ஸ்டெர்லைட்: ஒரு மாதத்துக்குப் பிறகும் தொடரும் கைதுகள், அச்சத்தில் மக்கள்
தமிழகத்தின் தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-ஆவது நாள் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பிறகும், தூத்துக்குடி மக்களிடம் அச்ச உணர்வு தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஆண்கள் பலர் ஊரை விட்டுச் சென்று வெளிமாவட்டங்களில் தலைமறைவாக வாழ்வதாக அவர்களது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த மே மாதம் 22 - ஆம் தேதி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியத்தில் 13 பேர் உயிரிழந்ததையடுத்தது அரசு ஆலையை மூடி சீல் வைத்தது.
ஆனால் போராட்டம் நடத்திய மக்கள் மற்றும் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டதாகவும், கலவரத்திற்கு கரணமாக இருந்ததாகவும், சட்டத்திற்கு புறம்பாக அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட 248 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் உசிலம்பட்டியை சேர்ந்த வாஞ்சிநாதனை நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேராடியதாக சென்னை விமான நிலையத்தில் வைத்து போலிஸார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

கலவரம் நடந்து ஒரு மாத காலம் ஆகியும் இன்றும் தூத்துக்குடி மக்களிடம் அச்ச உணர்வு தொடர்ந்து நீடிக்கிறது. அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
மக்களின் மனநிலை
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அதனை சுற்றியுள்ள குமரட்டியபுரம், பண்டாரம்பட்டி, மடத்தூர், அண்ணாநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் போராடி வந்தனர். ஆனால் ஆலையை மூடிய பின்பும் கிராமங்களுக்கு இரவில் செல்லும் போலீசார் பொதுமக்களின் வீடுகளில் கதவைத் தட்டி வீட்டில் உள்ள ஆண்களை கைது செய்து வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் மடத்தூர் கிராம மக்கள் தங்களது குடும்பத்தினருடன் ஊர் நடுவே உள்ள கோயிலில் இரவு நேரங்களில் தங்கியிருக்கிறார்கள்.
"தற்போதுவரை எங்களால் சுதந்திரமாக ஊடங்களிடம் கூட பேச முடியவில்லை. ஊடகங்களிடம் பேசினால் இரவு நேரங்களில் போலிசார் வீடுகளில் வந்து மிரட்டுகிறார்கள். ஊடகங்களை சந்திக்கக் கூடாது எனவும் எச்சரித்து வருகிறார்கள்" என மக்கள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Reuters
மேலும் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவருமே வெளி மாவட்டங்களில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக ஊர் பெண்கள் தெரிவித்தனர்.
பிபிசி தமிழின் சார்பில் பல பேரிடம் பேசிய பொழுதும், காவல்துறையின் அச்சம் காரணமாக யாரும் தங்கள் அடையாளத்தைத் தெரிவிக்க முன்வரவில்லை.
வழக்கறிஞரின் கைது ஏன்?
"வாஞ்சிநாதனின் கைது என்பது போராட்டம் நடத்தும் மக்களை ஒடுக்க நினைக்கும் செயல். இதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் அல்லது போரட்டம் நடத்தினால் கைது செய்வது என்பது அறிவிக்கப்படாத எமர்ஜென்சியாகத்தான் தெரிகிறது. எட்டு வழி சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்த வளர்மதி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது பேச்சுரிமையை பறிப்பதாகத் தான் பார்க்கிறோம்" என தூத்துக்குடி வழக்கறிஞர் அதிசயராஜ் தெரித்தார்.
"தூத்துக்குடியில் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இரவு நேரங்களில் பொதுமக்களை வீடுகளுக்குள் புகுந்து போலிஸார் மிரட்டி வருகின்றனர். அரசு தரப்பில் தூத்துக்குடி இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்று சொல்வது வெறும் கண் துடைப்புதான். இன்றும் இயல்பு நிலைக்கு திரும்பாமல்தான் உள்ளது. போரட்டத்தில் கலந்து கொள்ளாத சிறுவர்களை எல்லாம் விசாரணை என்ற பெயரில் போலிஸார் கைது செய்து காவல் நிலைத்தில் வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர் இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது" என பெண் வழக்கறிஞர் சுமித்ரா தெரிவித்தார்.

"முதலில் பொதுமக்களை மட்டுமே கைது செய்து வந்த போலீசார் தற்போது வழக்கறிஞர்களையும் கைது செய்யத் தொடங்கிவிட்டனர். காரணம் வழக்றிஞர்களையே கைது செய்தால் இனி யார் எதை கேட்க முடியும் என்ற எண்ணத்துடன்தான் இதனை அரசு செய்து வருவதாக தெரிகிறது. நடப்பதையெல்லாம் பார்த்தால் இலங்கையில் எப்படி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டதோ அதே போல்தான் தூத்துக்குடியில் நடக்கிறது" என சத்தியா தெரிவித்தார்.
வாஞ்சிநாதன் கைது சட்டத்திற்கு புறம்பானது, அவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளுமே திரும்பப் பெற வேண்டும் என தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் தீபக் தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மறுப்பு
ஆனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கடந்த பத்து தினங்களாக இரவு நேரங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று ஆண்களை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்வதால் ஆண்கள் அனைவரும் வெளியூர்களில் வாழ்ந்து வருவதாக கிராம பெண்கள் புகார் கூறிவருவதை சுட்டிக்காட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ரம்பாவிடம் கேட்டபோது, " கடந்து பத்து நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஒரு கைது நடவடிக்கையும் நடத்தப்படவில்லை, இரவு நேரங்களில் கைது செய்வதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
"கடந்த பத்து தினங்களாக ஸ்டெர்லைட் உள்பட எந்த வழக்கிலும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் குறித்து கடந்த ஆறு தினங்களுக்கு முன் கிராம பெண்களை அழைத்து தனிப்பட்ட முறையில் நான் பேசினேன். இரவு நேரங்களில் கைது சம்பவம் நடைபெறாது எனவும் உள்ளூர் போலிசார் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் அவை அனைத்தும் மக்களின் பாதுகாப்புக்கு மட்டுமே. கைது நடவடிக்கைக்கு இல்லை எனத் தெளிவுபடுத்தினேன்" எனத் தெரிவித்தார்.
"பொய் வழக்குக்கு பயந்து ஊரைவிட்டு வெளியேறும் மக்கள்"
தற்போது தூத்துக்குடியில் நிலவும் சூழ்நிலை குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்ரி டிஃபேனிடம் பேசினோம்.
"மே 22 அன்றோ, அதற்கு முன்போ நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் எதிலும் பங்கேற்காத இளைஞர்கள் பலரும்கூட போலீஸ் கைது செய்யும், கொடுமைப்படுத்தும் என்று பயந்து வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள்.

ஆயிரக்கணக்கான பெயர் குறிப்பிடாத மக்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்திருப்பதால் தாங்கள் கைது செய்யப்படலாம் என்று போராட்டத்தில் பங்கேற்றவர்களும் அஞ்சுகிறார்கள்.
போலீஸ் பொய் வழக்குப் போடும் என்று அஞ்சி குடும்பத்தோடு மக்கள் ஊரைவிட்டுப் போகும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளன.
ஏராளமான போலீசார் இன்னும் இங்கே இருப்பதையும், மக்கள் அச்சத்தில் வாழ்வதையும் நான் பார்க்கிறேன்," என்று கூறினார் ஹென்றி டிஃபேன்.
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு தொடர்ந்து மக்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தவர் இவர்.
தூத்துக்குடியில் கிட்டத்தட்ட எல்லா கைதுகளும் தற்போது நள்ளிரவில் நடக்கின்றன. முறையான அடையாளம் இல்லாமல் கைது செய்யச் செல்லும் போலீசார் வீட்டில் உள்ள பெண்களை ஆபாசமாக வசைபாடவும் செய்கின்றனர் என்றார் அவர்.
"மக்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்படும்பொழுது தூத்துக்குடி காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் துணியால் மூடப்பட்டுள்ளதாக சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் நிலைமை மேலும் மோசமாகப் போகிறது.
போலீஸ் கைதுக்கு அஞ்சி மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி பக்கத்தில் உள்ள கோயிலில் ஒன்றுகூடும் சம்பவங்களும் நடந்துள்ளன," என்றும் தெரிவித்தார் ஹென்றி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













