கருணாநிதி: நள்ளிரவை உலுக்கிய "எங்கள் தலைவா எழுந்து வா" முழக்கம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் ஞாயிற்றுக்கிழமை மாலை மிக மோசமானதை அடுத்து, மருத்துவமனை முன்பு குவிந்த தி.மு.க. தொண்டர்கள் இரவு முழுதும் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
ஞாயிற்றுக்கிழமை காலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கருணாநிதியை நேரில் பார்த்து, குடும்பத்தினரிடம் நலம் விசாரித்த புகைப்படம் வெளியான நிலையில், தி.மு.க. தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்திருந்தனர்.

ஆனால், மாலை ஆறு மணியளவில் அவரது உடல்நலம் குறித்து வேறுவிதமான தகவல்கள் பரவ ஆரம்பித்தன. இதையடுத்து மிக வேகமாக தி.மு.க. தொண்டர்கள் மருத்துமனை முன்பு குவிந்தனர். மாலை 7.30 மணியளவில் மருத்துவமனையின் வாயில் பகுதி முழுவதும் தி.மு.க. தொண்டர்களின் தலை மட்டுமே தென்பட்டது.
கருணாநிதியின் உடல்நலம் மோசமடைந்தது என்ற செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பிக்க, மருத்துவமனை முன்பு கோஷங்கள் எழத் துவங்கின.
"எழுந்து வா.. எழுந்து வா.. எங்கள் தலைவா எழுந்து வா..", "எழுந்து வா.. எழுந்து வா.. அண்ணாவின் தம்பியே எழுந்து வா.." என்ற கோஷங்களை மாறிமாறி தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து எழுப்ப ஆரம்பித்தனர்.

பட மூலாதாரம், Ezhilan Naganathan/Facebook
பல தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அழுதபடி இந்த கோஷங்களை எழுப்பிக்கொண்டேயிருந்தனர். இதற்கிடையில் மழையும் பெய்ய ஆரம்பித்தது.
இந்த நிலையில் இரவு ஒன்பதே முக்கால் மணியளவில் காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையில் கருணாநிதியின் உடல்நலம் பின்னடைவைச் சந்தித்தது உண்மை தான் என்றாலும் தற்போது மருந்துகளின் உதவியால் அவரது உடல்நலம் மேம்பட்டுவருவதாக கூறப்பட்டிருந்தது.
இந்த மருத்துவ அறிக்கையில் இருந்த தகவல்கள் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு விதமாக ஒளிபரப்பாக, கோஷம் இன்னமும் ஓங்கி ஒலிக்கத் துவங்கியது. பிறகு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கருணாநிதியின் உடல் நலம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
இதற்குப் பிறகு தொண்டர்கள் கூட்டத்தில் பதற்றம் குறைந்து ஆசுவாசம் ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டுமல்ல, கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை இரவிலிருந்தே அங்கு குவிந்திருக்கும் தொண்டர்கள், ஒவ்வொரு இரவும் இதுபோல தொடர்ந்து கோஷங்களை எழுப்பிவருவதோடு, சாலையில் அமர்ந்து பாடல்களையும் பாடிவருகின்றனர்.
தி.மு.க. தொண்டர்களின் இந்தச் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் ஆச்சரியத்துடன் விவாதிக்கப்பட்டுவருகிறது.
கருணாநிதியின் மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் எழிலன், தொண்டர்களின் படத்தை வெளியிட்டு "மூன்று இரவுகள் தூங்காமல் .. வாழ்க வாழ்க வாழ்கவே என்று உயிர் பொங்க குரல் எழுப்பும் தொண்டர்களே நீங்கள் தான் கலைஞரின் உண்மையான மருத்துவர்கள் ..." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வெளிநாடுகளில் வசிக்கும் தி.மு.க. தொண்டர்களும்கூட தமிழகம் திரும்பி, மருத்துமனை முன்பாக காத்திருந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












