8 வழி சாலைக்கு எதிரான நடை பயணத்துக்கு தடை: கம்யூனிஸ்ட் கட்சியினர் நள்ளிரவில் கைது
சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிடக் கோரி நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று நள்ளிரவில் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

பட மூலாதாரம், facebook
சேலம்- சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலையிலிருந்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று புதன்கிழமை காலையில் தொடங்கிய நடை பயணத்தை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.
என் நிலம் என் உரிமை என்ற கோஷத்தை முன்வைத்து விவசாயத்தையும் வாழ்க்கையை நாசமாக்கும் பசுமைவழிச் சாலை திட்டத்தை கைவிடக்கோரியும் திருவண்ணாமலை முதல் சேலம் வரை விவசாயிகள் நடைபயணமாக செல்லும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்:
போலீஸ்துறை இந்த நடைபயணத்துக்கு அனுமதி மறுத்ததுடன், வழி நெடுகிலும் போலீசாரைக் குவித்து நடை பயணத்தை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனையும் மீறி சிபிஎம் கட்சி சார்பில் எழுச்சி மிகுந்த பாடல்களுடன் நடை பயணத்தை திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பிருந்து தொடங்கினர்.

கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விரைந்து சென்று சென்னை துறைமுகம் சேருவதற்காக இந்த எட்டு வழிச்சாலை அமைக்கப்படுவதாக பொது மக்கள் விவசாயிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பல கட்சிகளும் இயக்கங்களும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சிபிஎம் கட்சியின் சார்பில் நடைபயணம் அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே உள்ள சாலைகளை சீர்படுத்த வேண்டும். 8 வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு விரோதமான 8 வழிச்சாலை குறித்துப் பேசினாலும் கூட்டம் நடத்தினால் கைது செய்யப்பட்டு வரும் நிலையை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. காவல் துறையின் தடையை மீறி நடைபயணம் மேற்கொண்ட 500 க்கும் மேற்பட்டோர் அரை கிலோ மீட்டர் தூரத்தில் காவல் துறையால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்கவைக்கப்படனர்.

இப்பயணம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் கருத்து தெரிவித்த போது,திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் மாவட்ட விவசாய விளை நிலங்களை கிணறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களை விளைநிலங்களை அழித்து ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 273 .3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழிச்சாலை அமைக்க அரசு தயாராகி வருகிறது என்று சிபிஎம் தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்த நடை பயணத்தில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டு மத்திய குழு, மாநில செயற்குழு, மாநில குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடைபயணத்தை அனுமதியுங்கள் அல்லது ரிமாண்ட் செய்யுங்கள். விடுதலை செய்தால் மீண்டும் நடை பயணத்தை தொடர்வோம் என்று கே பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதனால் காவல்துறையினர் காலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்காமல் மண்டபத்திலேயே வைத்திருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் விடுவிக்கப்பட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் திடீரென மண்டபத்தில் இருந்து வெளியேறியவுடன் நடைபயணத்தை தொடங்கினர். இதனை தொடர்ந்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மத்தியகுழு உறுப்பினர் உறுப்பினர் வாசுகி உள்ளிட்ட 130 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












