குஜராத்: ஒரு கிலோ இனிப்பின் விலை 9 ஆயிரமாம்!

பட மூலாதாரம், MEHANG DESAI
வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் மற்றும் ஜென்மாஷ்டமி போன்ற பண்டிகைகளின் காலம் நெருங்கி வரும் நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் ஒரு கிலோ 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் இனிப்பு ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த இனிப்பை அந்த பகுதி மக்கள் 'கோல்டன் ஸ்வீட்' என்று அழைக்கின்றனர்.
குஜராத்தின் சூரத் நகரில் இந்த இனிப்பு விற்கப்படும் கடையில், அதை பார்ப்பதற்கு கூட்டம் அலைமோதுகிறது. ஏனெனில், இதை சுவைத்து பார்க்க வேண்டுமென்று நினைப்பவர்கள் பல ஆயிரங்களை செலவிட வேண்டியிருக்கும்.
இந்த இனிப்பின் சிறப்பு என்ன?
இந்தியாவில் வைர விற்பனையில் முக்கிய சந்தையாக திகழும் சூரத், தெருவோர உணவுகளுக்கும் பிரபலமானதாக அறியப்படுகிறது.

பட மூலாதாரம், MEHANG DESAI
ஒரு கிலோ 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் இந்த ஸ்வீட்டின் சிறப்பு குறித்து அது விற்கப்படும் '24 கேரட்ஸ்' என்னும் அந்த கடையின் உரிமையாளர் ரோஹன் மித்தைவாளாவிடம் கேட்டதற்கு, "நாங்கள் கோல்டன் ஸ்வீட்டை போன்று நான்கு வகை இனிப்புகளை மிகவும் தரம் உயர்ந்த பொருட்களை கொண்டு தயாரித்துள்ளோம்" என்று கூறுகிறார்.
"இந்த இனிப்புகளுக்காக சிறப்புவகை குங்குமப்பூவை ஸ்பெயினிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம்" என்று அவர் கூறுகிறார்.
"நாங்கள் சிறந்த முந்திரி பருப்புகள் மட்டுமல்லாது, சுத்தமான தங்க இலைகளை இதில் பயன்படுத்தியுள்ளோம். காஜூகத்ரி, நர்கிஸ் கலாம், பிஸ்தா பாதுஷாஹ், ட்ரை ஃபுரூட் பஹார், கேசர் குஞ்ச் ஆகிய ஐந்து வகை இனிப்புகளை தயாரித்துள்ளோம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
ரோஹனின் குடும்பத்தினர், எட்டு தலைமுறைகளாக இனிப்புகள் விற்கும் தொழிலை செய்து வருகின்றனர்.

பட மூலாதாரம், MEHANG DESAI
"தங்க ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் தங்கத்தை விட இந்த ஸ்வீட்டுகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் விலை அதிகம்" என்று ரோஹன் கூறுகிறார்.
"தங்கத்தை உணவில் பயன்படுவதற்காக உண்ணத்தக்க வகையில் மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் செயல்முறையின் காரணமாக இதன் விலை அதிகமாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்
இந்த இனிப்புகளை உருவாக்குதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது, "எங்களது கடையின் வெள்ளிவிழாவை சமீபத்தில் கொண்டாடினோம். அதை மேலும் சிறப்பிக்கும் வகையில் இதை நானும், எனது சகோதரரும் சேர்ந்து உருவாக்கினோம்" என்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












