பொம்மை துப்பாக்கியுடன் சென்ற இருவர், துரத்திய சென்னை போலீஸ் - சுவாரஸ்ய சம்பவம்
இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
கேரள பெரு வெள்ளம், காவிரியில் கரை புரண்டு ஓடும் நீர் குறித்த செய்திதான் அனைத்து தமிழக பதிப்பு நாளிதழ்களிலும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'பொம்மை துப்பாக்கியுடன் சென்றவர்களை துரத்திய போலீஸ்'

பட மூலாதாரம், Getty Images
பொம்மை துப்பாக்கியுடன் சென்ற இருவரை இரண்டு மணி நேரமாக போலீஸ் துரத்திய சம்பவம் சென்னையில் சனிக்கிழமையன்று நிகழ்ந்து உள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
"சனிக்கிழமை மதியம் அண்ணா சாலையில் உள்ள ஒரு உணவகத்திலிருந்து போலீஸூக்கு ஒரு தகவல் வந்துள்ளது. துப்பாக்கி வைத்திருந்த இருவர் தங்கள் உணவகத்திற்கு வந்ததாகவும், அவர்கள் பின்னர் காரில் தப்பி சென்றதாகவும் கூறி உள்ளார் அந்த உணவக ஊழியர். அவர்கள் சென்ற காரின் எண்ணையும் போலீஸுக்கு அளித்துள்ளார். தகவல் கிடைத்ததும் களத்தில் இறங்கிய போலீஸ் இரண்டு மணி நேரமாக தேடி பேசின் பிரிட்ஜ் அருகே அவர்கள் சென்ற வாடகை காரை பிடித்துள்ளது. அந்த வாடகை கார் ஓட்டுநர் அளித்த தகவலைக் கொண்டு எம்.கே.பி நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று, அந்த இருவரையும் பிடித்துள்ளனர். அவர்களை விசாரித்ததில் அது பொம்மை துப்பாக்கி என்று தெரியவந்தது" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினத்தந்தி: 'தமிழகத்திலும் கேரள மரபு வரவேண்டும்'
ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்படும் கேரள மரபு தமிழகத்திலும் வரவேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து தெரிவித்து உள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"கேரளாவில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒன்றாக இணைந்து வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். அதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதன் மூலம் கேரளா இந்தியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டான மாநிலமாக இருக்கிறது. நமது தமிழ்நாட்டிலும் அத்தகைய மரபுகள் வரவேண்டும்" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
அந்நாளிதழின் மற்றொரு செய்தி, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போதிலும் மன்னார்குடியில் ஒரு குளத்தில் கூட தண்ணீர் நிரம்பவில்லை என்கிறது.
"திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஏற்கனவே 97 குளங்கள் இருந்தன. இவற்றில் தற்போது 47 குளங்கள் மட்டுமே உள்ளன. எந்த குளத்திலும் இதுவரை தண்ணீர் நிரம்பவில்லை. குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் வாய்க்கால்கள் ஆங்காங்கே தூர்வாரப்பட்ட போதிலும் இதுவரை குளங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.
ஆறுகளில் தண்ணீர் அதிக அளவில் வரும் இந்த சூழ்நிலை யில், மன்னார்குடியில் உள்ள குளங்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் கிடப்பது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


பட மூலாதாரம், இந்து தமிழ்


தினமணி: 'பவானி, காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு'
ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளில் நீடித்து வரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட 7,832 பேர் 67 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 100.56 அடியாக இருந்தது. அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 47,168 கன அடி நீர் வந்தது. அணையிலிருந்து ஆற்றில் 37,700 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. வாய்க்காலில் இருந்து பாசனத்துக்காக 2,300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 29.1 டிஎம்சி.
பவானிசாகர் அணையிலிருந்து 37 ஆயிரம் கன அடி நீரும், மேட்டூர் அணையிலிருந்து 1. 75 லட்சம் கன அடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், பவானி கூடுதுறையில் இவ்விரு ஆறுகளும் இணைவதன் காரணமாகவும் கொடுமுடி வரை 2 லட்சம் கன அடி நீர் செல்கிறது. இதனால், ஈரோடு, பவானி சோமசுந்தரபுரம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பவானிசாகர் அணை நீரையும் சேர்த்து ஆற்றில் 2.2 லட்சம் கன அடி நீர் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் உள்ள பவானி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 17 முகாம்களில் 2,067 பேரும், சத்தியமங்கலம் பகுதியில் உள்ள 29 முகாம்களில் 4,344 பேரும், கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள 8 முகாம்களில் 692 பேரும், அந்தியூர் பகுதியில் உள்ள 5 முகாம்களில் 156 பேரும், கொடுமுடி பகுதியில் உள்ள 5 முகாம்களில் 407 பேரும், ஈரோடு பகுதியில் உள்ள 2 முகாம்களில் 126 பேரும், மொடக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு முகாமில் 40 பேர் உள்பட மொத்தம் 67 முகாம்களில் 7,832 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

இந்து தமிழ்: 'கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த திருச்சி பெண் காவலர் இடமாற்றம்'
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட திருச்சி பெண் காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"திருச்சி மாநகரக் காவல் நுண்ணறிவு பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் செல்வராணி. இவர், கவிசெல்வா என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருவதுடன் கவியரங்கம், பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது, அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வீடியோவில் கவிதை பாடி, அதை முகநூலில் வெளியிட்டார்.
5.44 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவின் இறுதியில் கருணாநிதியும் கவிஞர், நானும் கவிஞர் என்பதால் இந்த இரங்கல் உணர்ச்சியின் வெளிப்பாடு என்றும், இதை அரசியலாக்கிவிட வேண்டாம் எனவும் குறிப்பிட்டு அழுதார். இந்த வீடியோ முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், செல்வராணியை திருச்சி மாநகர காவல்துறையில் இருந்து மத்திய மண்டல காவல்துறைக்கு பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












