ரஃபேல் விவகாரம் - ’ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்தியா பரிந்துரைத்தது’
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: ரஃபேல் விவகாரம் - இந்தியாவின் பரிந்துரை ரிலையன்ஸ்

பட மூலாதாரம், Getty Images
ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டாளியாக இருக்க வேண்டும் என இந்திய அரசு பரிந்துரைத்தது என்று ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஒல்லாந்த் தெரிவித்தார் என தினமணி நாளிதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
ஒல்லாந்த் கூறியதாக பிரான்ஸ் நாளிதழ்களில் வெளியான செய்தியில், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தை போர் விமான உதிரி பாகங்களை தயாரிக்க டஸால்ட் நிறுவனத்தை கூட்டாளியாக்குமாறு இந்திய அரசு பரிந்துரைத்தது. எங்களுக்கு வேறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எங்களுக்கு அளிக்கப்பட்ட நிறுவனத்தைதான் நாங்கள் தேர்வு செய்ய முடியும். எனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தை விமான தயாரிப்பில் பங்கேற்க செய்தோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஃபேல் போர் விமான தயாரிப்பில் குறிப்பிட்ட ஒரு இந்திய நிறுவனத்தை டஸால்ட் நிறுவனத்துடன் கூட்டாளியாக சேர்த்துக் கொள்ளுமாறு மத்திய அரசு வற்புறுத்தவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக மேலும் இந்நாளிதழ் செய்தி கூறுகிறது.

தினமலர்: நர்சிங் படிப்புக்கும் 'நீட்' அவசியம் - புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி

பட மூலாதாரம், Getty Images
நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு அவசியமானது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தரமான நர்ஸ்களை உருவாக்க நீட் தேர்வு தேவை. ஆனால், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் பழனிசாமி குறித்து நடிகர் கருணாஸ் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்) : குறைந்த மதிப்பெண் பெற்று வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வதா?
வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் பயிலும் மாணவர்கள் எடுக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் எவ்வளவு என்பது குறித்து தெரிவிக்க இந்திய மருத்துவ கழகத்தக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் 75ல் இருந்து 80 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் பயில வேண்டும். இல்லையென்றால் பணம் இருக்கும் மாணவர்களின் பெற்றோர், அவர்களை வெளிநாட்டில் படிக்க வைக்க தரம் குறைந்த மருத்துவர்களை நாம் பெற நேரிடும் என்று நீதிபதி கூறியதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












