உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியது ஏன்? மன்னிப்பு கேட்டு எச்.ராஜா விளக்கம்

உயர்நீதிமன்றத்தை அவதூறான சொற்களால் விமர்சித்ததற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரினார் பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா. இதையடுத்து இது தொடர்பான வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகில் உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மேடை அமைப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியன்று காவல்துறையினருக்கும் எச். ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின்போது காவலர்கள் உயர்நீதிமன்ற ஆணையைச் சுட்டிக்காட்டி, அனுமதி மறுத்தனர். அப்போது காவல்துறையினரைக் மிகக் கடுமையாக திட்டிய எச். ராஜா, உயர்நீதிமன்றம் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைக் குறிப்பிடும் வகையில் அவதூறான சொற்களால் நீதிமன்றத்தைக் குறிப்பிட்டார்.

இந்த வாக்குவாதம் வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் வெளியானதும் செப்டம்பர் 17ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது. எச். ராஜா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

ஆனால், ஊடகங்களிடம் பேசிய எச். ராஜா அது தனது குரல் இல்லையென மறுத்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.டி. செல்வம், எம். நிர்மல்குமார் அமர்வு முன்பாக எச். ராஜா ஆஜரானார். அவர் சார்பில் பிரமாணப் பத்திரம் ஒன்றும் தாக்கல்செய்யப்பட்டது.

அந்த பிரமாணப் பத்திரத்தில், "இந்த வார்த்தைகள் மிகவும் கொந்தளிப்பான மனநிலையில் பேசப்பட்டவை. அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தேன். அந்த வீடியோவைப் பார்த்த பிறகுதான் அது தவறு என உணர்ந்தேன். இதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன்" என்று எச். ராஜா கூறியிருந்தார்.

நீதிமன்றம் என்ற இந்த அமைப்பின் கண்ணியத்தின் மீது கவலைகொண்டே இந்த வழக்கை எடுத்துக்கொண்டதாகவும் சம்பந்தப்பட்டவர் மன்னிப்புக்கேட்ட பிறகு, அவமதிப்பு வழக்கை கைவிடுவதே சரி என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :