You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோயில் சிலை திருட்டு குறித்து கருணாநிதி கூறியது என்ன?
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கேள்விகளை எதிர்கொள்ளும் விதமே அலாதியானது. சட்டமன்றமாக இருந்தாலும் சரி, பத்திரிகையாளர் சந்திப்பாக இருந்தாலும் சரி, சிக்கலான கேள்விகளுக்கும் நகைச்சுவையான பதில்கள் அளித்து சூழலை இலகுவாக்கிவிடுவார்.
கருணாநிதியிடம் பல்வேறு தருணங்களில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கு அவர் அளித்த பதில்களையும் இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
சட்டமன்ற உறுப்பினர் கே.வினாயகம்: "மெரினா கடற்கரையில் ஒரு பகுதியில் 'லவ்வர்ஸ் பார்க்' ஒன்று இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல் காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தி தருமா?"
கருணாநிதி: "இந்த விஷயத்தில் வினாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்"
சட்டமன்ற உறுப்பினர் அனந்தநாயகி: "கோயில் சிலைகளைத் திருடுபவர்கள் குறைவாக இருந்தாலும், இட்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகச் செல்வாக்கு படைத்தவர்கள் என்பது அரசுக்குத் தெரியுமா?"
கருணாநிதி: "இது புதிய தகவல். மீதமுள்ள தகவல்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்"
சட்டமன்ற உறுப்பினர் கோவை செழியன்: மீன் எண்ணெய் உடம்புக்கு நல்லது என உறுப்பினர் ஒருவர் சொன்னார். அது சைவ உணவை சேர்ந்ததா அல்லது அசைவ உணவை சேர்ந்ததா?
கருணாநிதி: மீனாகச் சாப்பிடும்போது அசைவம், அதை மாத்திரையாகச் சாப்பிடும்போது சைவம்.
சட்டமன்ற உறுப்பினர் சுவாமிதாஸ்: "காவல்துறையினருக்கு இப்போது வழங்கப்பட்டிருக்கிற தொப்பி மிகவும் பழைய டிசைன். அதை அரசு மாற்றுமா?"
கருணாநிதி: "இப்போது ஒன்றும் குல்லாய் மாற்றுகின்ற வேலையை செய்வதாக இல்லை."
சட்டமன்ற உறுப்பினர் ஜேம்ஸ்: "மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது பற்றி ஆராய அமைக்கப்பட்டிருக்கும் ராஜமன்னார் குழு 'ஒன் ஸைடெட் லவ்' போலதான் உள்ளது"
கருணாநிதி: "ஒன் ஸைடெட் லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை"
சட்டமன்ற உறுப்பினர் லத்தீப்: "கூவம் ஆற்றில் அசுத்தத்தைக் குறைக்க கூவம் ஆற்றில் முதலை விடுவது பற்றி அரசு ஆலோசிக்குமா?
கருணாநிதி: "ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 'முதலை' கூவம் ஆற்றில் போட்டிருக்கிறது."
சட்டமன்ற உறுப்பினர் சோனையா: "தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, புத்தகங்களை வெளியிட்டதற்காக எத்தனை பேர் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது. தண்டிக்கப்பட்டவர்கள் யார் என்பதை அறிய விரும்புகிறேன்"
கருணாநிதி: "பல பேர் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த விபரங்களை கூறி உறுப்பினர்களிடையே அவற்றை வாங்கி படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்ட நான் விரும்பவில்லை"
சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி: "மதுரை மீனாட்சிக்கு வைர கிரீடம், வைர அட்டிகை இன்னும் இருக்கிற பல நகைகளில் மொத்த மதிப்பு எவ்வளவு?
கருணாநிதி: "மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பை சொன்னால் காமாட்சிக்கு பொறாமை ஏற்படும்"
சட்டமன்ற உறுப்பினர் ரகுமான்கான்: "இந்திரா காந்தியை கொலை செய்ய முயற்சித்ததாக பொய் வழக்கு போட்டார்கள். கலைஞர், பேராசிரியர் போன்றவர்கள் எல்லாம்கூட ஜாமீனில்தான் இருக்கிறோம்
கருணாநிதி: "தவறான தகவலை தருகிறார். என்னையும் பேராசிரியரையும் அந்த வழக்கில் இருந்து விடுவித்துவிட்டார்கள். இவர்தான் விடுதலை செய்ய மறுக்கிறார்"
சட்டமன்ற உறுப்பினர் வி.பி. துரைசாமி: "ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?"
கருணாநிதி: "அசையும் சொத்து அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்"
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :