சுஜாத் புஹாரி கொலை: பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதா?
- எழுதியவர், சொரயா ஒளர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
'ரைசிங் காஷ்மீர்' (Rising Kashmir) இதழின் ஆசிரியர் சுஜாத் புஹாரி மற்றும் அவரது பாதுகாவலர் ஒருவர், ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Image copyrightABBAS MOMANI/AFP
இந்நிலையில், 1990ஆம் ஆண்டில் இருந்து 2,500 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என உலக பத்திரிகை சுதந்திர தினமான மே மாதம் மூன்றாம் தேதியன்று ஊடக உரிமைகள் குழுக்கள் எச்சரிக்கை விடுத்திருந்ததை நினைவுகூர வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாதம் இரு வெவ்வேறு சம்பவங்களில் 10 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.
காபூலில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்ததை அறிந்த பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குண்டு வெடித்த 15 நிமிட நேரத்திற்குள், பத்திரிகையாளராக மாறுவேடத்தில் வந்த மற்றொரு தற்கொலை குண்டுதாரி அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்களை இலக்கு வைத்து, வெடிகுண்டை வெடிக்கச் செய்த்தில், ஒன்பது பத்திரிகையாளர்களும், ஒரு புகைப்படக்காரரும் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
அதே நாள் ஹோஸ்ட் பிராந்தியத்தில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் பிபிசி ஆஃப்கன் சேவையின் செய்தியாளர் அகமது ஷா கொல்லப்பட்டார்.
29 வயதான அகமது ஷா, தனது குடியிருப்புப் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய இருவர் அவரை சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவங்களையும் சேர்த்து 2018ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துவிட்டதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் (IFJ) தெரிவித்தது.
இந்த புள்ளி விவரங்களின்படி இது, கடந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து மே மாதம் முதல் நாள் வரை கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அதிகம்.
தற்போது, ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புஹாரி மற்றும் அவரது பாதுகாவலர் ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்கள் சொல்லும் படிப்பினை என்ன? பத்திரிகையாளராக பணியாற்றுவது ஆபத்தானதாக மாறிக் கொண்டிருக்கிறதா?
ஒரு தசாப்தத்தில் குறைந்த எண்ணிக்கை
1990களில் இருந்து கொல்லப்பட்ட, கைது செய்யப்பட்ட மற்றும் காணாமற்போன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை ஊடக உரிமை அமைப்புக்கள் கண்காணித்து வருகின்றன. செய்தியாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஓட்டுனர்கள் என ஊடகப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் இந்த தரவுகள் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள், இலக்கு வைத்து தாக்கப்பட்டவர்கள் மற்றும் ஆபத்தான வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் என்றும் இந்த தரவுகள் வேறுபடுத்தி காட்டுகின்றன.

2017ஆம் ஆண்டில், 82 இறப்புகள் என்பதே ஒரு தசாப்தத்தில் குறைவான இறப்பு எண்ணிக்கை என்று சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் கூறுகிறது.
1990 முதல் 2000ஆம் ஆண்டின் முற்பகுதி வரை ஒவ்வோர் ஆண்டும் இறப்பு விகிதம் சராசரியாக அதிகரித்துக் கொண்டே சென்றாலும், இறப்பு எண்ணிக்கை நூறைத் தாண்டவில்லை.
தரவுகளில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் அந்தந்த சமயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பிரதிபலிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அல்ஜீரியா, மற்றும் ருவாண்டாவில் உள்நாட்டுப் போர்கள் நடைபெற்ற 90களின் ஆரம்பத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2003இல் இராக் போரைத் தொடர்ந்து, இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது. 2006இல் அதிகபட்சமாக 155 பேரும், 2007இல் 135 பேரும் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு பத்திரிகையாளர்களின் இறப்பு எண்ணிக்கை குறைந்ததை நினைத்து ஆறுதல் அடையவேண்டியதில்லை. பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதற்கான காரணங்கள் அவ்வப்போது மாறுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"இஸ்லாமிய அரசு என்று தங்களை தங்கள் அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, சிரியா மற்றும் இராக் முழுவதிலும் எழுச்சி பெற்றதற்கும், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதற்கும் தொடர்பு இருக்கிறது" என்று கூறுகிறார் ராபர்ட் மஹோனியிடம் பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு (CPJ)வின் ராபர்ட் மஹோனி.
"அவர்கள் போரில் கொல்லப்படவில்லை, வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டனர்" என்கிறார் அவர்.
அதிக அளவில் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதும், தாக்கப்படுவதும், 2012ஆம் ஆண்டில் இருந்து செய்தி நிறுவனங்களின் கொள்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தூண்டியது. ஆபத்து அதிகமான இடங்களுக்கு குறைந்த அளவிலான பத்திரிகையாளர்கள் அனுப்புவது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக, உள்ளூர் பத்திரிகையாளர்களும், ஊடகவியாளர்களும் தொடர்ந்து "இறப்புக்களின் சுமைகளை தாங்கிக் கொள்கின்றனர்" என்று மஹோனி கூறுகிறார்.
2017இல் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர், அரசியல் ஊழல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பாகவும் புலன் விசாரணையில் ஈடுபட்டவர்கள் என்று பல ஊடக உரிமை குழுக்கள் கூறுகின்றன.
"பத்திரிகையாளராக இருப்பது மிக ஆபத்தானதாக மாறிவிட்டது என்பதை கடந்த ஆறு ஆண்டுகளாக அதிகம் உணர நேர்கிறது" என்கிறார் சி.பி.ஜேவின் துணை நிர்வாக இயக்குனர் மஹோனி. "பல ஊடகவியலாளர்கள் மோதல்களில் கொல்லப்படவில்லை, அவர்கள் செய்யும் வேலை தொடர்பாக இலக்கு வைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர்."
போர் பதற்றம் இல்லாத பிலிப்பைன்ஸ், ரஷ்யா, மெக்ஸிகோ போன்ற நாடுகளிலும் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதை மஹோனி சுட்டிக்காட்டுகிறார்.

ஆப்கானிஸ்தானிலும், மெக்ஸிகோவிலும் செயல்படும் ஆயுத குழுக்களின் இலக்கு மாறுபட்டிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்தின் மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்புத் தலைவர் எர்னஸ்ட் சாகாகா கூறுகிறார். பத்திரிகையாளர்களைத் தாக்குவதற்கும், ஒடுக்குவதற்கும் தங்கள் ஆயுதபலத்தை அவர்கள் பயன்படுத்துவதாக அவர் சொல்கிறார்.
மால்டா மற்றும் ஸ்லோவாக்கியாவில் ஊழல் தொடர்பாக செய்தி சேகரிக்கும் மேற்கத்திய நாடுகளின் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படும் அண்மைச் சம்பவங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால் இது மாபெரும் பிரச்சனையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்கிறார் மஹோனி.
"அதற்காக சில நேரங்களில் துப்பாக்கி ஏந்தியவர்களோ அல்லது பணத்துக்கு கொலை செய்பவர்களையோ அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்" என்கிறார் சி.பி.ஜேவின் செய்தித் தொடர்பாளர்.
"ஆனால் தண்டனை வழங்கும்போது, உண்மையான கொலைகாரன், அதாவது கொலை செய்வதற்கு உத்தரவிட்ட நபருக்கு தண்டனை கிடைப்பதில்லை" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், SHUJAAT BUKHARI / TWITTER
செய்தி ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை அளவிடுவதற்க்கு அவர்கள் கொலை செய்யப்பட்டது மற்றும் தாக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் போதுமானதாக இருக்கலாம். இவை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமே. உண்மையில் அவர்கள் எதிர்கொள்ளும் ஒரே அச்சுறுத்தல் உயிர் ஆபத்து என்பது மட்டுமே அல்ல.
2017ஆம் ஆண்டு மட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையான 262 என்பது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் மிக உயர்ந்த எண்ணிக்கை என்று சி.பி.ஜே கூறுகிறது.
சிறையில் உள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை கண்காணிக்கும் ஊடக உரிமைகள் அமைப்பின் தரவு ஆண்டுதோறும் டிசம்பர் முதல் தேதியன்று வெளியிடப்படுகிறது. கைது செய்யப்பட்டு சில நாட்கள் சிறையில் இருந்தபின் வெளியில் அனுப்பப்பட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கையை இந்த தரவுகள் பிரதிபலிக்காது என்பதால் உண்மையான புள்ளிவிவரங்கள் மிகவும் அதிகமாக இருக்கலாம்.
"சிறைதண்டனை என்பது எப்போதுமே அச்சுறுத்துவது, மிரட்டுவதன் ஒரு வடிவமாகவே இருந்து வருகிறது" என்று கூறும் சகாகா, "இது சிறையில் இருப்பவர்களை ஊமைகளாக இருக்கச் செய்வதுடன், வெளியில் இருக்கும் செய்தியாளர்களுக்கும் அச்சுறுத்தும் சமிக்ஞையாக இருக்கிறது" என்கிறார்.
பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்களை சிறையில் அடைக்கும் நாடுகளில் பட்டியலில் முதலிடத்தை பெறுவது துருக்கி. அங்கு 73 பேரும், சீனாவில் 41 பேரும், எகிப்தில் 20 பேரும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறையில் அடைக்கப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












