‘கடவுளுக்கு பிடித்த மனிதர்’ - கருணாநிதி குறித்து ஆளுமைகள் கூறியவை

என்னதான் கருணாநிதியை நீங்கள் ஆத்திரமாகத் திட்டினாலும், நேருக்கு நேர் சந்தித்தால் எந்தப் பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்துவிடுவார்கள் - கருணாநிதி குறித்து கண்ணதாசன் கூறிய வார்த்தைகள் இவை.

கண்ணதாசன் கூறியது போல, அவருடன் சித்தாந்த ரீதியாக முரண்பட்டவர்கள் கூட, அவரை வியந்து இருக்கிறார்கள், அவரை போற்றி இருக்கிறார்கள்.

கருணாநிதி குறித்து நாத்திகர் பெரியார் முதல் ஆத்திகர் குன்றக்குடி அடிகளார் கூறியது வரை இங்கே தொகுத்துள்ளோம்.

'கிடைத்தற்கரிய வாய்ப்பு`

கலைஞர் நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்... ஒரு பகுத்தறிவாளராகவும், ஆட்சிக் கலையில் அரிய ராஜதந்திரியாகவும் நடந்துவருவதன் மூலம் தமிழர்களுக்குப் புது வாழ்வு தருபவராகிறார் நமது கலைஞர்.

- பெரியார்

'கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்'

என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்திலே இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்!

- அண்ணா

'நாடு உயர்கிறது'

சிலருக்கு பதவி கிடைத்தால் நாடு குட்டிசுவராகிவிடுகிறது. நமது கலைஞருக்கு பதவி கிடைத்தாலோ நாடு உயர்கிறது.

- எம்.ஜி.ஆர்

'என்ன பேசுவேன்?'

என் அருமை நண்பனைப் பற்றி நான் என்ன பேசுவது? கலைஞரைப் பற்றி பேசினால், நானும் அதில் சேர்ந்திருப்பேனே? அப்படியென்றால் என்னை நானே புகழ்ந்துகொள்வதாகிவிடுமே, அதைப் பற்றி பேசுவதா? இருவரும் சிறுபிள்ளைகளாகத் தஞ்சை மாநகரிலே சந்தோஷமாக சுற்றித் திரிந்தோமே அதைப் பற்றி பேசுவதா? திமுகவுக்கு நிதி திரட்டுவதற்காக ஊர் ஊராக தெருத் தெருவாக நாடகம் போட்டோமே, அதைப் பற்றிப் பேசுவதா? சினிமாவுக்கு வந்த பிறகு 'பராசக்தி'யில் அவருடைய வசனத்தில் பேசி நடித்தேனே, அதைப் பற்றி பேசுவதா? அந்தப் படம் வந்த ஒரே நாளில் புகழ் வானத்தில் பறந்தேனே, அதைப் பற்றி பேசுவதா?

- சிவாஜி கணேசன்

'கவர்ச்சியுள்ளவர்'

என்னதான் கருணாநிதியை நீங்கள் ஆத்திரமாகத் திட்டுகள். நேருக்கு நேர் சந்தித்தால் எந்தப் பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்துவிடுவார்கள். இந்திய அரசியலில் அந்தக் கவர்ச்சி உள்ளவர்களில் கலைஞரும் ஒருவர்.

- கண்ணதாசன்

'காப்பீட்டுத் தமிழன்'

தமிழ் மக்களின் காப்பீட்டுத் தமிழன் கலைஞர். நம் உயிர் காக்கும், மொழி காக்கும், இனம் காக்கும் தமிழனாக விளங்குபவர்.

- பாரதிராஜா

அழகான கவிதை

தானே எழுத்தாகி, தானே சொல்லாகி, தானே பொருளாகி, தானே யாப்புமாகி, தானே அணியுமாகி, மொழியாய், மொழி வளமாய், கவிதையாய் தன்னை தானே எழுதிக்கொண்ட அழகான கவிதை கலைஞர்!

-இளையராஜா

'கேட் பாஸ்'

நான் நடிக்க வந்த காலத்தில் கலைஞர் வசனத்தை அழகாகப் பேசிகாட்டுவதுதான் நடிப்பிற்கான கேட் பாஸ்.

- கமல்ஹாசன்

'கடவுளுக்கு பிடிக்கும்'

சிலருக்குக் கடவுளைப் பிடிக்காது. ஆனால், கடவுளுக்கு அவர்களைப் பிடிக்கும். கலைஞர் அப்படித்தான்!

- ரஜினிகாந்த்

'கலைஞரின் பங்கு மகத்தானது'

திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் மீது மிகுந்த மதிப்பு கொண்டவன் நான். இந்த மண்ணில் சாதி, மத அடையாளங்களை எல்லாம் கடந்து நாம் அனைவரும் உணர்வால், 'தமிழர்' என்று உணரவைத்த இயக்கம் அது. இதில் கலைஞரின் பங்கு மகத்தானது.

- ஏ.ஆர்.ரஹ்மான்

'காண்டீபன் கலைஞர்'

கண்ணனாக இருந்து சொல்லெறிந்தவரும், காண்டீபனாக இருந்து வில்லெறிந்தவரும் கலைஞர்தான்!

- வைரமுத்து

'தேசிய தலைவர்கள் வரிசையில்'

பேசும் வார்த்தைகளுக்கும் எழுதும் எழுத்துகளுக்கும் உள்ள மதிப்பையும் வலிமையையும் உணர்ந்த தலைசிறந்த தேசியத் தலைவர்கள் வரிசையில் வருபவர் கலைஞர். திலகர், காந்தி, நேரு, இஎம்எஸ், அண்ணா ஆகியோரின் வரிசையில் வைக்கத் தக்கவர்!

- என். ராம், 'தி இந்து' பதிப்புக் குழுமத் தலைவர்

ஆன்மிக கலைஞர்’

தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஆன்மிகவாதிகள் என்ன கருத்து சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக்கொள்பவர் கலைஞர்.

- குன்றக்குடி அடிகளார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :