இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது உண்மையா?

இந்தியா
    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக இந்திய மக்கள் நினைக்கின்றனர். பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் ஒவ்வொரு வாரமும் அதிகமாகி வருவது மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மத்திய இந்தியாவில் ஏழு வயதான ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால், மக்கள் வீதிக்கு வந்து போராடினர்.

உண்மையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதா? அல்லது நிறைய சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வருகின்றனவா?

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாகத் தெரிவதற்கு, தொலைக்காட்சி மற்றும் மொபைல் செய்தி ஊடகங்களில் பாலியல் குற்றம் பற்றிய செய்திகள் அதிகளவில் வெளிவருவதும் ஒரு காரணம்.

இந்தியாவில், பாலியல் பலாத்காரம் என்றால் என்ன என்பது பற்றிய சட்ட வரையறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவரின் புகாரின் போலீஸார் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் கடந்த வருடம், 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாகக் கூறப்பட்டவர்கள் மீதான விசாரணை ஏப்ரல் மாதம் தொடங்கிய நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பரந்த விவாதத்திற்கு இது வழி வகுத்தது.

காஷ்மீர் பாலியல் குற்றங்கள் குறித்தும், வெளிச்சத்திற்கு வந்துள்ள மற்ற பாலியல் குற்றங்கள் குறித்தும் 'கவலையடைந்துள்ளதாக' இந்தியாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.

TV satellite vans parked in street in Delhi
படக்குறிப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாகத் தெரிவதற்கு, தொலைக்காட்சி மற்றும் மொபைல் செய்தி ஊடகங்களில் பாலியல் குற்றம் பற்றிய செய்திகள் வெளிவருவதும் காரணம்

பாலியல் குற்றங்கள் குறித்து மக்களின் கவலைகள் அதிகரித்த நிலையில், 12 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை இந்திய அரசு ஏற்படுத்தியது.

சட்ட வரையறையில் மாற்றம்

2012-2016 வரையில் புகார் அளிக்கப்பட்ட பாலியல் குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களாகப் பார்க்கும் ஒரு சட்டம் கூட 2012க்கு முன்பு வரை இந்தியாவில் இல்லை.

குழந்தைகள் மீது பரவலாக நடத்தப்படுகிற பாலியல் வன்முறையின் எந்த வடிவமும் சட்டத்துக்குள் கொண்டுவரப்படவில்லை. மேலும் வழக்கைப் பதிவு செய்ய மறுக்கும் போலீஸாருக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012 நவம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்டது. இதுவே, இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்துக்கான முதல் விரிவான சட்டமாகும்.

Indian protestor hurling rock during demonstration

பட மூலாதாரம், AFP

குழந்தைகளுக்கு நடந்த பாலியல் வன்புணர்வை வழக்காகப் பதிவு செய்ய மற்றுத்தாலோ, தவறினாலோ சிறை தண்டனைக் கிடைக்கும் என இச்சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

அடுத்த வருடமே, குழந்தைகள் பாலியல் பலாத்கார புகார்கள் 45% அதிகரித்தது.

''வீட்டுக்குள் நடக்கும் பிரச்சனை என கூறி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றப் புகார்களை போலீஸாரும், மருத்துவர்களும் இனி தவிர்க்க முடியாது. புகாரினை பதிவு செய்யவில்லை என்றால், அவர்களுக்குச் சிறை தண்டனைக் கிடைக்கும்'' என்கிறார் பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதவளித்து வரும் ஆட்ரி டி மெல்லோ.

பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு, அதிகாரிகள் புகார்களை பதிவு செய்வதை கட்டாயமாக்கியது முக்கிய காரணம் என்கிறார் அவர்.

2012-ம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டம் வலுவாக்கப்பட்டது. 2013-ல் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது.

Bar chart showing child rape figures

இச்சட்டம் கொண்டுவந்த பிறகு, 2013-ல் பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 35% அதிகரித்தது.

2007-ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 13 இந்திய மாநிலங்களில் 17,000 குழந்தைகளிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 53.2% குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறியுள்ளனர்.

இந்தியாவில் பதிவு செய்யப்படாத பாலியல் கொடுமை வழக்குகள் பல உள்ளன என்பதை இக்கருத்துக்கணிப்பு காட்டுகிறது என ஹாக் சென்டர் என்ற குழந்தைகள் உரிமை அமைப்பின் வழக்கறிஞர் குமார் கூறுகிறார்.

சட்ட நடவடிக்கையின் சிரமங்கள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும், இதற்கென சட்டம் இருந்த போதிலும், குற்றவாளிகளுக்கான தண்டனை சதவீதம் 2012 முதல் 28.2 சதவீதமாகவே உள்ளது.

குற்ற வழக்குகளின் விசாரணை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என 2012 சட்டம் கூறிய போதிலும், சட்ட நடவடிக்கைகள் மெதுவாகவே நடக்கின்றன.

குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினராகவோ அல்லது தெரிந்தவாகவோ இருந்தால் புகாரைத் திரும்ப பெற வேண்டும் என்ற அழுத்தம் ஏற்படுகிறது.

தங்களது சொந்த குடும்பத்தினர் மீதே புகார் கொடுப்பது, குடும்ப கெளரவத்திற்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.

Presentational grey line
Reality Check branding
Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :