விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் - நெகிழ்ச்சி சம்பவம்
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: 'விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்'
சேலம் மாவட்ட ஓமலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர், நோயாளியின் மோதிரத்தை வைத்து அது தன் கணவர் என அறிந்தார். அவர் இறந்ததை அறிந்து உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"சேலம் மாவட்டம் மேச்சேரி சீராமணியூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன், தனது மோட்டார் சைக்கிளில் புளியம்பட்டிக்கு சென்றுவிட்டு, மேச்சேரிக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பச்சனம்பட்டி அருகே வந்த போது சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்போனில் பேசி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே நேற்று வழக்கம் போல அவரது மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்திருந்தார்.
சீனிவாசனுக்கு சிகிச்சை அளித்த குழுவில் அவரது மனைவி சிவகாமியும் ஒருவர். விபத்தில் சிக்கியவரின் உடலில் இருந்த ரத்த கறையை அகற்றும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது விபத்தில் சிக்கியவரின் விரலில் தி.மு.க. சின்னம் பொறிக்கப்பட்ட மோதிரம் இருப்பதை பார்த்து சிவகாமி திடுக்கிட்டார். அது தன்னுடைய கணவரது மோதிரம் போல் இருக்கிறதே என சந்தேகம் அடைந்தார்.
பின்னர் தலையில் பலத்த காயம் அடைந்து இருந்ததால் அவரது தலையில் சுற்றி இருந்த துணிகளை அகற்றி முகத்தை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். விபத்தில் சிக்கியது தனது கணவர் சீனிவாசன் என்பதை அறிந்து கதறி அழுதார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள், விபத்தில் சிக்கிய சீனிவாசனை பரிசோதித்த போது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கணவரது உடலை கட்டிப்பிடித்து அவர் கதறி அழுதார். இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


பட மூலாதாரம், இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ஆழ்துளை கிணறில் விழுந்த குழந்தை மீட்பு'
நாகை மாவட்டம் புதுப்பள்ளியில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த இரண்டு வயது குழந்தை மீட்கப்பட்டதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
ஞாயிற்றுகிழமை மதியம் 1.30 மணிக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிய பெற்றோர், குழந்தையை குழியில் விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தை எத்தனை அடியில் சிக்கி உள்ளது என்பதை அறியாத பெற்றோர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பதினைந்து பேர் கொண்ட மீட்புக் குழு 4 மணி அளவில் குழந்தையை மீட்டுள்ளனர் என விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


இந்து தமிழ்: 'மலேசியாவில் மணல் இறக்குமதி'
மலேசியாவில் இருந்து தனியார் நிறுவனம் மூலம் சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு 56,750 டன் ஆற்று மணல் வந்தடைந்தாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுளளது.

பட மூலாதாரம், Getty Images
"மணல் தட்டுப்பாட்டைப் போக்கும் விதமாக, வெளிநாட்டில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலம் 5 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு 54 டன் மணல் வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு மலேசியாவில் இருந்து 56,750 ஆற்று மணல் ஏற்றிக் கொண்டு சரக்குக் கப்பல் கடந்த 21-ம் தேதி வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டது. கடல் சீற்றமாக இருந்ததால் 2 நாட்கள் தாமதமாக நேற்று எண்ணூர் துறைமுகம் வந்தடைந்தது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'திருவாரூரில் அழகிரி போட்டி?'
ஆதரவாளர்கள் விரும்பினால் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ்.

பட மூலாதாரம், Getty Images
"தனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை. ஆதரவாளர்கள் விரும்பினால் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிட்டால் அனைவருமே எனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.
பாஜக, என்னை இயக்குவதாகக் கூறுவது வெறும் வதந்தியே. திமுகவில் இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். கட்சியில் இதுகுறித்து எதுவும் நேரடியாகப் பேசவில்லை. கட்சியில் இணைத்தால், கட்சியைப் பலப்படுத்த என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன்" என்று திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












