ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முதல் முறை துணை மேலாளர் ஆகும் பார்வையற்றவர்

அரசுத் துறையை சேர்ந்த ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக துணை மேலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் கோவையை சேர்ந்த ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி.
21 வயது இளைஞரான இவர் மத்திய அரசின் போட்டித்தேர்வில் லட்சக்கணக்கான போட்டியாளர்களுடன் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்த கருப்புசாமி - திலகவதி தம்பதியரின் மகன் ராம்குமார். மிகவும் ஏழ்மையான குடும்பம்.
சிறு வயதிலேயே இரு கண்களிலும் பார்வை இழந்த ராம்குமார் பிரெய்லி புத்தகங்களை கொண்டே அனைத்து பாடங்களையும் கற்று பள்ளிப்படிப்பை முடித்தார்.
பள்ளிப்படிப்பை முடித்த கையோடு இளநிலை பட்டப்படிப்பை முடித்து விட்டு அடுத்த ஒரே ஆண்டில் மத்திய அரசின் போட்டித் தேர்வை எதிர்கொண்டு அதிலும் வெற்றி பெற்றுள்ளார்.
சாதாரண மாணவர்களும் போட்டி தேர்வுகளை எழுதி வெற்றிபெற சில ஆண்டுகள் தடுமாறும் சூழ்நிலையில் மாற்றுத்திறனாளியான ராம்குமாருக்கு இந்த வெற்றி எப்படி சாத்தியமானது.. பிபிசி தமிழிடம் அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
நான் பனிரெண்டாம் வகுப்பு வரை கோவை காளப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் தமிழில் படித்தேன். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கோவை அரசு கலைக்கல்லூரியில் பி. காம் சேர்ந்து பட்டம் முடித்தேன்.


எனக்கு கல்லூரியின் படிக்கும்போதே போட்டித்தேர்வுகளில் மிகவும் ஆர்வம். அதனால் பட்டப்படிப்பை முடித்த உடனேயே போட்டித்தேர்வுக்கு தயாரானேன். அதனுடன் எம் காம் முதுகலை படிப்பையும் தொடர்ந்தேன்.
காலை முதல் பகல் வரை எம்.காம். வகுப்புகளை முடித்துவிட்டு அதற்கு மேல் போட்டி தேர்விற்கான பாடங்களை படிப்பேன்.
ஒரு சில மாதங்களிலேயே மாநில மற்றும் மத்திய அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஆரம்பித்தேன். அப்போது முதல் நிலைத் தேர்வில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இதற்கிடையே கோவையில் தேசிய பார்வையற்றோர் இணையம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதை அறிந்து அதில் இணைந்தேன்.
இதற்கிடையே எம்.காம். படிப்பும் சேர்ந்திருந்ததால் போட்டி தேர்வுக்கு அதிக கவனம் செலுத்த முடியவில்லை.
எனவே எம்.காம். படிப்பை நிறுத்திவிட்டு முழுநேரமும் போட்டி தேர்வுக்கு பாடங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அம்பேத்கர் மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது.
வங்கித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் பிரெய்லி முறையில் இல்லை என்பதால் மையத்தில் பாடக்குறிப்புகளை அதிகமாக ஒலி வடிவில் மாற்றிக் கொடுத்தனர்.
தவிர கணினியில் அக்சசிபிளிட்டி சாஃப்ட்வேர் எனப்படும் திரைவாசிப்பான் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் அதிகம் படித்து வந்தேன்.
இதற்கிடையே வீட்டிற்கு சென்றால் ஆன்ட்ராய்டு மொபைலுக்கு ஒலி வடிவிலான பாடக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும்.

வடிவங்களை உணரும் விதமாக பாடம் வடிவமைக்கப்பட்டது. வட்டம் என்றால் அதற்கான வடிவம் மேக்னட் போர்டு பொருத்தப்பட்டு அதை தொடு உணர்வில் அறியும் விதமாக பயிற்சியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.
இதுபோன்ற பயிற்சிகள் தேர்வை எதிர்கொள்வதற்கு மிகவும் உதவியாக இருந்தன. இளநிலை படிப்பை முடித்து சரியாக ஒரு ஆண்டில் என்னால் போட்டி தேர்வில் வெற்றியை எட்ட முடிந்தது. 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் போட்டி தேர்வுக்கான பயிற்சியை ஆரம்பித்தேன். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மத்திய அரசின் போட்டித்தேர்வை எதிர்கொண்டு முதல் நிலை மற்றும் இறுதித் தேர்வில் வெற்றி பெற்றேன்.
அதை தொடர்ந்து நேர்முகத்தேர்வு மற்றும் குழு கலந்துரையாடலுக்கு கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி மும்பையிலுள்ள இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
"நாடு முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய தேர்வில் 78 பேர் நேர்முகத் தேர்விற்கு தேர்வாகியிருந்தனர்.
அதில் நான்கு பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள். அதில் நான் மட்டுமே பார்வை குறைபாடு உடையவன். இறுதியாக நான் உள்பட 25 பேர் மத்திய அரசின் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தில் துணை மேலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டோம்," என்கிறார் ராம்குமார்.


அந்த 25 பேரில் நான் ஒருவன் மட்டுமே மாற்றுத்திறனாளி. வரும் அக்டோபர் 3 ஆம் தேதி மருத்துவ சோதனை முடிந்தவுடன் அக்டோபர் 4 ஆம் தேதி பயிற்சி துவங்குகிறது. 45 நாட்கள் பயிற்சி முடிந்தவுடன் பணியில் சேர உள்ளேன். மத்திய மாநில அரசில் நிறைய போட்டித் தேர்வுகள் உள்ளன.
அதில் பணியிடங்களின் எண்ணிக்கையை பார்க்காமல் என்ன பணி என்பதை தேர்வு செய்து படிக்க வேண்டும். நமக்கு போட்டியாக எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை பார்க்காமல் நமது குறிக்கோளை நோக்கிப் படிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் இதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் ராம்குமார்.


ராம்குமார் மத்திய அரசின் பொது காப்பீட்டு நிறுவனத்தில் துணை மேலாளராக தேர்வானது குறித்து அவரது தாயார் பிபிசி தமிழிடம் கூறியபோது, "ராம் இப்படி ஒரு வேலையில் செலக்ட் ஆனது மிகவும் மகிழ்ச்சி. சின்ன வயதில் இருந்தே படிப்பில் மிகவும் ஆர்வமாக இருப்பான். எல்லா நேரமும் சுறுசுறுப்பாக வீட்டில் படித்துக்கொண்டே இருப்பான். நாங்கள் ஏழைகள். எங்கள் மகன் இப்படி ஒரு வேலை வாங்கியது மகிழ்ச்சி," என்று கூறுகிறார் ராம்குமாரின் தாய் திலகவதி.

"டாக்டர் அம்பேத்கர் மையம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக போட்டித்தேர்வு பயிற்சிகளை வழங்கி வருகிறது. ராம்குமார் ஸ்மார்ட் போனை லாவகமாக கையாளும் திறமை உள்ளவர். அந்த வகையில் அவரது போனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒலி வடிவ பாடக்குறிப்புகளை ராம் சரியாக பயன்படுத்திக்கொண்டார். " என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய ராம்குமாரின் போட்டித் தேர்வு பயிற்சியாளர் கணேஷ்,.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












