ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு: 2 பேருக்கு மரண தண்டனை

பட மூலாதாரம், Getty Images
43 பேரை பலி கொண்ட ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று திங்கள்கிழமை இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்.
ஹைதராபாத்தில் ஆகஸ்ட் 25, 2007ஆம் ஆண்டு கோகுல் சாட் மற்றும் லும்பினி பூங்கா ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் அனிக் சையீத் மற்றும் அக்பர் இஸ்மாயில் சௌதாரி ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து இரண்டாவது பெருநகர அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாரிக் அன்ஜும் என்ற மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இரட்டை குண்டுவெடிப்பில் 43 பேர் உயிரிழந்தது மட்டுமில்லாமல் மேலும் 63 பேர் காயமைடைந்தனர். இச்சம்பவம் ஹைதராபாத் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், AFP
சம்பவம் நடந்து 11 ஆண்டுகள் ஆன நிலையில், எட்டு பேரில் அனிக் சையீத் மற்றும் அக்பர் இஸ்மாயில் சௌதாரிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட பரூக் ஷர்ஃபுதின் மற்றும் சாதிக் இஷ்ரத் ஆகியோர் ஏற்கனவே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
மற்ற குற்றவாளிகளுக்கு அடைக்கலம் வழங்கியதற்காக தாரிக் அன்ஜுமுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரியாஸ் பட்கல், இக்பல் பட்கல் மற்றும் அமிர் ராசா ஆகிய மூன்று பேரும் தலைமறவாக உள்ளனர்.
இந்த வழக்கினை விசாரிக்க சேர்ளபள்ளி மத்திய சிறையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 302 (மரணத்தை ஏற்படுத்துவது), 307 (கொலை முயற்சி), 120 பி (சதித்திட்டம் தீட்டுவது), 121 ஏ (துரோகம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












