You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவின் மின்சார தேவைக்கு தீர்வு கண்ட அமெரிக்க மாணவி
மானசா மெண்டு எனும் இந்த சிறுமிக்கு 15 வயதுதான் ஆகிறது. ஆனால், இவரது சாதனையை உலகமெங்கும் உள்ள மில்லியன்கணக்கானோர் போற்றுகின்றனர். அதற்கு என்ன காரணம் தெரியுமா?
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்த இந்த சிறுமி, வளரும் நாடுகளின் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ள மின்சார தேவையை தீர்க்கும் எளிமையான வழியை கண்டறிந்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்புக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் முன்னணி இளம் விஞ்ஞானிக்கான போட்டியில் முதல் பரிசையும் வென்றுள்ளார்.
ஆனால், வல்லரசு நாடான அமெரிக்காவில் வாழும் ஒரு சிறுமி உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டறிந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
தன்னுடைய குடும்பத்துடன் இந்தியா சென்றிருந்தபோது, முதல்முறையாக ஆயிரக்கணக்கான மக்கள் நாள் முழுவதும் எப்படி மின்வசதி இல்லாமல் வாழ்கிறார்கள் என்பதை நேரில் கண்டதாக மானசா கூறுகிறார்.
மானசாவை சிந்திக்க வைத்தது அவரது இந்திய பயணம். அவர் அமெரிக்காவிற்கு திரும்பிய பிறகு, வெறும் ஐந்து டாலர் செலவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு மின்சாரத்தை கொடுக்கும் கருவி உருவாவதற்கு காரணமாக அமைந்தது.
"உலகின் பெரும்பாலானோருக்கு இருட்டே நிரந்தரமான வாழ்க்கையாக உள்ளது" என்று பிபிசியிடம் கூறிய மானசா, "நான் அந்த சூழ்நிலையை மாற்ற விரும்பினேன்" என்கிறார்.
இந்தியாவில் மின்சாரம் இல்லாமல் இருக்கும் சுமார் 50 மில்லியன் வீடுகளின் நிலையை மாற்றும் யோசனையை மானசா செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
"ஹார்வெஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை செயல்பாட்டிற்கு கொண்டுவந்து உலகம் முழுவதும், குறிப்பாக வளரும் நாடுகளை சேர்ந்த மக்களுக்கு மின்சாரத்தை கொடுப்பதே இதன் நோக்கம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
இவர் உருவாக்கியுள்ள கருவி, காற்று, மழை மற்றும் சோலார் தகடுகளின் மூலம் மின்னாற்றலை உருவாக்கும் திறன் படைத்தது.
மின்னாற்றலை உருவாக்குதல்
"எரிசக்தி சேகரிப்பில் வியத்தகு நிகழ்வான அழுத்த மின் விளைவை பயன்படுத்தி எனது பரிசோதனையை தொடங்கினேன்."
அழுத்த மின் விளைவு உபகரணங்கள் இயந்திர அதிர்வுகளை மின்சாரமாகவும், மின்சாரத்தை இயந்திர அதிர்வுகளாகவும் மாற்றும் திறன் கொண்டது.
காற்றினால் ஏற்படும் அதிர்வுகளை மின்னாற்றலாக மாற்றும் கருவியை முதலில் உருவாக்கிய மானசா, அதன் பிறகே "சோலார் தகடுகளை" பதித்து அதன் மூலமும் மின்சாரத்தை உருவாக்கும் வகையில் தனது கண்டுபிடிப்பை மேம்படுத்தினார்.
"நேரடி இயந்திர அதிர்வுகளை மின்னாற்றலாக மாற்றுவதற்கு மட்டுமல்லாமல், காற்று போன்ற மறைமுக அதிர்வுகளில் இந்த விளைவை ஏன் பயன்படுத்த கூடாது என்ற எண்ணம் எழுந்தது."
"எனவேதான், நான் அழுத்த மின் விளைவை காற்றில் பயன்படுத்தி அதை மின்சாரமாக மாற்ற முடிவு செய்தேன்."
"இந்த கருவியை சோலார் தகடுகளாக பயன்படுத்தியும் மின்சாரத்தை பெற முடியும்."
தான் கண்டுபிடித்த கருவியை வர்த்தக ரீதியாக வெற்றிபெற செய்வதே தனது லட்சியம் என்று இவர் கூறுகிறார்.
"மின்சாரத்தை உருவாக்குவதற்கான மூலங்களை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சிக்கான தெரிவுகளை அதிகப்படுத்த முடியும்."
புதிய சவால்கள்
"எனக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே இதற்கான நிதியை உருவாக்கி, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சரியான பங்குதாரரை தேடுவதுதான்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
"2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஹார்வெஸ்ட் கருவி குறைந்தளவிலான எரிசக்தியை உற்பத்தி செய்தது. நான் அப்போதே இந்த கண்டுபிடிப்பை எளிதாக அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், நடைமுறை சாத்தியம் உள்ளதாகவும் மற்றும் மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை உருவாக்கினேன்."
மற்ற கண்டுபிடிப்பாளர்களுக்கு உங்களது ஆலோசனை என்ன?: "உங்களது கண்டுபிடிப்புக்காக தொடர்ந்து போராடுங்கள்."
"சிலநேரங்களில் நாம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம், நமது மீதே நமக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம், நமது கண்டுபிடிப்புகளை மற்றவர்கள் நம்பாமல் போகலாம்."
"ஆனால், இங்கு மிக முக்கியமான விடயமே நமது யோசனையை நாம் முதலில் நம்புவதுதான். உங்களால் ஒரு மாற்றத்தை உண்டாக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியாமலே இருக்கலாம். எனவே, என்னைப்பொறுத்தவரை உங்களது அதிர்ஷ்டத்தை முயற்சித்து பார்ப்பது எனது மிகவும் முக்கியமான விடயமாகும்."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :