You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எண்ணற்ற வசவுகள், ஏராளமான எதிரிகள் - கருணாநிதியின் ஒரே பதில் இதுதான்
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நீங்கள் அவரை நேசிக்கலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால், அவரின் ஆளுமையை, சாதனையை நீங்கள் முற்றிலும் மறுக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது என சிலர் குறித்து எடுத்துரைக்கும்போது குறிப்பிடுவர்.
அப்படி ஒரு மறுக்கமுடியாத ஆளுமை காவேரி மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தனது இறுதிமூச்சை நிறுத்தியபோது, இறுதிவரை போராடிய அவரது போராட்ட குணம் கடைக்கோடி தமிழக இளைஞனை வியப்பில் ஆழ்த்தியது.
கருணாநிதிக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோதான் கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியல் களம் இயங்கி வந்துள்ளது.
தமிழக அரசியலில் மறுக்கமுடியாத ஒருவராக கருணாநிதி இருந்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் இவரை வசைபாடினால் அரசியலில் கவனிக்கப்படுவோம் என்று மாற்று கட்சியினர் ஆரம்பித்தனர். தற்காலத்தில் சமூகவலைத்தளங்கள் பிரபலமான பிறகு, இவர் குறித்து எழுதப்பட்ட பதிவுகளும், மீம்களும் ஏராளம்.
எண்ணற்ற வசவுகள், ஏராளமான எதிரிகள் - அவரை வசைபாடினால் அரசியலில் கவனிக்கப்படுவோம் என பலர் கருணாநிதியை எதிர்க்க, எல்லாவற்றுக்கும் அவர் பதில் அளிப்பதில்லை. அவரின் செயல்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகளே எதிர்ப்பாளர்களுக்கு பதிலாக அமைந்தது.
இலங்கையில் உள்நாட்டு போர் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, தமிழக முதல்வராக இருந்த அவர், மத்திய அரசில் பங்குவகித்தபோதும் இலங்கை தமிழர்களை காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
துரோகம் செய்து விட்டார் என்ற ரீதியில் அரசியல் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் அவர் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக 13 ஆண்டுகளுக்கு பிறகு வராத மாமணியாய் கிடைத்த ஆட்சியை இழந்தவர் ஆயிற்றே? அவரையா சொல்கிறீர்கள் என்றார்கள் அவரை அறிந்தவர்களும், அவர் ஆதரவாளர்களும்.
ஆனாலும், எதிர்ப்பாளர்களின் எதிர்வினைகள் இன்னமும் தொடர்ந்தது. மீண்டும் டெசோ அமைப்பை உயிரூட்டி இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், போருக்கு பிந்தைய நிலையில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் அவர் பேசியவை எள்ளி நகையாடப்பட்டது.
ஆனாலும், அவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தனது இலக்கை மட்டுமே எண்ணமாக கொண்டிருந்தார்.
ஒரு காலகட்டத்தில் தமிழினத் தலைவர் என்றழைக்கப்பட்டவர் தமிழினத் துரோகி என சமூகவலைதளங்களில் பதிவிடும் ஒருசிலரால் அழைக்கப்பட்டது காலசுழற்சி தந்த மிக மோசமான பரிசு எனலாம்.
1970களில் தனது பிறந்தநாள் கூட்டம் ஒன்றில் பேசிய கருணாநிதி, 'தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாகதான் மிதப்பேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் கவிழ்ந்து விடமாட்டேன்' என்று குறிப்பிட்டார்.
அக்காலகட்டத்தில் சிலாகிக்கப்பட்ட இந்த வரிகள், தற்காலத்தில் சமூகவலைத்தளங்களில் சிலரால் எள்ளி நகையாடப்படுகிறது. பரிகாசம் செய்பவர்கள் இந்த வரிகளின் வலிமையை அறிந்தவர்களா அல்லது கிண்டல் செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே கொண்டவர்களா?
கருணாநிதியை இயக்கியது எது?
எல்லா விமர்சனங்களையும் தாண்டி கருணாநிதி தொடர்ந்து இயங்கியது எதனால் என்பது பற்றி அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''கலைஞர் கருணாநிதி ஒரு கடும் உழைப்பாளி. நல்ல படிப்பாளியும்கூட. அயராத போராட்டக்குணம் கொண்டவர். இது எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த அம்சம் என்று தெரிவித்தார்.
அதிமுகவுக்கு நேர் எதிரான கட்சி திமுக என்ற போதிலும் தற்போதைய சூழலில் அவரின் பெருமைகள் மற்றும் சிறப்புகள் பற்றி பேசுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன் என்று வைகைச்செல்வன் மேலும் தெரிவித்தார்.
தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கருணாநிதி எவ்வாறு கையாண்டார் என்று கேட்டதற்கு ''அதை பற்றி கவலைப்படாமல் தான் தோற்றாலும், வென்றாலும் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று உழைக்கும் அவரது பாங்கு யாரையும் வியக்க வைக்கும். ஒய்வு என்பது இல்லாமலே செயல்பட்டு வந்தார்'' என்று வைகைச்செல்வன் தெரிவித்தார்.
''தமிழக அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் அவர் ஆர்வமாக செயல்பட்டு வந்தார். மேலும், இலக்கியம், சினிமா, புத்தகம் எழுதுவது என அனைத்து தளங்களிலும் அவர் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இது எப்படி முடிந்தது? எப்போதும் போதும் என்று எண்ணாமல் போதாது என்று அவர் தொடர்ந்து இயங்கியதால் அவரால் இந்த அளவு சாதிக்க முடிந்தது'' என்று கூறினார்.
கருணாநிதியை இயக்கியது சமூகநீதிக்கான போராட்டம்
தன் மீது சுமத்தப்படும் தொடர் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளை தாண்டி கருணாநிதியை இயக்கியது எது என்பது குறித்து வழக்கறிஞரும், பெண்ணியவாதியுமான அருள்மொழி பிபிசி தமிழிடம் உரையாடினார்.
''சமூகத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள்தான் கருணாநிதியை ஆரம்பத்தில் அரசியல் களம் நோக்கி ஈர்த்தது.நீண்ட காலமாக அவர் இந்த ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து கடுமையாக போராடியுள்ளார்'' என்று நினைவுகூர்ந்தார்.
''தொடர்ந்து நிலவிவரும் இந்த சாதிய பாகுபாட்டை அகற்றுவதை நோக்கமாக அவர் கொண்டுள்ளதால், இந்த காரணம்தான் அவரை தன் மீதான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளை மீறி போராட வைத்தது'' என்று அருள்மொழி தெரிவித்தார்.
மேலும், அவரது இயல்பான போராட்ட குணமும் அவரை இயக்கிய முக்கிய காரணி என்று அருள்மொழி குறிப்பிட்டார்.
பள்ளிப்படிப்பைகூட நிறைவு செய்யாத கருணாநிதி, அவரது பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றலுக்கு புகழப்பட்டது, எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டப்படுவது, கற்றுக் கொள்ள வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற அவரின் தீராத வேட்கையை பறைசாற்றுகிறது.
ஆனால், அவரின் சிறப்புகள், சாதனைகள், அவர் விட்டுச்செல்லும் பாரம்பரியத்தை, உண்மையை ஆராய முற்படாமல், தங்களுக்கு வரும் பதிவுகளை பகிரும் சமூகவலைதளவாசிகள் அனைவரும் அறிவார்களா என்பது சந்தேகமே.
கருணாநிதி தனது தொண்டர்களுக்கு ஒரு முறை எழுதிய மடலில் என் கடன் எப்போதும் பணி செய்து கிடப்பதே என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆம், அப்படிதான் அவர் வாழ்ந்தார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி பயணம் செய்தார். அவர் மறைந்த இச்சூழலில், அவர் விட்டுச் சென்ற கொள்கைகள் அவரின் தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அதையே வலியுறுத்துகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :