"கொல்லப்பட்ட பிறகு தான் எனக்கு பாதுகாப்பு தருவார்களோ?" - உமர் காலித் #BBCSpecial

    • எழுதியவர், ஃபைசல் முகம்மது அலி
    • பதவி, பிபிசி இந்தி

மெலிந்த உடல்வாகும், மின்னும் கண்களும் கொண்ட அந்த இளைஞன் மீது கடந்த திங்கள் கிழமை கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அவருடைய வீட்டிற்கு அருகே காவல்துறையின் பாதுகாப்போ கண்காணிப்போ இருப்பதாக தெரியவில்லை.

உமர் காலித்
படக்குறிப்பு, உமர் காலித்

டெல்லி போலீஸ் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறது?

தாக்குதல் நடந்து 24 மணி நேரம் ஆன பிறகும்கூட, பாதுகாப்பு கொடுக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று கேள்விக்கணை தொடுக்கிறார், துப்பாக்கி தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்ட முன்னாள் மாணவர் தலைவர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்.

"கொல்லப்பட்ட பிறகு தான் எனக்கு பாதுகாப்பு தருவார்களோ?" என்று கேட்கிறார் அவர்.

கேள்வியில் நையாண்டி இருந்தாலும், அவரிடம் கோபமோ அல்லது நேற்று நடைபெற்ற துப்பாக்கி தாக்குதலில் மயிரிழையில் உயிர் பிழைத்த அச்சமோ இல்லாமல் இயல்பாக இருக்கிறார்.

அவருக்கு நீண்டகாலமாக விடுக்கப்பட்டு வந்த அச்சுறுத்தல் நேற்று நிதர்சமானது. வெள்ளைச் சட்டை அணிந்திருந்த ஒருவர் உமர் காலித் மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, உமர் காலிதும், அப்போது அவருடன் இருந்த அவரது நண்பர்கள் ஷரிக் ஹுஸைன் மற்றும் காலித் சைஃபி சொல்கின்றனர்.

ஆனால் காவல்துறையினரோ, அந்த துப்பாக்கி ஜாம் ஆகியிருந்ததால் அதிலிருந்து குண்டு வெடித்ததா இல்லையா என்று பரிசோதனை செய்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

உமர் காலிதின் தந்தை எஸ்.க்யூ.ஆர் இலியாஸ் இந்த விஷயத்தில் போலீசாரின் அணுகுமுறை ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்தார். அதி உயர் பாதுகாப்பு பகுதியில் (நாடாளுமன்ற கட்டடத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில்) இது போன்ற தாக்குதல் நடந்திருக்கிறது, தாக்குதல் நடந்த 15 நிமிடங்களுக்குப் பிறகுதான் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்கு காரணம் என்ன என்று புரியவில்லை என்று அவர் கூறுகிறார்.

உமர் காலித்தின் தந்தை, வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இண்டியா என்ற அரசியல் கட்சியில் உறுப்பினர் மற்றும் ஜமாதே இஸ்லாமி எனும் அமைப்புடன் தொடர்புடையவர்.

ஆனால் தன்னை நாத்திகவாதி என்று கூறும் உமர் காலித், இடதுசாரி சிந்தனைகளை பின்பற்றுபவர்.

உமர் காலித்
படக்குறிப்பு, உமர் காலித்

தெற்கு டெல்லியில் உள்ள உமர் காலித்தின் வீட்டில் அவரை பேட்டி எடுக்க தொலைகாட்சி மற்றும் இணையதள செய்தியாளர்களும் வந்திருக்கின்றனர். அவர்களுக்கு பதில் கூறும் காலித், 'இந்த தாக்குதல் ஒரு விளம்பர உத்தி' என்று சமூக ஊடகங்களில் தன் மீதான தாக்குதல் நடைபெறுவது தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.

மனதில் சிந்தனைகள் ஓட செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் உமர் காலித், மரணத்தைக் கண்டு தான் அஞ்சவில்லை என்று கூறுகிறார்.

தான் சுடப்பட்டபோது பெங்களூருவில் சுடப்பட்டு பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு நேர்ந்ததை நினைத்துக்கொண்டதாக, உமர் காலித் சொன்னது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன.

அதில் கெளரி லங்கேஷை 'நாய்' என்று குறிப்பிட்டிருந்த ஒரு நபர், பிரதமர் நரேந்திரமோதியே அவரை ட்விட்டரில் பின் தொடர்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கெளரி லங்கேஷ் கொலையில் கர்நாடக போலீசார் 14 பேரை கைது செய்துள்ளனர். அதில் அதிகமானோர் இந்துத்வா கருத்துக்களை கொண்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கெளரி லங்கேஷை எப்படி கொன்றார்களோ அதே முறையில் எம்.எம். குல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர டபோல்கர் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் இந்துத்வா அரசியலுக்கு விரோதமானவர்கள்.

"மரணத்தை கண்டு பயப்படாமல் இருக்க நான் சூப்பர்மேனோ அல்லது சக்திமானோ இல்லை. ஆனால் கொன்று விடுவார்களோ என்று அஞ்சி, வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கமாட்டேன்" என்று உமர் காலித் கூறுகிறார்.

உமர் காலித்

பட மூலாதாரம், Tarendra

2016 பிப்ரவரி மாதத்தில் தேச விரோத முழக்கங்களை எழுபியதாக குற்றம் சாட்டப்பட்ட பிறகு பலவிதமான சங்கடங்களை எதிர்கொண்டதாக கூறும் அவர், "ஆனால், பிரச்சனைகளே, பிரச்சனைகளை எதிர்த்து போரிட கற்றுக் கொடுத்தது என்றும், அதுவே தனது பி.எச்.டி. ஆய்வேட்டை சமர்ப்பிக்க பல்கலைக்கழகம் அனுமதி வாங்கவும் போராட வைத்தது" என்றும் கூறுகிறார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக்கத்தில் இவர்கள் கல்வி கற்கவில்லை, அரசியல் செய்கிறார்கள், இதற்காக வரி செலுத்துபவர்களின் பணம் வீணடிக்கப்படுகிறது என்று அவதூறுகள் பரப்பட்டதால், தனது பி.எச்.டி. ஆய்வேட்டை சமர்ப்பிக்கவேண்டும் என்பதற்காக முழு முயற்சிகளையும் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

"நான் அரசியலில் ஆர்வம் கொண்டவன். ஆனால், படிப்பும் எனக்கு மிகவும் முக்கியமானது" என்று சொல்கிறார் உமர் காலித்.

உமர் காலித் மீது தேச விரோத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இரண்டரை ஆண்டு ஆகிவிட்டாலும், அந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

அதைப் பற்றி கருத்து தெரிவிக்கும் உமர் காலித், எங்கள் மீது வழக்கு போடப்பட்டதற்கு காரணம் அவதூறு பரப்பி எங்களை அடக்குவதுதான். போலீசோ, அரசோ வழக்கை தொடர்வது பற்றி ஒருபோதும் தீவிரமாக இருந்ததில்லை என்று கூறுகிறார்.

பேசிக் கொண்டிருக்கும்போதே அனைவருக்கும் தேநீர் தயாரிக்கும்படி, தனது தங்கையிடம் உமர் காலித் சொன்னார். எத்தனை தேநீர் போடுவது என்று தங்கை கேட்க, இங்கு எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் தேநீர் போடு என்று அவர் புன்சிரிப்புடன் பதிலளிக்கிறார்.

அப்போது பத்திரிகையாளர்களில் ஒருவர், நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு உங்களால் எப்படி சிரித்து இயல்பாக பேச முடிகிறது என்று வியப்புடன் கேட்டார்.

அதற்கு ஆங்கிலத்தில் பதிலளித்த உமர் காலித், "உயிருடன் இருக்கிறேன், எனவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். உயிருடன் இருக்கும் வரையில் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று மனதில் முடிவு செய்திருக்கிறேன்" என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :