திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - மருத்துவமனை அறிக்கை

கருணாநிதி

பட மூலாதாரம், The India Today Group

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், வயதின் காரணமாக அவரின் உடல் உறுப்புகள் சீராக செயல்பட சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளதென்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல் தரும் ஒத்துழைப்பை வைத்தே அவரது உடல்நிலை குறித்து கூற இயலும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதுவரை அவரது உடல்நிலை குறித்து, காவேரி மருத்துவமனை ஐந்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைகளில் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் தற்போது வெளியிட்டிருக்கும் 6ஆவது அறிக்கையில் அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக முதன்முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மருத்துவமனைக்கு நலம் விசாரிக்க விரைந்துள்ளார்.

சிபிஎம் பாலகிருஷ்ணன் இரவு 8.45 அளவில் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

முன்னதாக, 10வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை நேரில் பார்க்க அவரது மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.

திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி ,பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை சந்தித்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தோற்று காரணமாக சிகிச்சை எடுத்துவரும் கருணாநிதியை தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.

கடந்த வாரம் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு உள்ளிட்டவர்கள் கருணாநிதியின் உடல்நலன் குறித்து நலம் விசாரித்தனர்.

திமுக தலைவரின் உடல்நலன் பற்றிய மருத்துவ அறிக்கைகள் அவ்வப்போது வெளியாகி வந்தாலும், அவர் குணமாகி வீடு திரும்பும்வரை மருத்துவமனையைவிட்டுச் செல்லப்போவதில்லை என்ற முடிவில் திமுக தொண்டர்கள் சிலர் ஆழ்வார்பேட்டையில் காத்திருக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :