ஸ்ட்ராபெரியில் குண்டூசி: மக்கள் அதிர்ச்சி, விற்பனையான பழங்களை திரும்பப் பெற முடிவு
கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
ஸ்ட்ராபெரியில் குண்டூசி

பட மூலாதாரம், EPA
நியூசிலாந்து பல்பொருள் அங்காடியில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெரிகளில் குண்டூசி இருந்தது, வாடிக்கையாளர்களை அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்ட்ராபெரிகள் இவை. முன்னதாக இந்த ஸ்ட்ராபெரிகளில் குண்டூசி இருப்பதாக ஆஸ்திரேலியாவிலும் நூற்றுகணக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஸ்ட்ராபெரிகளை விற்ற நியூசிலாந்து ஆக்லாந்து சூப்பர் மார்கெட், மக்கள் அச்சப்பட்டால் தங்களிடம் வாங்கிய ஸ்ட்ராபெரி பேக்குகளை திரும்ப அளித்து முழு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

மீட்புக் கப்பலின் உரிமம் ரத்து

பட மூலாதாரம், AFP
மத்திய தரைக் கடலில் இயங்கி வந்த ஒரு மீட்புக் கப்பலின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால், அந்தக் கப்பலின் எதிர்கால இயக்கம் கேள்விக்குறியாகி உள்ளது. லிபியாவிலிருந்து ஐரோப்பா நோக்கி வரும் குடியேறிகள் இந்தக் கப்பலைதான் பெரிதும் நம்பி இருந்தார்கள். இந்த கப்பலை இயக்கி வரும் அறக்கட்டளை, இத்தாலி அரசாங்கம் மீது குற்றஞ்சாட்டி உள்ளது. இத்தாலி அளித்த அழுத்தம் காரணமாகவே இந்த கப்பலின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக அந்த அறக்கட்டளை கூறுகிறது.


ஐ.எஸ்- இல் பிரிட்டன் மருந்தாளுனர்

பட மூலாதாரம், Getty Images
ஐ.எஸ் அமைப்பில் இணைந்ததாக சந்தேகிக்கப்படும் பிரிட்டன் மருந்தாளுனர் சிரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயர் அன்வர் மியா. சிரியா கிழக்கு மாகாணத்தை குர்தீஷ் படைகள் கடந்த மாதம் கைப்பற்றிய போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க சிறப்பு படைகள் பாதுகாப்பில் வடக்கு சிரியாவில் உள்ள சிறையில் உள்ளார். அவர் சிரியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கி இருக்கும் தகவல்களும் வெளியாகி உள்ளன.

மாலத்தீவு அதிபர்

பட மூலாதாரம், Reuters
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றதாக கூறி உள்ளார் எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் இப்ராஹீம் முஹம்மது சோலீப். இப்ராஹீம் முன்னணி வகிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தாலும், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் அந்நாட்டு தேர்தல் ஆணையத்திடமிருந்து வரவில்லை.இப்ராஹீம் இந்தியாவுக்கு சாதகமானவர் என்று கூறப்படுகிறது. எதிர்ப்பு குரல்களை மோசமாக ஒடுக்கியதாக தற்போதைய அதிபர் அப்துல்லா மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் சீனாவுக்கு ஆதரவானவர் என்றும் கூறப்படுகிறது.

இரான் குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா

பட மூலாதாரம், AFP
இரானில் ராணுவ அணிவகுப்பில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள, இரான் 'தன்னை தானே முகக்கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்' என ஐ.நாவுக்கான அமெரிக்கத்தூதர் வலியுறுத்தியுள்ளார். இரான் அதிபர் ஹசன் ருஹானி, 'தன் நாட்டு மக்களை நீண்ட காலம் ஒடுக்கி வைத்துள்ளதாக' தூதர் நிக்கி ஹேலி தெரிவித்தார். அஹ்வாசில் ராணுவ அணிவகுப்பின் போது நடைபெற்ற தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு பெற்ற நாடுகள்தான் காரணம் என அதிபர் ஹசன் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிக்கி ஹேலி இவ்வாறு கூறியுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












