காணாமல் போன மகன் பெற்றோரை சந்தித்த நாள் - ஒரு நெகிழ்ச்சி கதை

    • எழுதியவர், நிக்கிதா மந்தானி
    • பதவி, பிபிசி

15 வயதான ஹசன் அலி கடந்த ஜூலை மாதம், தில்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதையோ பார்த்த அவருக்கு பழைய நினைவோட்டங்கள் வரத் தொடங்கின.

வெவ்வேறு காப்பகங்களில் இருந்து வந்த 50 சிறுவர்களுடன் அவர் பேருந்தில் இருந்தார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஹசன் அவர் வீட்டிலிருந்து ஓடிவிட்டார். அப்போதில் இருந்து, இந்தத் தருணம் வரை அவருக்கு தாம் எங்கிருந்தோம் என்ற தகவல்களை யோசித்தும் நினைவுக்கு வரவில்லை.

பல இந்து கோயில்களுடன் நன்கு பழக்கமானது போல இருந்த அந்தத் தெருவில் பேருந்து செல்ல ஹசன் அமைதியாகிவிட்டார். உடனே அங்கிருந்த ஒரு இஸ்லாமிய புத்தக கடையை அடையாளம் கண்டார். அதனை பார்த்து தன் பேருந்து இருக்கையில் நெளிந்து கொண்டிருந்த அவருக்கு பழைய நினைவுகள் வந்து அலைமோதின.

உடனே தன் நண்பர் மைக்கெலின் காதில் சென்று முனுமுனுத்த ஹசன், "இங்கிருந்துதான் நான் தப்பித்து ஓடினேன். இங்கு தான் என் இஸ்லாமியப் பள்ளி (மத்ரஸா) இருந்தது" என்றார்.

தப்பியோட்டம்

ஹசன் தன் பள்ளியில் இருந்து தப்பித்து ஓடும்போது, அவருக்கு 6 வயது. "நிர்பந்தப்படுத்தி என் பெற்றோர் என்னை இஸ்லாமிய வழிப்பள்ளிக்கு அனுப்பினார்கள்."

ஆனால், தான் விளையாட முடியாதது, தோன்றியதை செய்ய முடியாமல் போனது என அங்கிருந்து தப்பியோட நினைத்துள்ளார் ஹசன்.

எப்படியோ அங்கிருந்து வெளிவந்த அவர், பள்ளி அதிகாரிகள் தன்னை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஓடிக் கொண்டே இருந்திருக்கிறார்.

இதனை தெரிந்து கொண்ட ஹசனின் பெற்றோர், பதறிப் போய் காவல்துறையிடம் சென்றனர்.

"ஏழு நாட்கள் காவல்நிலையித்தில் இருந்தோம்" என்கிறார் தினக்கூலி வேலை செய்யும் ஹசனின் தந்தை சலீம் அலி.

ஆனால், இந்தியாவில் ஒரு மாதத்தில் காணாமல் போகும் ஆயிரக்கணக்கான சிறுவர்களில் ஹசனும் ஒருவர்.

பல நாட்கள் காவல் நிலையத்திற்கு சென்றும், சுற்று வட்டார பகுதிகளில் எல்லாம் தேடியும் ஹசன் கிடைக்கவே இல்லை என்கிறார் தந்தை அலி.

இந்நிலையில், 10 கிலோ மீட்டருக்கும் மேல் ஓடிக் கொண்டிருந்த ஹசன், தில்லி எல்லையை தாண்டி குர்கான் சென்றுவிட்டார். பக்கத்து மாநிலமான ஹரியானாவில் உள்ளது குர்கான்.

அங்கு ஹசன் தனியே சுற்றி திரிந்ததை பார்த்த போலீஸ் ஒருவர், உன் பெற்றோர் எங்கே எனக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஹசன், தன் பள்ளியில் இருந்து தாம் ஓடி வந்துவிட்டதாக கூறியுள்ளார். சலீம் மற்றும் ஹமீதா என தன் பெற்றோர் பெயர்களையும் ஹசன் கூறியுள்ளார்.

ஆனால், அவர் பள்ளியோ அல்லது பெற்றோர் வசிக்கும் இடமோ ஹசனுக்கு தெரியவில்லை. காவல்துறையினராலும் அவரின் குடும்பத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த நாள், ஹசன் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.

தன் இடத்தை அடையாளம் கண்ட ஹசன்

"ஒவ்வொரு முறையும் நான் காப்பகத்தில் உள்ள பெரியவர்களிடம், 'என் அம்மா எங்கிருக்கிறார்' என்று கேட்பேன். யாரோ ஒரு பெண்ணை கை காண்பித்து 'அவர்தான் உன் அம்மா' என்று கூறுவார்கள். நான் 'இல்லை' எனக்கூறி அழத் தொடங்கி விடுவேன்" என்று பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கிறார் ஹசன்.

12 வயதில் கோவாவில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அவர் அனுப்பப்பட்டார். ஆனால், ஹசனும், அவரது இரண்டு நண்பர்கள், காப்பகத்தில் இருந்த ஊழியர்கள் அடிப்பதாக கூறி அங்கிருந்து ஓடிவிட்டனர்.

அந்த சிறுவர்களை சில நாட்களுக்கு பிறகு காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் குர்கானில் உள்ள காப்பகத்திற்கே ஹசன் திருப்பி அனுப்பப்பட்டார்.

9 ஆண்டுகளில் 3 காப்பகங்களுக்கு ஹசன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பெரும்பாலும் அங்கு வழங்கப்படும் உணவு பிடிக்காது. ஆனால், ஒரு காப்பகத்தில் இருந்த பெண் பொறுப்பாளர் ஒருவர் ஹசனை தன் சொந்த மகனை போல பார்த்துக் கொண்டுள்ளார். தன்னுடன் வாழ்ந்த மற்ற சிறுவர்களுடன் விளையாடியபடி தன் நேர்த்தை அவர் செலவழித்துக் கொண்டிருந்தார்.

""என் குடும்பத்தை தேடுவதை நிறுத்திவிட்டேன். அவர்களை பற்றி நினைக்கவே இல்லை" என்று ஹசன் தெரிவித்தார்.

ஆனால், ஜூலை 22ஆம் தேதி பழைய நினைவுகள் அனைத்தும் மீண்டும் வந்தது. 2009ஆம் ஆண்டு தான் இந்த தெருவில் இருந்துதான் தப்பித்து ஓடினேன் என்று அடையாளம் கண்டு கொண்டார் ஹசன்.

உடனே தன் பாதுகாப்பு அதிகாரியான அஷிக் அலியிடம் சென்று, இங்குதான் தன் இஸ்லாமிய பள்ளி இருந்ததாக கூறினார்.

"அந்தப் பகுதியில் இஸ்லாமியப் பள்ளி எங்கு உள்ளது என்பதை கூகுள் மேப்பில் தேட ஆரம்பித்தேன்" என்கிறார் அஷிக் அலி.

பொழுதுபோக்கு பூங்காவில் இருந்து காப்பகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த பேருந்தில் இருந்து அதிகாரி அலி, ஹசன் மற்றும் இரண்டு சிறுவர்கள் இறங்கினார்கள்.

பழைய நினைவுகள்

அந்த தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்த உடனே, பழைய நினைவுகள் அனைத்தும் தொடர்ச்சியாக அலைமோதியதாக ஹசன் தெரிவிக்கிறார். தன் பள்ளியை நோக்கி மற்றவர்களை அவர் வழிநடத்தி செல்லும் போது, மைதானத்தையும் மசூதியையும் காட்டி, இத்தனை ஆண்டுகளில் அவை எப்படி மாறிவிட்டது என்று விவரித்து கொண்டு நடந்தார்.

இஸ்லாமிய பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் ஹசனை அடையாளம் கண்டு, அவரது தாத்தாவை தொலைப்பேசியில் அழைத்து தகவல் தெரிவித்தார். ஹசனின் குரலைக் கேட்ட அவரது தாத்தா மிகுந்த உற்சாகம் அடைந்தார்.

குடும்பப் பிரச்சனை காரணமாக ஹசனின் பெற்றோரிடம் பேசுவதில்லை என்று கூறிய அவரது தாத்தா, ஹசனின் சித்தியை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஹசனின் தேர்வுகள் முடியும்வரை, பெற்றோரை தேட வேண்டாம் என அஷிக் அலி முடிவெடுத்தார்.

அதனால், தேர்வுகள் முடிந்து செப்டம்பர் 17ஆம் தேதி அந்த இடத்திற்கு மீண்டும் வந்து ஹசனின் சித்தி வீட்டை அவர்கள் கண்டுபிடித்தனர்.

"அவரால் அவர் கண்ணையே நம்பமுடியவில்லை" என்று நடந்ததை நினைவு கூர்கிறார் அலி.

பெற்றோருடன் ஹசன்

உடனே ஹசனின் சித்தி, அவரது அம்மாவின் மொபைலுக்கு அழைக்க, நீண்ட காலமாக காணாமல் போயிருந்த அவரது மகன் கிடைத்து விட்டதாக அஷிக் அலி தெரிவித்துள்ளார்.

"அவர் அமைதியாகி விட்டார். நான் மீண்டும் அதையே சொல்லி, தொலைப்பேசியை ஹசனிடம் கொடுத்தேன்" என்கிறார் அலி.

குரல் தடுமாற, கண்ணீர் நிறைந்த கண்களோடு ஹசன் தன் பெற்றோரிடம் பேசினார்.

இறுதியாக அன்று இரவு குர்கானில் உள்ள காப்பகத்திற்கு வந்த பெற்றோர், ஹசனை சந்தித்தனர்.

ஹசனை கட்டிப்பிடித்து அழுதார்கள். முதல் 15 நிமிடங்களுக்கு யாரும் யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை.

" அந்த தருணத்தில் மிகுந்த நேசத்துடன், பாதுகாப்பாக உணர்ந்தேன்" என்கிறார் ஹசன்.

அடுத்த நாள் வீட்டிற்கு சென்றபோது, ஹசனின் தாய் அவருக்கு பிடித்த சிக்கன் சமைத்திருந்தார். ஒரு மோட்டார்பைக் வாங்கித் தருவதாக ஹசனின் தந்தை கூற, மொபைல் போன் வாங்கித் தருகிறேன் என்று அக்கா கூறியுள்ளார்.

ஹசன் வீட்டில் இல்லாத நேரத்தில், தன்னுடன் பிறந்த 4 பேரில், பெரிய அக்கா ஒருவர் இறந்து போயிருந்தார்.

இந்த ஆண்டு பள்ளி முடியும்வரை, அதாவது இந்தாண்டு இறுதிவரை, ஹசன் காப்பகத்திலேயே இருப்பார். அவரது தாய் தன் மகனுடன் இருக்க ஆவலாக இருந்தார். ஆனால், அலியுடன் பேசிய பிறகு, காப்பகத்தில் ஹசன் இருப்பது அவரின் நல்லதிற்காகதான் என்று தந்தை நம்புகிறார்.

"என் நண்பர்களிடம் இருந்து பிரிய போகிறேன் என்பது சோகமாக உள்ளது. ஆனால், நான் வீட்டிற்கு செல்ல வேண்டும். அதைத்தவிர என்னால் வேறு எதையும் தற்போது நினைக்க முடியவில்லை" என்று ஹசன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :