பதற்கு உள்ள தொழில்நுட்ப தீர்வுகள் பெற அவர்கள் முற்படுவார்கள்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
தவறான தகவல்களை சரிபார்க்கமால் அனுப்புவது என்பது சமூகத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதனால், ஆய்வு செய்து உண்மை செய்திகள் வெளியிடும் செய்தி வழங்குபவர்கள் மீது இருக்கும் நம்பிக்கையையும் மக்கள் இழக்க நேரிடும். பொதுமக்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற செய்தி நிறுவனங்களுடன் இணைந்து போலிச் செய்திகளுக்கான தீர்வை கொண்டுவர பிபிசி முயற்சிக்கிறது. ஏனெனில், இந்த பிரச்சனை ஒரு தனி நிறுவனத்திலோ அல்லது ஒரு தொழிலில் மட்டுமே இல்லை. அனைவரின் ஒத்துழைப்பும் இதற்கு தேவைப்படுகிறது.
தற்சமயத்தில், எங்களுடன் இணைந்து, இதனை முன்னெடுத்து செல்ல ஆர்வமுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
நம் இளைஞர்களிடம் ஊடக அறிவை முன்னேற்ற செய்வதே முதல் முக்கிய கடமையாகும். இதில் பங்கு கொள்வதில் பிபிசி பெருமை கொள்கிறது. 'உண்மை செய்திகள்' குறித்து பேசுவது உண்மையாகும் நேரம் வந்துவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












