அலோக் வர்மா: விடுப்பில் அனுப்பப்பட்டபோது வைத்திருந்த 7 முக்கிய கோப்புகள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் உச்சபட்ச புலனாய்வு அமைப்பான சிபிஐ-இன் இயக்குநரான அலோக் வர்மா தாக்கல் செய்த மனு தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் இந்திய உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
இந்நிலையில், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டபோது அவரிடம் முக்கியமான ஏழு கோப்புகள் இருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அந்த முக்கியமான ஏழு கோப்புகள் எவை?
ரஃபேல் ஒப்பந்தம், இந்திய மருத்துவ கவுன்சிலின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் தொடர்பான லஞ்ச புகார் வழக்கு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை அலோக் வர்மா கவனித்து வந்தார்.
- ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான புகார் விசாரணையில் இருந்தது. அதைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டியிருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ரஃபேல் போர் விமானம் தொடர்பான மனுவை அக்டோபர் நான்காம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு நிலுவையில் இருந்தது.
- இந்திய மருத்துவ கவுன்சிலின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் தொடர்பான லஞ்ச புகார் வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி ஐ.எம்.குதூசியின் பெயரும் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளது. அந்த வழக்கில் சாதகமாக நடந்து கொள்ள குதூசி லஞ்சம் வழங்க பேரம் நடத்தியது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாராகிவிட்டது. அலோக் வர்மா கையெழுத்திட வேண்டியது மட்டுமே பாக்கி.
- அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.என் சுக்லா தொடர்பான முறைகேடு வழக்கும் அலோக் வர்மாவின் கையெழுத்துக்காக காத்துக் கொண்டிருந்த்து. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சிலும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்திருந்த நிலையில், அந்த கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியதாக நீதிபதி சுக்லா மீதான வழக்கில் முதல்கட்ட விசாரணை முடிந்துவிட்டது.
- இந்திய நிதி மற்றும் வருவாய்த் துறை செயலாளர் ஹஸ்முக் அதியாவுக்கு எதிராக, பாஜக தலைவர் சுப்ரமணியம் சுவாமி தொடுத்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. அதை அலோக் வர்மா மேற்பார்வையிட்டார்.
- பிரதமர் மோதியின் செயலாளர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாஸ்கர் குல்பே மீதான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கையும் அலோக் வர்மா விசாரித்து வந்தார்.
- பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனத்திற்காக அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக டெல்லியில் இடைத்தரகர் ஒருவரின் வீட்டில் பணம் வைக்கப்பட்டிருந்ததான சந்தேகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கண்டறியப்பட்டது. அந்த இடைத்தரகர் தொடர்பான வழக்கையும் சிபிஐ இயக்குநர் மேற்கொண்டிருந்தார்.
- இதைத்தவிர, சாந்தேஸ்ரா மற்றும் ஸ்டெர்லிங் பயோடெக் வழக்கு விசாரணையும் ஏறக்குறைய முடிவடையும் நிலையில் உள்ளது. இதில் சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவின் பங்கு பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

பட மூலாதாரம், CBI
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. ஆனால் அலோக் வர்மா மட்டும் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த விசாரணை வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :








