பா.ஜ.கவின் எதிர்ப்பையடுத்து 'தேவி' குறித்து குவியும் கவிதைகள்

பட மூலாதாரம், FACEBOOK
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கேரள வெள்ளம் குறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை ஒன்றுக்கு பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து தான் சமூக வலைதளங்களில் துன்புறுத்தப்படுவதாகவும் கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாகவும் காவல்துறையில் மனுஷ்யபுத்திரன் புகார் அளித்துள்ளார். பா.ஜ.கவின் எதிர்ப்பையடுத்து மேலும் பல கவிஞர்கள் 'தேவி' என்ற பொருளை மையமாக வைத்து கவிதைகளைப் பதிவிட ஆரம்பித்துள்ளனர்.
கேரள வெள்ளம் தொடர்பாக மனுஷ்யபுத்திரன், ஊழியின் நடனம் என்ற பெயரில், "தேவி உன் விடாய் குருதி ஊழிக் காலங்களை உருவாக்க வல்லதா?" என்று துவங்கும் கவிதை ஒன்றை எழுதி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, இந்து தெய்வங்களை மனுஷ்யபுத்திரன் இழிவுபடுத்திவிட்டதாகவும் அவர் மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்கும்படியும் பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டார்.
"தனியார் தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன் இந்துக்களின் பெண் தெய்வங்களை இழிவு படுத்தியதற்கு இந்துக்கள் எதிர்வினையாற்றாத காரணத்தால் மனுஷ்யபுத்திரன் என்கிற பெயரில் ஒளிந்து கொண்டுள்ள அப்துல் ஹமீது என்கிற முஸ்லிம் மதவெறியன்அதே செயலில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையில் புகார் செய்யவும்" என்று தனது பதிவில் எச். ராஜா குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், FACEBOOK
அந்தக் குறிப்பிட்ட கவிதை, தற்போது ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. "அதை நான் நீக்கவில்லை. ரிப்போர்ட் செய்து நீக்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன்" என்கிறார் மனுஷ்யபுத்திரன்.
இதற்குப் பிறகு, "எனது கவிதையில் எந்த இந்து தெய்வம் குறித்தும் எந்த நிந்தனையும் கிடையாது. அது பெண்ணின் பேராற்றல் குறித்த கவிதை என்பதை எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் அறிவார்கள். என் வாழ்நாளில் எவருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் எதையும் நான் எழுதியதில்லை. நேற்று ஹெச். ராஜா எனக்கு எதிராக அவதூறாக ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தூண்டிய வன்முறை காரணமாக ஏராளமான கொலை மிரட்டல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனது அலைபேசி எண் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இடையறாத தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. அவர் எனக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் இந்த பொய்யான பிரச்சாரத்தின் மூலம் எனக்கு நேரிடக்கூடிய எந்த அபாயத்திற்கும் ஹெச்.ராஜாவே பொறுப்பு." என்று ஒரு நிலைத் தகவலை மனுஷ்யபுத்திரன் பதிவிட்டிருக்கிறார்.
இது குறித்து எச். ராஜாவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகப் பேசிவருகிறார். இதற்கு முன்பாக தாலி தொடர்பாக பேசினார். இப்போது தேவி என இந்து தெய்வங்களைக் குறிப்பிட்டு பேசுகிறார். ஏற்கனவே புதிய தலைமுறை கார்த்திகேயன் விஷயத்தில் நாங்கள் சும்மா இருந்துவிட்டதால் இப்போது எல்லோரும் இப்படிப் பேசுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், TWITTER
ஆனால், மனுஷ்யபுத்திரனோ "நான் எந்த இந்து தெய்வங்களைப் பற்றியும் எழுதவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக எழுதப்பட்ட கவிதை அது. பெண்களை கோவிலுக்குள் அனுமதித்ததால் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டதாக இவர்கள் கூறுகிறார்கள். ஆகவே பெண்ணின் சக்தி பிரளயங்களை உருவாக்கவல்லதா என நான் கேள்வியெழுப்பியிருந்தேன். நான் தொடர்ந்து மத்திய அரசை எதிர்த்துப் பேசிவருவதால் எனக்கு எதிராக எச். ராஜா மத ரீதியான வன்முறையைத் தூண்டுகிறார்" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
சென்னை ஆணையர் அலுவலகத்தில் மனுஷ்யபுத்திரன் அளித்துள்ள புகாரில், சமூக வலைதளங்கள் மூலம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுவருவதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
"மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து தொலைபேசி மூலம் மிரட்டப்படுகிறார். ஆபாச வசைகளும் தொடர்கின்றன. ஹெச்.ராஜா இதன் பின்புலத்தில் உள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனே கொலை மிரட்டல் வழக்கில் ஹெச்.ராஜா கைது செய்யப்பட வேண்டும்" என திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுப. வீர பாண்டியன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

பட மூலாதாரம், TWITTER.COM/HRAJABJP
ஆனால், தான் கொலைமிரட்டல் விடுக்கவில்லையென்றும் அவரைக் கைதுசெய்து பாதுகாப்பாக சிறையில் அடைக்க வேண்டுமென்று கோருவதாகவும் எச். ராஜா கூறினார்.
தேவி குறித்து கவிதை எழுதியதால் மனுஷ்யபுத்திரனுக்கு எழுந்த எதிர்ப்பையடுத்து கவிஞர் சுகுமாரனும் 'தேவி மகாத்மியம்' என்ற பெயரில் இதே போன்ற ஒரு கவிதையைப் பதிவிட்டு அதனை மனுஷ்யபுத்திரனுக்கு சமர்ப்பித்திருக்கிறார்.
"ஒரு விஷயத்தை இம்மாதிரி சிந்திப்பதற்கான சுதந்திரத்தை ஜனநாயகம் நமக்குத் தந்திருக்கிறது. உங்களுக்கு அது ஏற்புடையதாக இல்லையென்றால், மாற்றுக் கருத்தை முன்வைக்க வேண்டும். மாறாக, ஒரு ஆளை மிரட்டல் மூலமாக வாயடைப்பது ஜனநாயக நாட்டில் ஏற்பதல்ல. இந்த விஷயத்தில் நான் மனுஷ்யபுத்திரன் பக்கம் நிற்கிறேன்" என்கிறார் சுகுமாரன்.
மாதொருபாகன் நாவலுக்காக கடும் எதிர்ப்பைச் சந்தித்த எழுத்தாளர் பெருமாள் முருகன், எல்லோரும் இதுபோல தேவி குறித்த கவிதையை எழுத வேண்டும் என்கிறார். "சுகுமாரன் 'தேவி மகாத்மியம்' எழுதியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஆளுக்கொரு 'தேவி' கவிதை எழுதி ' தேவி கவிதை இயக்கம்' தொடங்கலாமா? நூறு இருநூறு என எழுதி எழுதி மேற்செல்வோமா?" என்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அழைப்பு விடுத்திருக்கும் அவர், புது எழுத்து இதழின் ஆசிரியர் மனோன்மணி எழுதிய கவிதையை தன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசியிடம் பேசிய பெருமாள் முருகன், "இந்தத் தருணத்தில் மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக எல்லோரும் நிற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், FACEBOOK/பெருமாள்முருகன்
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இம்மாதிரியான வேலைகள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடக்க ஆரம்பித்திருக்கின்றன என்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் சு. வெங்கடேசன். "பெருமாள் முருகன் வழக்கில் உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை இது. அந்த முக்கியமான தீர்ப்புக்கு பிறகும் எழுத்தாளர்களை மிரட்டும் வேலை நடக்கிறது. காவல்துறையும் தமிழக அரசும் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் சு. வெங்கடேசன்.
இதற்கு முன்பாக மாதொருபாகன் நாவலை எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகன் கடுமையான மிரட்டல்களைச் சந்தித்து, வழக்குகளையும் எதிர்கொண்டார். அதற்குப் பிறகு வைரமுத்து ஆண்டாள் குறித்து கூறிய ஒரு கருத்து இந்து அமைப்புக்களிடம் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியது. தற்போது மனுஷ்யபுத்திரனின் கவிதைக்கு பா.ஜ.கவின் தேசியச் செயலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் மாநில பா.ஜ.கவின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் கருத்தைப் பெற, பல முறை முயன்றும் இயலவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












