"அந்த செயலை ஒரு மனிதன் செய்திருக்க முடியாது, மிருகம்தான் செய்திருக்க வேண்டும்"

கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, சிதைக்கப்பட்டு உயிருக்கு போராடும் பெண்
    • எழுதியவர், ஜைதீப் ஹார்டிகர்
    • பதவி, நாக்பூர்

நாக்பூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி அந்த இளம் பெண் கொண்டுவரப்பட்டபோது அவர் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

ஏனெனில், கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அந்த இளம்பெண்ணின் மண்டையும், முகமும் கல்லால் அடிக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருந்ததுடன், அவரது இடது கண்விழி பிடுங்கப்பட்டிருந்தது; வாய் கிழிக்கப்பட்டிருந்தது; உடல் முழுவதும் காயமடைந்திருந்த அவர் அதிகளவு ரத்தத்தையும் இழந்திருந்தார்.

"அந்த செயலை ஒரு மனிதன் செய்திருக்க முடியாது, மிருகம்தான் செய்திருக்க வேண்டும்" என்று தனக்கு தோன்றியதாக கூறுகிறார் இளம்பெண் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் தலைவர் ராஜேஷ் அட்டால். "அவர் வலியிலும் வேதனையிலும் அழுதார்; அவரது சுவாசத்தின் அளவு குறைவாக இருந்தது; அவரது உச்சந்தலையும், வாயும் மோசமாக சிதைக்கப்பட்டிருந்தது" என்று அவர் கூறினார்.

26 வயதாகும் அந்த இளம்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, இரண்டரை கிலோ எடையுள்ள கல்லால் தாக்கப்பட்டு சிதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நாக்பூரிலிருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நிலக்கரி சுரங்க நிறுவனமான வெஸ்டர்ன் கோல்பீல்டு என்ற நிறுவனத்தில் அந்த பெண் பணிபுரிந்து வந்தார். அந்த நிறுவனத்திலிருந்து வெகு அருகில் இருக்கும் எடை மேடையில் அப்போது பத்துக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் நின்றுக்கொண்டிருந்தன.

அங்குள்ள கூரையால் வேயப்பட்ட கழிவறையில் மதியம் சுமார் இரண்டு மணியளவில் இந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதுடன், அவரை கொலை செய்வதற்கும் முயற்சி செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, சிதைக்கப்பட்டு உயிருக்கு போராடும் பெண்

"மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவரது ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தது. அவர் இன்னும் சிறிது நேரம் தாமதமாக அனுமதிக்கப்பட்டிருந்தால் உயிரிழந்திருப்பார். அடுத்த சில மணிநேரங்களில் மருத்துவர்கள் குழு அளித்த சிகிச்சையின் காரணமாக அன்றைய இரவு அவரது உடல் நிலை கட்டுப்பாட்டிற்குள் வந்தது."

மறுநாள், அதாவது ஆகஸ்டு 15 ஆம் தேதி நாட்டின் 72வது சுதந்திரத்தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லியிலுள்ள செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்த அதே நேரத்தில், பல்வேறு துறையை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு அந்த இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்கான எட்டு மணிநேர அறுவை சிகிச்சையை தொடங்கியிருந்தனர். அதன் பிறகு, பலமுறை இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் அந்த இளம் பெண்ணுக்கு செய்யப்பட்டது.

"அவரது மண்டையில் பலதரப்பட்ட முறிவுகள் ஏற்பட்டிருந்தன. ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அவரது மூளையின் உட்பகுதியில் காயம் எதுவும் ஏற்படவில்லை; அவரது பற்கள் உடைக்கப்பட்டிருந்ததுடன், வாயும் முழுவதுமாக சிதைக்கப்பட்டிருந்தது" என்று அட்டால் கூறுகிறார்.

பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைமுயற்சி

"அவர் அளிக்கும் வாக்குமூலம் எங்களது விசாரணைக்கு மிகவும் அவசியமானது" என்று அந்த சம்பவம் நடந்த உம்ரேட் பகுதியின் துணை காவல் ஆய்வாளரான பூர்ணிமா தவாரே கூறுகிறார்.

இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் மம்லேஷ் சக்கரவர்த்தி (24), சந்தோஷ் மாலி (40) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி), 376D (பாலியல் வன்புணர்வு) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, சிதைக்கப்பட்டு உயிருக்கு போராடும் பெண்

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த அவர்கள் இருவரும் அந்த நிலக்கரி சுரங்கத்திலிருந்து நிலக்கரியை கனரக வாகனங்களில் எடுத்துச் செல்ல வந்திருந்தனர். அவர்கள் இருவரும் தாங்கள் ஓட்டிவந்த கனரக வாகனத்துடன் அடுத்த அரை மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்படும் இரண்டு பேரையுமே கைது செய்துள்ளதாக காவல்துறை கூறுகிறது. தற்போது காவல்துறையின் காவல் முடிவடைந்து இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் இந்த இரண்டு பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்புள்ளதா, இல்லையா என்பது குறித்து அந்த இளம்பெண் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்தால்தான் தெரியவரும்.

"எனது மகள் வாய்திறந்து பேசி, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவார்" என்று அந்த இளம்பெண்ணின் தாய் கண்ணில் நீர் வழிய பிபிசியிடம் கூறினார். அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத அவர், "எனது மகளின் பணியிடத்தில் நிலவும் கடுமையான சூழ்நிலையை எண்ணி நான் எப்போதும் வருத்தப்படுவேன். ஆனால், பிரச்சனைகளை கடந்து தனது சொந்த காலிலேயே நின்று, பொருளாதாரரீதியாக தனித்து இயங்குவதற்கு என் மகள் விரும்பினார்" என்று அவர் மேலும் கூறினார்.

கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, சிதைக்கப்பட்டு உயிருக்கு போராடும் பெண்

அந்த இளம்பெண்ணின் பெற்றோரும், மூத்த சகோதரரும் சத்தீஸ்கரில் வசித்து வருகின்றனர். சம்பவம் நடந்த உம்ரேட் பகுதியில் இருந்த இவர்களது குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தை நிலக்கரி நிறுவனத்துக்கு அளித்ததால், அந்நிறுவனம் இவருக்கு எழுத்தர் பணியை வழங்கியிருந்தது.

பாதிக்கப்பட்ட இந்த இளம்பெண் உட்பட இந்த நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் எட்டு பெண்கள் வெவ்வேறு பிரிவுகளில் பணியிலமர்த்தப்பட்டுள்ளதாக கூறுகிறார் அந்நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி ரவீந்திரா. பாதிக்கப்பட்ட இளம் பெண் சுரங்கத்தின் உணவுக் கூட கட்டடத்திலிருந்து 500 மீட்டர்கள் தொலைவிலுள்ள கனரக வாகனங்கள் எடை மேடையில் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது.

காட்டிற்கு நடுவே இருக்கும் இந்த சுரங்கம் கடந்த 2015ஆம் ஆண்டு செயல்பட தொடங்கியது. சுமார் 756 ஹெக்டேர்கள் பரந்து விரிந்திருக்கும் இந்த சுரங்கத்தின் ஆயுட்காலம் 11 ஆண்டுகள் என்று கூறுகிறார் ரவீந்திரா.

சம்பவ தினத்தன்று, மதியம் சுமார் 1:50 மணியளவில் மதிய உணவை அருந்திவிட்டு, எடை மேடையிலிருந்து அருகிலுள்ள கூரையால் வேயப்பட்ட கழிவறைக்குள் அந்த இளம்பெண் செல்வதையும், அதற்கடுத்த சில நிமிடங்களில் தற்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உள்ளே செல்வதையும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் காட்டுகின்றன. 17 நிமிடங்களுக்கு பிறகு குற்றச்சாட்டப்பட்டவர் வெளியே வருவதையும், பாதிக்கப்பட்ட பெண் வெளியேறாததும் தெரிவதாக பிபிசியிடம் பேசிய காவல்துறை ஆய்வாளர் பிரகாஷ் கூறுகிறார்.

கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, சிதைக்கப்பட்டு உயிருக்கு போராடும் பெண்

சாலையிலிருந்து கழிவறையை காணும் இடைவெளியை அங்கு நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனம் மறைத்ததால், வேறு யாருக்கும் தெரியவில்லை. அந்த கழிவறையிலிருந்து கேட்ட அழுகுரலை தொடர்ந்து உள்ளே சென்ற வயதான கனரக வாகன ஓட்டுநர் அந்த இளம்பெண்ணை நிறைய இரத்தம் கொட்டும் நிலையில் கண்டார். பின்னர் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் உள்பட பலர் விரைந்து சென்று சுரகத்திலுள்ள மருந்தகத்தில் சிகிச்சை அளித்துவிட்டு நாக்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உம்ரேட் பகுதியில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நீதி கோரியும், அவரது பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிய சுரங்க நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் வலியுறுத்தி 10,000 மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :