காஷ்மீர் கூட்டணி முறிவு: அமைதிக்கான ஒரே வாய்ப்பை இழந்துவிட்டதா இந்தியா?
- எழுதியவர், சுமந்திரா போஸ், பேராசிரியர்
- பதவி, லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் சயின்ஸ்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மூன்றாண்டுகளாக செயல்பட்டு வந்த மஜத-பாஜக கூட்டணி அரசு முறிந்தது இந்தப் பிராந்தியத்தின் அமைதி முயற்சிகளுக்கு பெரிய இழப்பு.

பட மூலாதாரம், Pdp pro
மாநிலக் கட்சியான மக்கள் ஜனநாயக கட்சிக்கும் (மஜக), மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையில் உருவான 'இயற்கைக்கு மாறான' கூட்டணி என்று சொல்லப்பட்ட கூட்டணியே அமைதி முயற்சியின் முன்னேற்றத்துக்கான ஒரே வழியாக இருந்தது.
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் மக்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் மீட்பது என்ற நோக்கத்தின் அடிப்படையில் 1999ல் தோற்றுவிக்கப்பட்ட, மாநில சுயாட்சிக்கு ஆதரவான மக்கள் ஜனநாயகக் கட்சியும், 1950களில் இருந்து காஷ்மீர் பிரச்சினையில் ஒழுக்கவாத அணுகுமுறையை கடைபிடித்து வரும் ஹிந்து தேசியவாதக் கட்சியான பாஜகவும் எப்படி சகவாசம் செய்ய முடியும்? எப்படி ஒருங்கிணைந்து வேலை செய்ய முடியும்? என்றெல்லாம் கேட்கப்பட்டது.
இது குறித்த குழப்பமும், செய்யப்பட்ட கேலியும் ஒரு இன்றியமையாத கோணத்தை பார்க்கத் தவறுகின்றன. காஷ்மீர் விவகாரத்தில் இரு முற்றிலும் மாறுபட்ட பார்வையுடைய அமைப்புகளின் பங்கேற்பு என்ற வகையில் பாஜக-மஜக கூட்டணியின் இந்த இயற்கைக்கு மாறான தன்மையே அதன் ஆக்கபூர்வமான கூறு ஆகும்.
ஒன்றுக்கொன்று பொருந்தாத நோக்கங்களைக் கொண்ட பரம எதிரிகள் பங்கேற்று, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முன்னுதாரணங்கள் சர்வதேச அளவில் உண்டு.
இத்தகைய ஒரு கூட்டணியே வடக்கு அயர்லாந்தில் நீடித்த முப்பதாண்டுகால வன்முறைக்கு 1998க்குப் பிறகு முடிவுகட்டியது. இதன் விளைவாக, சின் ஃபெய்ன் மற்றும் டெமாக்ரடிக் யூனியனிஸ்ட்ஸ் என்ற இரண்டு மாறுபட்ட நிலைப்பாடு உடைய கடும்போக்குவாதக் கட்சிகள் கூட்டாக இணைந்து 2007 முதல் ஏறத்தாழ பத்தாண்டுகாலம் ஆட்சி செய்தன. ஒரு காலத்தில் இத்தகைய கூட்டணியை நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது.
அரசு மாறுகைக் கால ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்காக தென்னாப்பிரிக்காவில் அப்போது இருந்த நிறவெறி அரசோடு பேச்சுவார்த்தை நடத்தியதை நியாயப்படுத்த நெல்சன் மண்டலே இப்படிக் கூறினார்: "எதிரிகளோடுதான் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். நண்பர்களோடு அல்ல".
காஷ்மீர் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய ஐந்து விஷயங்கள்
1. பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு சுமார் 70 ஆண்டுகளாக இந்தப் பகுதி குறித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தகராறு உள்ளது.
2. இரு நாடுகளுமே முழு பிராந்தியத்துக்கும் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், அதில் ஒரு பாகத்தைத்தான் கட்டுப்படுத்துகின்றன.
3. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த மூன்று போர்களில் இரண்டு காஷ்மீர் தொடர்பானதாகும்.
4. 1989 முதல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இப்பகுதியில் இந்திய ஆட்சிக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடந்துவருகிறது.
5. அதிக வேலையில்லாத் திண்டாட்டம், தெருவில் போராடுகிறவர்களையும், கிளர்ச்சியாளர்களையும் கையாள்வதில் பாதுகாப்புப் படையினரின் பலவந்தமான அணுகுமுறை பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது.

பட மூலாதாரம், Getty Images
2014ல் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத தொங்கு சட்டமன்றம் உருவான நிலையில், 2015 மார்ச்சில் கூட்டணி அரசு அமைந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மை வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிக இடங்களைக் கைப்பற்றிய மஜக-வும் இந்துக்கள் பெரும்பான்மை வசிக்கும் ஜம்மு பகுதியில் அதிக இடங்களைக் கைப்பற்றிய பாஜகவும் இந்தக் கூட்டணியின் பெரிய பங்காளிகள்.
87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் மஜக 28 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 25 இடங்களை வென்றது. இந்த பிளவுபட்ட மக்கள் தீர்ப்பு துயருற்ற காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிராந்திய அடையாளத்துக்கும், இந்து தேசியவாதக் கட்சியின் நோக்கங்களுக்கும் இடையில் ஒரு கூட்டணி உருவாக வழி வகுத்தது. இதற்கு ஏழு மாதங்களுக்கு முன்புதான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மத்தியில் ஆட்சி அமைத்திருந்தது.
திரைமறைவில் இரண்டு மாதம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகே இந்தக் கூட்டணி அரசு உருவானது. மாநிலத்தின் குளிர்காலத் தலைமையகமான ஜம்முவில் இந்த கூட்டணி அரசாங்கம் பதவியேற்றது. இந்திய தேசியக் கொடியும், ஜம்மு காஷ்மீர் மாநிலக் கொடியும் அலங்கரித்த மேசையின் பின்புறம் நின்று பிரதமர் நரேந்திர மோதியும் மஜக தலைவர் முஃப்தி முகமது சயீதும் கை குலுக்கினர்.
இந்திய மாநிலங்கள் பொதுவில் கொடி எதையும் கொண்டிருப்பதில்லை. எனவே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு என ஒரு கொடி இருப்பதை ஹிந்து தேசியவாதிகள் 1950 முதல் எதிர்த்துவருகின்றனர்.
மஜக-பாஜக கூட்டணிக்கு முன் இருந்த வாய்ப்பு
இந்தக் கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடனே பிபிசி தளத்தில் நான் எழுதிய கட்டுரையில் காஷ்மீர் பிரச்சினையின் கீழ்க்கண்ட முக்கியமான மூன்று அம்சங்களில் இரண்டை சீராக்கும் வாய்ப்பு இந்தக் கூட்டணிக்கு உண்டு என்று எழுதியிருந்தேன்.
1.காஷ்மீரின் பெரும்பான்மை மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் தோன்றிய கசப்பான பிளவு.
2.ஜம்முவின் இந்துக்களுக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் முஸ்லிம்களுக்கும் இடையே நிலவும் அவநம்பிக்கை.
காஷ்மீர் தொடர்பான இந்திய பாகிஸ்தான் பகைமைதான் மூன்றாவது அம்சம்.
விவரமான எழுத்துப்பூர்வ ஒப்பந்தமான 'கூட்டணித் திட்டம்' என்பதன் அடிப்படையிலேயே இந்தக் கூட்டணி அமைந்தது.
இந்திய ஒன்றியத்தில் ஜம்மு காஷ்மீருக்கு பெயரளவில் சிறப்பு தன்னாட்சித் தகுதி வழங்கியிருக்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவைப் பாதுகாக்கவும், ராணுவத்தினர் நினைத்தபடியெல்லாம் நடந்துகொள்ள வழி செய்யும் ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யவும் அந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
"கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு உள்ளேயும் அப்பாலும் (அதாவது பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருடன்) நல்லிணக்கத்துக்குத் தூண்டுகோலாக அமைவதும், நம்பிக்கையைக் கட்டி எழுப்புவதும், பாகிஸ்தானுடனான உறவை சீராக்க உதவுவதுமே இந்தக் கூட்டணியின் நோக்கம்," என்று அந்த ஒப்பந்தத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எல்லாம் இருந்தது... காகிதத்தில்
"எல்லோரையும் ஈடுபடுத்தும் அரசியல் வழியில், ஜனநாயகத்தின் எல்லையை விரிவுபடுத்தும் வகையில், கொள்கை வேறுபாடுகளைக் கடந்து, உள்நாட்டில் இந்தப் பிரச்சினையில் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்த, பொருளுள்ள பேச்சுவார்த்தையைத் தொடக்க இந்தக் கூட்டணி அரசு உதவி செய்யும்," என்றும் கூட்டணி ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.
"கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால்... அனைத்து தரப்பினருக்கும் இடையில்…" என்ற வாசகம் குறிப்பவை இந்திய நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீரில் செயல்படும் காஷ்மீர் விடுதலை கோரும் குழுக்கள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவுக் குழுக்களே ஆகும்.
போக்குவரத்து, வணிகம், சமூகத் தொடர்புகள் ஆகியவற்றை அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்துவதன் மூலம் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் இருபுறமும் உள்ள மக்களிடையே உறவினை வளர்க்கப் பாடுபடுவது தொடர்பாகவும் ஒப்பந்தத்தில் வாக்குறுதி இருந்தது.
காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான லட்சியம், செயல்திட்டம் இரண்டையும் சொல்லளவில் கொண்டிருந்தது மஜக-பாஜக கூட்டணி ஒப்பந்தம். அது காகிதத்தில் மட்டுமே இருந்தது. 2017ன் மத்தியப் பகுதியில் காஷ்மீர் இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் பேசும்போது இந்த ஒப்பந்தத்தை கழிவறைக் காகிதத்தின் அரசியல் வடிவம் என்று நான் பேசியபோது அந்த நகைச்சுவையை அவர்கள் ரசிக்கவில்லை.
முஃப்தியின் மரணத்தோடு முடிந்த வாய்ப்பு
கூட்டணியின் லட்சியம் மற்றும் செயல்திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியமெல்லாம் 2016 தொடக்கத்தில் முஃப்தி முகமது சயீத்தின் மரணத்தோடு முடிந்துவிட்டதோ என்று இப்போது தோன்றுகிறது.
தமது 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொது வாழ்வில் காஷ்மீர் மற்றும் இந்திய அரசியலில் தேர்ந்தவர் சயீத். 2002-2005 காலத்தில் காஷ்மீர் முதல்வராகவும், அதற்கு முன்பு 1989-90ல் மத்திய உள்துறை அமைச்சராகவும் இருந்தவர் அவர். கூட்டணி ஒப்பந்தத்தின் கூறுகளை பாஜக பின்பற்றும்படி செய்திருக்கவும், தவறும்பட்சத்தில் கூட்டணியை முடித்துவைத்திருக்கவும் அவரால் முடிந்திருக்கும்.

பட மூலாதாரம், AFP
1990களின் பிற்பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்களின் கண்ணியத்தைக் காப்பதற்கு ஆதரவான ஆவேசப் பேச்சாளராக அறிமுகமான அவரது மகள் மெகபூபா முதலமைச்சராக பெரிய அளவில் சறுக்கினார்.
2016க்குப் பிறகு மீண்டும் காஷ்மீரில் கொந்தளிப்பு உருவான நிலையில் செயல்படாத, முடங்கிப்போன கூட்டணி அரசை அவர் அப்படியே தொடர்ந்தார். கூட்டணியை பாஜக முறித்துக்கொள்ளும்வரை அது தொடர்ந்தது.
2019 ஏப்ரல்/மே மாதத்தில் இந்தியாவின் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் வலிமையாக காட்டிக் கொள்வதற்கான பாஜகவின் முயற்சியைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஏன் இயற்கைக்கு மாறான கூட்டாளியோடு மோதியின் கட்சி கூட்டணி வைக்க முடிவு செய்தது என்ற கேள்வி எழுகிறது.
மேலும் ஒரு மாநிலத்தில் அதுவும் இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலத்தில் ஆட்சியில் இடம் பெற பாஜக விரும்பியது என்ற விளக்கம் போதுமானதாக இல்லை.
வாஜ்பேயி அணுகுமுறைக்கு இடமில்லை
ஆனால், முந்தைய பாஜக பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி கடைபிடிக்க விரும்பிய ராஜீய அடிப்படையிலான, மென்மையான அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டாம் என்று மோதி முடிவு செய்தது தெளிவாகத் தெரிகிறது.
2010க்குப் பிறகு முதல்முறையாக 2016 ஆகஸ்டில் வெகுஜனக் கிளர்ச்சி காஷ்மீரில் உச்சத்தில் இருந்தபோது தில்லியில் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதனை வெறுமனே எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்று குறிப்பிட்டார் மோதி.
2017 ஏப்ரலில் ஜம்முவில் ஒரு அரசியல் கூட்டத்தில் பேசிய மோதி காஷ்மீரின் கோபக்கார இளைஞர்களை நோக்கி பயங்கரவதத்தை கைவிட்டு, சுற்றுலாவின் மூலம் வளர்ச்சியை முன்னெடுக்கச் சொன்னார் மோதி. ஒவ்வொரு இந்தியருக்கும் ஒருமுறையாவது காஷ்மீரில் பயணிக்க விருப்பம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காஷ்மீர் பிரச்சினையின் 70 ஆண்டுகால வரலாற்றின் குப்பைக் கூடையில் புதிதாக விழுந்தது மஜத-பாஜக கூட்டணி அரசு. ஆனால், 2015 ஆண்டு அவை ஒப்புக்கொண்ட கூட்டணித் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான லட்சியமும், செயல்திட்டமும் சிறந்த எதிர்காலத்துக்கான நடைமுறைச் சாத்தியமுள்ள பாதைதான். அத்தகைய ஒரு எதிர்காலத்தை அடைவதற்கு இயற்கைக்கு மாறான பல கூட்டாளிகளை யதார்த்த சமரசங்களோடு ஒன்றுபடுத்துவது அவசியமான ஒன்று.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












