அலோக் வர்மா விவகாரம்: 'சிபிஐ அமைப்பின் மரியாதை பாதிக்கப்பட்டுள்ளது'

சிபிஐ

பட மூலாதாரம், CHANDAN KHANNA / getty images

சி.பி.ஐ-இன் இரு மூத்த அதிகாரிகளுக்கிடையே உண்டாகியுள்ள மோதல் அந்த அமைப்பின் நம்பகத்தன்மையையும் மரியாதையையும் கடுமையாக பாதித்துள்ளதாக கூறுகிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் விக்னேஷிடம் பேசிய சி.பி.ஐ அமைப்பின் முன்னாள் இயக்குநரும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை விசாரித்த குழுவுக்கு தலைமை வகித்தவருமான ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கார்த்திகேயன்.

ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயல்பட சி.பி.ஐ-இல் அரசியல் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த கார்த்திகேயன், "சி.பி.ஐ மட்டுமல்ல, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை என அனைத்திலுமே ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு இருப்பதாக காலம் காலமாக குற்றம்சாட்டி வருகின்றன," என்றார்.

தற்போது சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே வெடித்துள்ள மோதல் குறித்து பேசிய அவர், "சி.பி.ஐ அமைப்பைப் பொறுத்த வரை அதன் இயக்குநர்தான் உச்சபட்ச பொறுப்பு, அதிகாரம் மற்றும் கடமைகளை உடையவர். அவர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும் ஒருவரை சிறப்பு இயக்குநராக அரசு நியமனம் செய்திருக்ககூடாது. அதையும் மீறி சிறப்பு இயக்குநர் நியமனம் செய்யப்பட்டபோதே, பதற்றம் தொடங்கிவிட்டது," என்று கூறினார்.

ராகேஷ் அஸ்தானா (இடது) மற்றும் அலோக் வர்மா

பட மூலாதாரம், cbi

படக்குறிப்பு, ராகேஷ் அஸ்தானா (இடது) மற்றும் அலோக் வர்மா

மேற்கொண்டு பேசிய அவர் "சி.பி.ஐ இயக்குநரின் அனுமதி இல்லாமல் அந்த அமைப்புக்கு சிறப்பு இயக்குனர் நியமனம் செய்யப்பட்டதால் இப்போது குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது," என்று தெரிவித்தார்.

"சி.பி.ஐ அமைப்பின் நிர்வாக நடைமுறைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்தான். பிரச்சனையின் தொடக்கத்திலேயே அந்த ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த அவலமான சூழலைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால், அதை ஊழல் கண்காணிப்பு ஆணையம் செய்யவில்லை," என்று கூறிய கார்த்திகேயன் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சரியா தவறா என உச்ச நீதிமன்றம் முடிவு செய்யட்டும் என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :