மலேசிய நாணயத்தால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம்
இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தினமணி: 'வீணாகக் குவிக்கப்பட்டுள்ள 40 டன் மலேசிய நாணயங்கள்!'

பட மூலாதாரம், Getty Images
அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமாக, நிலுவையில் உள்ள 40 டன் மலேசிய நாணயங்கள் மாற்றப்படாததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ்.
"திருப்பதி தேவஸ்தானத்திடம் மலேசியாவைச் சேர்ந்த சில்லறை நாணயங்கள் 40 டன் அளவுக்கு மாற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. அவற்றை மாற்றிக் கொள்ள தேவஸ்தானம் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. தற்போது, மலேசியாவின் ஒரு ரிங்கட்டிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17-ஆக உள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு வரை தேவஸ்தானம், வெளிநாட்டு நாணயங்களை அவற்றின் எடைக்கு ஏற்ப விற்று, இந்திய ரூபாயாக மாற்றி வந்தது.
அதைத் தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு வரை நாணயத்தின் மதிப்பை வைத்து, அதற்கு ஏற்ற வகையில் இந்தியப் பணமாக தேவஸ்தானம் மாற்றி வந்தது. அதன்பின், வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடைமுறை நின்று போனது. அதனால், அவை தேவஸ்தானக் கருவூலத்தில் மலைபோல் குவியத் துவங்கின.
வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடவடிக்கையை தேவஸ்தானம் கடந்த 2012இல் மீண்டும் மேற்கொண்டது.
நாணயங்களின் மதிப்பிற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரியது. வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற ஏஜென்சிகளுக்கு மட்டுமே வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் அதிகாரம் உள்ளது.
அதன்படி, கோடக் மகீந்திரா வங்கி மட்டும் ஒப்பந்தப்புள்ளி அனுப்பியது. அதில் ஒரு சென் மலேசிய நாணயத்திற்கு 4 பைசா, 5 சென்னிற்கு 12 பைசா, 10 சென்னிற்கு 40 பைசா, 20 சென்னிற்கு ஒரு ரூபாய், 50 சென்னிற்கு ரூ.2.80, ஒரு ரிங்கட்டிற்கு 40 பைசா என்ற ரீதியில் அளிக்கத் தயாராக உள்ளதாக அந்த வங்கி குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதை தேவஸ்தானம் நிராகரித்தது. அதன்பின், நடப்பு ஆண்டு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரியது. அப்போது கோடக் மகீந்தரா, சென் காயின்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் உள்ளிட்டவை ஒப்பந்தப்புள்ளி அனுப்பின.
அதில் இந்தியா சிமெண்ட்ஸ் கேபிடல் நிறுவனம், ஒரு ரிங்கிட்டிற்கு 5 பைசாவும், கோடக் மகீந்தரா, 49 பைசாவும் அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தன. ஒரு ரிங்கட்டின் மதிப்பு ரூ.17 ஆக இருக்கும் நிலையில், வெறும் 49 பைசா மட்டும் அளிப்பதா? என்று தேவஸ்தானம் அதை நிராகரித்தது. ஆனால், மலேசிய நாட்டில் பணமதிப்பிழப்பு செய்து பயன்பாட்டில் இல்லாத நாணயங்களுக்கு, எவ்வாறு முழு மதிப்பு அளிப்பார்கள் என்பதை தேவஸ்தான அதிகாரிகள் யோசிக்கத் தவறிவிட்டனர். அவர்களின் அலட்சியப் போக்கால் தேவஸ்தானத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மலேசியா தனது பணத்தை மதிப்பிழப்பு செய்தபோது, அதற்கென அளிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் சில்லறை நாணயங்களை தேவஸ்தானம் மாற்றியிருந்தால், இது போன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.



பட மூலாதாரம், இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'இளவரசன் மரணம்: விசாரணை அறிக்கை முதல்வரிடம் நீதிபதி சிங்காரவேலு சமர்ப்பிப்பு'
ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு இளவரசன் மரணம் தொடர்பான தனது விசாரணை அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பித்தார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

பட மூலாதாரம், Niyas
"தருமபுரியில் ரயில்வே இருப்புபாதையில் தலித் இளைஞர் இளவரசனின் உடல் ஜூலை 4, 2013 அன்று கண்டெடுக்கப்பட்டது. காவல் துறை இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என்றது. ஆனால், தலித் கட்சிகளும், பிற அமைப்புகளும் இந்த மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்றனர். இந்த மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஜூலை 2013 ஆம் ஆண்டு விசாரணை கமிஷன் அமைக்கபட்டது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினத்தந்தி: 'கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்'

பட மூலாதாரம், Getty Images
தமிழக கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"கல்லூரிக்கு வரும் அனைத்து மாணவர்களும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், அதனை முழுமையான அளவில் நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. மேலும் இந்த விதிகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மாணவர்களை கொண்டு வருவதிலும் முரண்பாடுகள் இருப்பதாக தெரிகிறது.
எனவே செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசு அறிவிக்க இருக்கிறது." என்று விவரிக்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












