You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நச்சு வேதிப்பொருள் தாக்குதல்: ரஷ்யா மீது அமெரிக்கா புதிய தடைகள்
பிரிட்டனில் உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோவிசோக் எனும் நச்சுப்பொருளால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தீர்மானிக்கப்பட்டபிறகு ரஷ்யா மீது தாங்கள் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னாள் ரஷ்ய உளவாளியான செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா கடந்த மார்ச் மாதத்தில் சாலிஸ்பர்ரி நகரில் நினைவிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலால் தீவிரமாக பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் பல வாரங்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப்பின் மீண்டனர்.
இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணமென்று ஒரு பிரிட்டன் புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை ரஷ்யா கடுமையாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யா மீது தடைகள் விதிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா செயல்படுத்தவுள்ளதாக அந்நாட்டு அரசுத்துறை உறுதி செய்துள்ளது.
''சர்வதேச சட்டத்துக்கு புறம்பாக ரசாயன அல்லது உயிரியல் ரீதியான ஆயுதங்களை தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக அந்த நாடு பயன்படுத்தியுள்ளது'' என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டின் பெண் பேச்சாளர் ஹீதர் நாரெட் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பிரிட்டன் அரசு வரவேற்றுள்ளது.
''சாலிஸ்பர்ரி வீதிகளில் நடந்த ரசாயன ஆயுத தாக்குதலுக்கு எதிரான சர்வதேச ரீதியான கடுமையான எதிர்வினை, தனது ஆத்திரமூட்டும், பொறுப்பற்ற நடத்தை குறித்து யாரும் கேள்விகேட்க மாட்டார்கள் என்ற ரஷ்யாவின் எண்ணத்துக்கு தெளிவான பதிலை தந்துள்ளது'' என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலக செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீது அமெரிக்கா விதிக்கவுள்ள புதிய தடைகள் ஏறக்குறைய ஆகஸ்ட் 22-ஆம் தேதியில் பிறப்பிக்கப்படலாம். முக்கிய மின்னணு சாதனங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் தொடர்பான ஏற்றுமதிகள் இந்த புதிய தடைகளில் அடங்கும்.
பிரிட்டனில் கடந்த மார்ச் 4 அன்று மயங்கிய நிலையில் காணப்பட்டு, தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியாவை கொல்ல நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக காவல் துறை கூறியுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் பிரிட்டனில் வசித்துவந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற நரப்பு மண்டலத்தை பாதிக்கும் நச்சுத் தாக்குதல் தொடர்பாக ரஷ்ய நாட்டின் 60 ராஜிய அதிகாரிகளை வெளியேற்றும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட் டார்.
ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, இந்த தாக்குதலுக்கு பின்னனியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது என பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :