"விஜய் அரசியலுக்கு வந்தால் சகோதரனாக வரவேற்பேன் - கமல்ஹாசன்"
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி - "விஜய் அரசியலுக்கு வந்தால் சகோதரனாக வரவேற்பேன்"

பட மூலாதாரம், Twitter
நடிகர் விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும். ரசிகர்களை தொண்டர்களாக மாற்றலாமே. லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்பது நல்ல விஷயம்தான். ஊழலை ஒழிப்பேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு வந்தால் சகோதரனாக நடிகர் விஜய்யை வரவேற்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்ததற்காக நன்றியா சொல்ல முடியும்?. படிப்படியாக விலையை ஏற்றிவிட்டு குறைவாக குறைப்பதற்கு பெயர் குறைப்பது இல்லை. ஆனால் விலை இன்னும் ஏறிக்கொண்டுதான் இருக்கிறது.
பெட்ரோல், டீசலை பயன்படுத்தும் அனைவருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத விலையேற்றமாகும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு யாரிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது மக்களிடம்தான் பேச வேண்டும். எங்கோ ஒரு அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு முடிவு செய்தால் தமிழகத்திற்கான முன்னேற்றமாக இருக்காது என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "மத்திய அரசுக்கு விஎச்பி கெடு"

பட மூலாதாரம், Twitter
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக இந்தாண்டு இறுதிக்குள் அவசர சட்டம் இயற்ற வேண்டுமென்று மத்திய அரசுக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கெடு விதித்துள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாங்களே அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்வோம் என்று அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
நரேந்திர மோதி தலைமையிலான அரசு ராம பக்தர்களின் அரசுதான். எனவே நாடு முழுவதுமுள்ள இந்துக்களின் உணர்வை மத்திய அரசு புரிந்துகொள்ளுமென்று நம்புவதாகவும், கடந்த 1989ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக பாஜகவின் தேசிய குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதை அக்கட்சி நினைவில் கொள்ளவேண்டுமென்றும் விஎச்பி அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி - "பிரதமாகத் தயார்"

பட மூலாதாரம், காப்புரிமைNURPHOTO
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று, கூட்டணி கட்சிகள் விரும்பும்பட்சத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் பிரச்சாரங்கள் ஏற்கனவே சூடு பிடித்துள்ளன. இந்நிலையில், ராஜஸ்தான், மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மாயாவதியின் முடிவு காங்கிரஸின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும், ஆளுங்கட்சியை வீழ்த்த பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது என்பது கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளதாகவும், அதே போன்றதொரு நிலை பாஜகவுக்கு எதிராக ஏற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்து தமிழ் - "வடகிழக்கு பருவமழை 8-ம் தேதி தொடக்கம்"

பட மூலாதாரம், NURPHOTO
கிழக்கு திசை காற்றால் தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடக பகுதிகளில் வரும் 8-ம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 40 முதல் 50 கிமீ வேகத்துக்கு காற்று வீசக் கூடும். இது புயலாக மாறும்போது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும். அதை நோக்கி வலுவான ஈரப்பதக் காற்று வீசும்போதுதான், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதக சூழல் ஏற்படும். அந்த காற்று மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மோதும்போது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக மாறும்போது மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி யுள்ள நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யலாம்.
இயல்பைவிட இந்த ஆண்டில் 12 சதவீதம் அதிக மழை இருக்கும் என்று எதிர் பார்க்கிறோம். தமிழகம், புதுச்சேரியில் 3 மாதங்களில் 50 செமீ வரை மழை இருக்கலாம் என்பது எங்கள் கணிப்பு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












