கருணாநிதி: உடல்நலக் குறைவின் தொடக்கம் முதல் இன்றைய நிலை வரை
உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு 28ஆம் தேதி ஜூலை அதிகாலையில் காவேரி மருத்துவமனையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டின் துவக்கம் என்ன?

2016ஆம் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்த நிலையிலும் மிகத் தீவிரமாகவே அரசியல் பணிகளில் ஈடுபட்டுவந்தார் கருணாநிதி. தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அறிக்கைகளை வெளியிடுவது, கருத்துக்களைத் தெரிவிப்பது என அவரது தினசரி நிகழ்வுகள் இருந்தன.
2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாநிதி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்க்க ஆரம்பித்தார். ஒவ்வாமையின் காரணமாக உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தன.
அக்டோபர் 25ஆம் தேதி இது தொடர்பாக அதிகாரபூர்வமான அறிக்கை வெளியிடப்பட்டது. "தலைவர் கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்கள். மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் தலைவர் கலைஞர் அவர்களை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் தலைவர் கலைஞர் அவர்களைக் காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
கருணாநிதி, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனைச் சந்திக்கும் படங்கள் வெளியாயின.
இந்த நிலையில், அதே ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியன்று ஊட்டச்சத்துக் குறைபாட்டின் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து 7ஆம் தேதியன்று வீடு திரும்பினாலும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் டிசம்பர் 15ஆம் தேதியன்று மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதிக்கு 'ட்ராக்யோஸ்டமி' செய்யப்பட்டு, குழாய் பொருத்தப்பட்டது.
இதற்குப் பிறகு அவ்வப்போது தலைவர்கள், அவரை வந்து சந்திக்கும் படங்கள் வெளியிடப்பட்டுவந்த நிலையில், 2017ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்தார் கருணாநிதி. பிறகு, கோபாலபுரத்தில் நடந்த திருமணம் ஒன்றிலும் கருணாநிதி பங்கேற்றார்.

நவம்பர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோதி கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து கருணாநிதியையும் அவரது மனைவி தயாளு அம்மாளையும் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார்.
இதன் பிறகு 2017ஆம் டிசம்பர் 17ஆம் தேதி தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதி நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தந்தார்.
இதற்குப் பிறகு, அவ்வப்போது தலைவர்கள் கருணாநிதியை சந்தித்துப்பார்க்கும் படங்கள் வெளியாகிவந்தன. ஜூன் 3ஆம் தேதி அவரது பிறந்த நாளன்று வீட்டின் வாசலுக்கு வந்து, கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தார் கருணாநிதி.
இதற்குப் பின் ஜூலை 18ஆம் தேதியன்று, அவருடைய ட்ரோக்யோஸ்டமி குழாயை மாற்றுவதற்காக காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பிறகு வீடு திரும்பினார்.

ஆனால், ஜூலை 24ஆம் தேதி மாலையிலிருந்தே அவரது உடல்நலம் குறித்த செய்திகள் வதந்திகளாகப் பரவ ஆரம்பித்தன. ஜூலை 26ஆம் தேதியன்று காவேரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நலம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அவருக்கு சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் காய்ச்சல் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அவருக்கு வீட்டிலிருந்தபடியே சிகிச்சையளிக்கப்பட்டவருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து அவரது நலம் விசாரித்துச் சென்றனர்.
அவரது உடல்நலம் மேம்பட்டு வருவதாக மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் தெரிவித்துவந்த நிலையில், 27ஆம் தேதி மாலையில் அவரது உடல்நலத்தில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அவரது ரத்த அழுத்தம் குறைந்தது.
இதையடுத்து 28ஆம் தேதி அதிகாலை ஒன்றரை மணியளவில் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதியின் உடல் நலம் சீரடைந்திருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன.
இதற்குப் பிறகு தொண்டர்கள் ஆசுவாசமடைந்தனர். ஆனால், 29ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அதிர்ச்சி தரத்தக்க தகவல்கள் வெளியாக ஆரம்பித்தன. இதையடுத்து தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் காவேரி மருத்துவமனை முன்பாக குவிய ஆரம்பித்தனர்.
மருத்துவமனையிலிருந்து அறிக்கையோ, கட்சித் தலைவர்களிடமிருந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்த தகவல்களோ வெளியாகாத நிலையில், மருத்துவமனைக்கு வெளியில் அதிகரித்த கூட்டம், "எழுந்து வா.. எழுந்து வா.." என முழங்கங்களை எழுப்ப ஆரம்பித்தது.

பிறகு சுமார் 9.30 மணியளவில், வெளியான மருத்துவ அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான் என்றும் தற்போது அந்த நிலை சரிசெய்யப்பட்டு, உடல்நலம் மேம்பட்டுவருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டது.
அதற்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருணாநியை சந்திக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
ஒன்றாம் தேதி முற்பகலில் தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கருணாநிதியின் உடல்நலம் சீரடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












