'515' கணேசன் - நெகிழ வைக்கும் சாதனைக்காக கிடைத்த டாக்டர் பட்டம்
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: '515' கணேசன் - நெகிழ வைக்கும் சாதனைக்காக கிடைத்த டாக்டர் பட்டம்

பட மூலாதாரம், இந்து தமிழ்
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களை தனது வாகனத்தில் ஏற்றி உதவி புரிந்துள்ள 65 வயது முதியவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது பெங்களூருவில் உள்ள பாரத் விர்ச்சுவல் பல்கலைக்கழகம் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் எஸ்.கணேசன்(65). 8-ம் வகுப்பு வரை படித்த இவர், பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குடி பகுதியில் வாடகைக் கார்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும்படியாகவே இருந்தன. அவற்றிலும் இறந்தவர்களின் சடலங்களை ஏற்றிச் செல்வதில்லை.
இதனால், ரூ.17 ஆயிரத்துக்கு ஒரு காரை விலைக்கு வாங்கினார் கணேசன். அந்தக் காரின் பதிவு எண் 515. சடலங்களை ஏற்றிச் செல்ல முடியாமல் தவித்த ஏழை எளியோருக்காக தனது காரை கட்டணம் எதுவுமில்லாமல் பயன்படுத்த முன்வந்தார் கணேசன். மேலும், அநாதை சடலங்களை தானே தூக்கிச் சுமந்து காரில் ஏற்றி உதவியுள்ளார். இதையடுத்து '515' கணேசன் என்றே மக்களால் அழைக்கப்பட்டார் கணேசன்.
இதுவரை 5,100-க்கும் மேற் பட்ட சடலங்களை ஏற்றி உதவி புரிந்துள்ளார். அதுமட்டுமல்ல, அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண பொருட்களைச் சேகரித்த கணேசன், அவற்றை பாலக்காடு ஆட்சியரிடம் ஆக.29-ம் தேதி ஒப்படைத்தார்.
இவரது சேவையைப் பாராட்டி, பெங்களூருவில் உள்ள பாரத் விர்ச்சுவல் பல்கலைக்கழகம் செப்.22-ம் தேதி டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ஸ்டெர்லைட் சமர்பித்த 45 ஆயிரம் அதரவு மனு'

பட மூலாதாரம், Getty Images
மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என தங்களுக்கு ஆதரவாக 45,000 தூத்துக்குடி மக்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம். இந்த 45 ஆயிரம் மனுக்களை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த மூன்று நபர் விசாரணௌ குழுவிடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அளித்ததாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.


பட மூலாதாரம், இந்து தமிழ்

தினத்தந்தி: 'குஜராத் தொழில் அதிபர் நைஜீரியாவுக்கு தப்பி ஓட்டமா?'
ரூ.5 ஆயிரம் வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்ட குஜராத் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா, நைஜீரியாவுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"குஜராத்தின் வதோதராவை மையமாக கொண்டு இயங்கி வரும் 'ஸ்டெர்லிங் பயோடெக்' நிறுவனத்தின் உரிமையாளரான நிதின் சந்தேசரா பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களையும், பினாமி பெயரில் நிறுவனங்களையும் பயன்படுத்தி உள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களான நிதின் சந்தேசரா, சகோதரர் சேத்தன், அண்ணி தீப்திபென் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. தற்போது வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியிருக்கும் இவர்களை கைது செய்யவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


தினமணி:மனித உரிமை ஆணையத்தில் ஆஜரான மாணவி சோபியா
திருநெல்வேலியில் மனித உரிமை ஆணையம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில், பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியா, அவரது தந்தை சாமி ஆகியோர் ஆஜராகினர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Facebook
"பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த மாதம் 3ஆம் தேதி தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தபோது, மாணவி சோபியா பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் சோபியா கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சோபியா கைது செய்யப்பட்டபோது, மனித உரிமை மீறல் நடந்ததாகக் கூறி அவரது தந்தை சாமி, மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மனு தொடர்பான விசாரணை திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார். நீதிபதி முன்பு சோபியா, அவரது தந்தை சாமி ஆகியோர் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
சோபியா கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபோது விமான நிலையம் மற்றும் காவல் நிலையத்தில் அவருக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அளித்தோம். அந்தப் புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், சோபியா அவரது தந்தை ஆஜராகி விளக்கம் அளித்தனர். வழக்கு விசாரணை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சோபியா வெளிநாட்டில் சென்று படிக்க எந்தவித இடைஞ்சலும் செய்ய மாட்டோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியை கைது செய்து சிறையிலடைத்தது தவறு என நாங்கள் கூறி வருகிறோம். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது அளித்த புகாரின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நாங்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்று சோபியாவின் வழக்கறிஞர் அதிசயகுமார் கூறியதாகவும் விவரிக்கிறது அந்த செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












