70 வயதைக் கடந்த "ஓய்வறியா அரசியல் தலைவர்கள்" - சங்கரய்யா முதல் சோனியா காந்தி வரை

    • எழுதியவர், பரணிதரன்
    • பதவி, பிபிசி தமிழ்

திமுக தலைவர் கருணாநிதி தனது 94-ஆவது வயதில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலாமானார். இந்நிலையில், இந்தியாவில் எழுபது வயது கடந்த சில தலைவர்கள் மக்கள் அபிமானத்துடன் அவர்களால் அங்கீகரிக்கப்படக் கூடியவர்களாக விளங்கி வருகிறார்கள். அவர்களின் சிறிய குறிப்புகளைப் பார்ப்போம்.

வாஜ்பேயி

அடல் பிஹாரி வாஜ்பேயி, வயது 94. 1999-2004, 1998-99, 1996-ஆம் ஆண்டில் 13 நாட்களும் இந்திய பிரதமராக இருந்தார். நான்கு தசாப்தங்கள் நாடாளுமன்றவாதியாக இருந்துள்ளார். இதில், 10 முறை மக்களவையிலும், இரு முறை மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்துள்ளார். பாபா சாஹெப் ஆப்டேவால் ஈர்க்கப்பட்டு, 1939-ஆம் ஆண்டில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் இயக்கத்தில் சேர்ந்தார். தீன் தயாள் உபாத்யாயுடன் சேர்ந்து பாரதிய ஜன சங்கத்தை தோற்றுவித்தார்.

1980-இல் பாஜகவை தமது நீண்ட கால நண்பர்களான அத்வானி, பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் சேர்ந்து நிறுவினார். 2005-இல் தீவிர அரசியலில் இருந்து விலகினார். 2009 முதல் இவரது உடல்நலக் குறை மோசமாகி நினைவாற்றலையும் பேச்சையும் இழந்தார்.

வி.எஸ். அச்சுதானந்தன்

வி.எஸ். அச்சுதானந்தன், வயது 95. கேரள முன்னாள் முதல்வர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். 78 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருக்கிறார்.

1938-ஆம் ஆண்டில் காங்கிரஸில் சேர்ந்த அவர், 1940-ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1964-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். கேரள முதல்வராக 2006 முதல் 2011-ஆம் ஆண்டுவரை இருந்தார்.

ஆர். நல்லக்கண்ணு

ஆர். நல்லக்கண்ணு, வயது 93. 15 வயதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பங்கெடுத்தார். 18-ஆவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். 25 ஆண்டுகளாக விவசாய தொழிலாளர் சங்கத் தலைவராகவும் 13 ஆண்டுகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகவும் இருந்துள்ளார். அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராக உள்ளார்.

பர்காஷ் சிங் பாதல்

பர்காஷ் சிங் பாதல், வயது 91. பஞ்சாப் மாநில முதல்வர். 1947-ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இருக்கிறார். அரசியலுக்கு வந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகே பஞ்சாப் சட்டப்பேரவையில் உறுப்பினரானார்.

எல்.கே. அத்வானி

எல்.கே. அத்வானி, வயது 91. பாஜக மூத்த தலைவர். இந்திய முன்னாள் துணைப் பிரதமர். 76 ஆண்டுகளாக தீவர அரசியலில் உள்ளார். 1942இல் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் இயக்கத்தில் சேர்ந்த இவர், பிறகு பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங்கத்தில் 1951-இல் சேர்ந்தார். பின்னர் பாரதிய ஜனதா கட்சி நிறுவியபோது அதில் சேர்ந்தார். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு முதல் முறையாக இவர் 1970-இல் தேர்வானார்.

என்.சங்கரய்யா

என். சங்கரய்யா, வயது 97. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர். மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு 1967-ஆம் ஆண்டிலும், மதுரை கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு 1977 மற்றும் 1980-ஆண்டிலும் தேர்வானார். 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டபோது அதில் சங்கரய்யா உறுப்பினர் ஆனார்.

தேவேகெளடா

ஹெச்.டி.தேவேகெளடா, வயது 85. மதசார்பற்ற ஜனதா தலைவர். இந்திய பிரதமராக 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரை பணியாற்றினார். கர்நாடக முதல்வராக 1994 முதல் 1996-ஆம் ஆண்டுவரை இருநதார். 1953-இல் காங்கிரஸில் சேர்ந்த இவர் 65 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருக்கிறார்.

தருண் கோகாய்

தருண் கோகொய், வயது 84. காங்கிரஸ் மூத்த தலைவர். அஸ்ஸாம் முன்னாள் முதல்வர். காங்கிரஸ் கட்சியில் 1963-இல் சேர்ந்த இவர் 55 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருக்கிறார்.

க.அன்பழகன்

பேராசிரியர் க. அன்பழகன், வயது 96. தமிழக சட்டப்பேரவைக்கு முதல் முறையாக 1962-இல் தேர்வானார். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவைகளில் மூத்த அமைச்சர் பொறுப்பை வகித்தார். திமுகவின் ஆரம்ப காலம் முதல் முக்கிய தலைவராகவும் 1977-ஆம் ஆண்டு முதல் திமுக பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.

ஃபரூக் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லா, வயது 81. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர். மூன்று முறை ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக இருந்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர். 1980-ஆம் ஆண்டில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு தேர்வானார். 38 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருக்கிறார்.

முலாயம் சிங் யாதவ்

முலாயம் சிங் யாதவ், வயது 79. சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர். உத்தர பிரதேச மாநில முதல்வராக பணியாற்றியுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பையும் வகித்துள்ளார். 1967-ஆம் ஆண்டில் முதல் முறையாக உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு தேர்வானார். 51 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருக்கிறார்.

சரத் பவார்

சரத் பவார், வயது 78. அரசியலில் 52 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர். மூன்று முறை மகராஷ்டிர முதல்வராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 1967-ஆம் ஆண்டில் முதல் முறையாக சட்டப்பேரவைக்கு தேர்வானார்.

பினராயி விஜயன்

பினராயி விஜயன், வயது 74. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 2016-ஆம் ஆண்டு முதல் கேரள முதல்வராக இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் கூட. 1964-இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த இவர், 54 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருக்கிறார்.

சோனியா காந்தி

சோனியா காந்தி, வயது 72. நேரு குடும்பத்தில் இந்திரா காந்தியின் மருமகளான இவர் தனது கணவர் ராஜிவ் காந்தி மறைந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1998-இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார். 1997-இல் தீவிர அரசியலுக்குள் நுழைந்த இவர், 1999-2004, 2004-தற்போதுவரை நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். உடல் நல பிரச்னைகள் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து 2017, டிசம்பரில் விலகினார். உலகின் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களின் பட்டியலில் சோனியாவின் பெயர் அடிக்கடி இடம்பெறும்.

இந்த பட்டியலில் என்.சங்கரய்யா, வாஜ்பேயி, சோனியா காந்தி ஆகியோர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியிருந்தாலும் மக்களால் அறியப்படும் முக்கிய தலைவர்களாக விளங்கி வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :