You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேரிடர் பயிற்சியில் மாணவி சாவுக்கு காரணமானவர்: `7 ஆண்டுகளில் ஆயிரம் கல்லூரிகளை ஏமாற்றியவர்'
கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுக்கும் போது பாதுகாப்பு கருவிகள் ஏதுமின்றி பயிற்சியாளர் மாடியில் இருந்து தள்ளியதில் மாணவி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரூர் ஆய்வாளர் மனோகரன், ஆலாந்துறை ஆய்வாளர் தங்கம் ஆகிய இருவர் அடங்கிய தனிப்படையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் இந்த சம்வத்தின் புலனாய்வு குறித்து கேட்டபோது, பல்வேறு தகவல்களை தெரிவித்தனர்.
போலி ஆவணங்கள் பற்றி விசாரணை
கோவையில் மாணவி லோகேஸ்வரியின் மரணத்திற்கு காரணமான ஆறுமுகம் என்பவர் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தை சேர்ந்தவர் அல்ல என்பதும், கல்லூரிக்கு அவர் அனுப்பிய கடிதங்கள் அனைத்தும் போலியானவை என்பதும் வெள்ளிக்கிழமை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இது போன்ற முறைகேடான ஒத்திகைகளை இவர் தனியாக செய்கிறாரா அல்லது இவர் உட்பட ஒரு குழுவாக பல்வேறு கல்லூரிகளில் இது போன்ற ஒத்திகைகள் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஆறுமுகம் தொடர்பான படிப்பு, பணி, முந்தைய பயிற்சிகள்,அவரின் பின்னணி தொடர்பான ஆவணங்கள் ஆகியவை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதில் ஆறுமுகத்துடன் இருந்ததாக கூறப்படும் சதீஷ், கோபாலகிருஷ்ணன், வினிதா ஆகியோரிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில் சனிக்கிழமை அசோக் மற்றும் தாமோதர் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த 5 பேரும் ஆறுமுகத்துடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற வகையிலும் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசோக் மட்டும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆறுமுகத்தின் பின்னனி
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்துள்ளார்.
இதனால், தன் வாழ்வாதரத்திற்காக இவர் திருநெல்வேலியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
போலியோ பாதிப்பால் இடது கால் சற்று ஊனமாக இருப்பதால் அதிக நேரம் நிற்க முடியாது என்பதற்காக அந்த கடையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
பிறகு மற்றொரு நபரின் உதவியுடன், கன்னியாகுமரியில் உள்ள பள்ளியில் வார்டனாக சேர்ந்துள்ளார். அதற்கு பிறகான ஆறுமுகத்தின் வாழ்க்கைதான் மர்மமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளை தொலைதூர கல்வியில் படித்ததாக காவல்துறை விசாரணையில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு முதல் தேசிய பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பி பாதுகாப்பு ஒத்திகையையும் நடத்தி வந்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு முதல் 1,047 கல்லூரிகளுக்கு இது போன்று நடத்தியுள்ளதாகவும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இவருக்கு உடந்தையாக...
போலியான லெட்டர் ஹெட் தயாரிக்க ஆறுமுகத்திற்கு உதவியதாக, ஈரோட்டை சேர்ந்த அசோக் மற்றும் தாமோதரன் ஆகியோரை காவல்துறையினர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதையை நிலையில், ஆறுமுகத்திற்கு உதவியாக படித்து வேலையில்லாமல் இருக்கும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என 3 பேர் உள்ளனர்.
அரசு தேர்வுகள் எழுதும்போது , இது போன்ற பயிற்சியில் உதவியதாக குறிப்பிட்டால், கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் போன்ற போலி ஆசை வார்த்தைகள் கூறி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
மிக முக்கியமாக, 2011ம் ஆண்டுக்கு முன் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நடத்திய வேறு ஒரு குழுவில் ஆறுமுகம் வேலை செய்து வந்துள்ளதாகவும், அந்த குழுவை சேர்ந்த நபர்கள் யார்? அவர்கள் உண்மையிலேயே தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பை சேர்ந்தவர்கள் தானா போன்ற விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அறிக்கை கோரிய பல்கலைக்கழகம்
கோவையில் கல்லூரி மாணவி பேரிடர் கால தற்காப்பு பயிற்சியின்போது இறந்தது குறித்து பாரதியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் சரவணச்செல்வன் பிபிசி யிடம் தெரிவித்தபோது, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 121 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக கல்லூரிகளில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறப்படுவதில்லை என்றார்.
ஒவ்வொரு கல்லூரிகளிலும் தேசிய சேவை திட்டம் (என். எஸ். எஸ்) உள்பட என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்பது குறித்து ஒரு பொதுவான அனுமதியை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.
அதிகமான கல்லூரிகள் இருப்பதாலும், மாதத்திற்கு ஒருமுறை பல்வேறு கல்லூரிகளில் பலவிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாலும் தனித்தனியாக அதற்கான அனுமதியை கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம் பெறும் வழக்கம் இல்லை.
என். எஸ். எஸ். நிகழ்ச்சியை நடத்துவதற்கு பல்கலைக்கழகத்தின் என். எஸ். எஸ். ஒருங்கிணைப்பாளர் கல்லூரிகளின் என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவார்.
பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பயிற்சிகளும் கல்லூரி மாணவ மாணவியருக்கு பொதுவாக அனுமதிக்கப்படும். கல்லூரியில் பேரிடர் மேலாண்மை தற்காப்பு பயிற்சியை நடத்தியது குறித்தும் கல்லூரி நிர்வாகத்திடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை சென்னையில் உள்ள என். எஸ். எஸ். மண்டல அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு பிறகு வழங்கப்படும் அறிக்கையை பொறுத்து, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
தற்போது பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பில் யாரும் இல்லாததால் துணைவேந்தர் குழு அறிக்கையில் ஆய்வு மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் சரவணச்செல்வன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்