கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம்; வதந்திகளை நம்பவேண்டாம்: மு.க. ஸ்டாலின்

கருணாநிதியின் உடல்நலம் மேம்பட்டுவருவதாகவும் அவருக்கு காய்ச்சல் குறைந்துவருவதாகவும் திராவிட முன்னேற்ற கழக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN

வெள்ளிக்கிழமை மாலையில் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், 'கருணாநிதியின் உடல் நலம் குறித்து விஷமிகள் பரப்பும் செய்திகள் எதையும் தி.மு.கவினரும் அவரது உடல் நலனில் அக்கறை கொண்டு விசாரித்துவரும் மாற்றுக்கட்சியினரும் நம்ப வேண்டாம்' எனக் கூறியுள்ளார்.

மேலும், "அவருக்கு அளிக்கப்பட்டுவரும் தொடர் சிகிச்சைகளின் காரணமாக, அவரது உடல்நலன் மேம்பட்டுவருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் அவரைக் கவனித்துவருகின்றனர். விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளுக்கு செவிமெடுக்க வேண்டாம். அவற்றை நம்பவும் வேண்டாம்" என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதற்கு முன்பாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "அவருக்கு காய்ச்சல் குறைந்திருக்கிறது. நோய்த் தொற்றும் குறைந்திருக்கிறது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் செய்தியில், 'தலைவருக்கு மிகச் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவர் விரைவில் குணமடைந்து, எல்லோருக்கும் அவரே நன்றி சொல்வார்' என்றும் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி

நேற்றைப் போலவே இன்றும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு பல தலைவர்கள் வருகை தந்து நலம் விசாரித்தனர்.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, தா. பாண்டியன் உள்ளிட்டவர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் நலனை விசாரித்துச் சென்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் தொலைபேசி மூலம் கருணாநிதியின் நலனைக் கேட்டறிந்தனர்.

மதுரையில் வசித்துவந்த கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி இன்று காலையில் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து கருணாநிதியைப் பார்த்தார். அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கோடு
கோடு

கோபாலபுரம் இல்லத்திற்கு முன்பாக கூடியிருக்கும் தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதியின் வீட்டிலிருந்து வெளியே வருபவர்களிடம் கருணாநிதியின் நலன் குறித்து ஆர்வத்துடன் கேட்டுவருகின்றனர்.

இதற்கிடையில், மாநகராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து பல்வேறு இடங்களில் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. கட்சித் தலைவர் கவலைக்கிடமாக இருக்கும் நிலையிலும் தி.மு.க. போராட்டங்களை நடத்துவது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :