பி.பி.சி. சிறப்பு தொடர்: கெட்டோக்கள் தவிர வேறு எங்கும் வாழ முஸ்லிம்கள் விரும்பாதது ஏன்?

    தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் குறித்த பி.பி.சி.யின் இந்த சிறப்புத் தொடரில், முஸ்லிம்கள் ஒரே இடத்தில் இணைந்து வாழ்கின்றனர் என்பதைக் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    News imageNews imageNews image

    டெல்லியில் இஸ்லாமியர்கள் குடியிருக்கும் பகுதியைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல்லுக்கு சில எதிர்ப்புகள் இருக்கக்கூடும். ஆங்கிலத்தில் அது ‘கெட்டோ’ என அறியப்படுகிறது.

    News image

    கெட்டோ என்பது இத்தாலிய சொல்லாகும். வெனிஸில் இரும்புத் தொழிற்சாலையொன்றை சுற்றி மக்கள் குடியேறிய பகுதி கெட்டோ என அழைக்கப்பட்டது. பின்னர் 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் யூதர்கள் குடியேறிய பகுதிகள் கெட்டோ என அழைக்கப்பட்டது. தற்போது ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் போதிய அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடியேறினால் அது கெட்டோ என அழைக்கப்படுகிறது.

    இப்போது நாம் டெல்லிக்கு வருவோம். இதன் தோற்றம் பிரித்விராஜ் சௌஹான் காலத்தில் இருந்து முகலாயர் காலத்திலும், அதன் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் மீண்டும் மீண்டும் மாற்றத்தைக் கண்டது. அதே சமயத்தில் டெல்லியில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. இன்றைய தினம் டெல்லியில் அதிக அளவில் முஸ்லிம்கள் குடியேறிய பல்வேறு பகுதிகள் உள்ளன.

    முஸ்லிம்கள் இந்தப் பகுதிகளில் ஏன் வசிக்கின்றனர் என்பது போன்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. இதர சமூகத்தினருடன் அவர்கள் ஏன் கலப்பதில்லை? பழங்குடியினரிடம் இருப்பது போல் அவர்கள் மதத்தினருடன் மட்டும் பழகும் பழக்கம் அவர்களிடம் உள்ளதா?

    இந்த பி.பி.சி.யின் சிறப்புத் தொடரில் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம்.

    இதற்காக நாங்கள் டெல்லியில் ‘ஜமுனா பார்’ என்றும் புகழ் பெற்றுள்ள வட-கிழக்கு டெல்லிக்கு சென்றோம்.

    இந்தப் பகுதியில் அதிக அளவிலான முஸ்லிம்கள், குறிப்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹாரிலிருந்து வந்தவர்கள் குடியேறி உள்ளனர். பல்வேறு குடியிருப்புகளில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ்கின்றனர், ஆனால் பல்வேறு இடங்களில் பலரும் இணைந்து வாழ்கின்றனர்.

    இத்தகைய குடியிருப்புகளில் ஜாஃபராபாத் ஒன்றாகும். சீலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட இந்தப் பகுதியில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்தக் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் வர்த்தகர்கள் அல்லது சிலவிதமான தொழிலாளர்கள்.

    இங்கு அரசு மருத்துவமனையோ அல்லது மருந்தகமோ இல்லை என்பதுடன், இரண்டு தொடக்கப்பள்ளிகள் மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளி மட்டுமே உள்ளன. இந்தப் பகுதியின் சந்துகள் கார்கள் செல்ல முடியாத அளவுக்கு குறுகலாக உள்ளன.

    ‘முஸ்லிம்கள் அந்நியர்களாக கருதப்படுகின்றனர்’

    இந்த ஜாஃபராபாத் பகுதியில் முஸ்லிம்கள் ஏன் வசிக்கின்றனர்? மக்கள் பலரும் கலந்தவண்ணம் வாழும் சுற்றுப்புறங்களில் முஸ்லிம்கள் ஏன் இல்லை?

    இந்தப் பகுதியில் வாழும் 26 வயதான இராம் அரிஃப் என்ற இளம்பெண் கிண்டலாக பதில் சொல்கிறார். முஸ்லிம்கள் அல்லாத பகுதிகளில் இவர்கள் அந்நியர்களாக கருதப்படுகிறார்கள் என்கிறார் பட்டப்படிப்பு முடித்துள்ள இந்தப் பெண்மணி.

    “இந்தக் குடியிருப்பில் உள்ள நாங்கள் அனைவரும் பொதுவாகவே பார்க்கப்படுவதால் நாங்கள் இங்கே வாழ்கிறோம். இங்கு குற்றங்கள் நடக்கின்றன என்றபோதிலும் மற்ற பகுதியில் இருப்பவர்கள் எங்கள் பழக்க வழக்கம் குறித்து மாறுபட்ட பார்வை கொண்டுள்ளனர். நாங்கள் சாதாரண இந்தியர்களாக பார்க்கப்படாமல் முஸ்லிம்களாகவே பார்க்கப்படுகிறோம். எங்கள் குழந்தைகளும் புர்கா அணிந்த பெண்களும் மற்ற பகுதிகளில் அந்நியர்களாகவே கருதப்படுகின்றனர்” என்கிறார் அவர்.

    இந்தப் பகுதியில் வாழவும், உண்ணவும் எங்கள் பண்டிகைகளை நாங்கள் விரும்பும் முறையில் கொண்டாடவும் சுதந்திரம் உள்ளது. முஸ்லிம்கள் வசிக்காத பகுதிகளில் வசிப்பவர்கள் சக இந்தியராக பார்த்தால் அந்தப் பகுதிகளில் சென்று வாழ்க்கை நடத்த ஒருவர் நிச்சயமாக விரும்புவார் என்கிறார் இராம்.

    அதே நேரத்தில் பட்டயக் கணக்காளரான ஹுமா கான் (வயது 26) கருத்து சிறிது மாறுபட்டதாக உள்ளது. இதர சமூகங்களைச் சேர்ந்த மக்களுடன் இணைந்து ஒரு பகுதியில் முஸ்லிம்கள் வாழவேண்டும் எனக் கூறும் இவர், ஆனால் இந்த முடிவு மூத்தோரின் முடிவை சார்ந்ததாக உள்ளது என்கிறார்.

    கலவரம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் பேசிய அவர், “20-25 ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம்களிடம் என்ன தவறு ஏற்பட்டிருந்தாலும் அதன் காரணமாகவே இதர பகுதிகளில் மற்றவர்களுடன் இணைந்து வாழ எங்கள் குடும்பங்கள் விரும்பவில்லை” என்பதுடன், “இரண்டாவதாக, வசதியான பகுதியை சேர்ந்தவர்கள் அல்லது எந்த முஸ்லிம் அல்லாத பகுதியை சேர்ந்தவர்கள் எங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அந்தப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கவோ, வாங்கவோ நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்” என்கிறார்.

    முஸ்லிம் பகுதிகளில் தூய்மை மற்றும் சட்ட ஒழுங்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்தப்பகுதி மக்கள் இதற்கு பழகி விட்டனர் எனக் கூறும் ஹுமா, எனினும் இது அவர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்கிறார்.

    ஒரு வாய்ப்பு கிடைத்தால் முஸ்லிம் அல்லாத பகுதி ஒன்றில் வாழ தாம் நிச்சயமாக விரும்புவுதாக அவர் கூறுகிறார். எனினும் ஜாஃபராபாத் போன்ற முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகள் தூய்மையாக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டால் அங்கு வாழ்வதற்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார்.

    டெல்லி முஸ்லிம் பகுதிகள்
    News image
    News image

    கலவர அச்சம் காரணமாக இணைந்து வாழ்கிறோம்

    ஜாக்கெட்கள், கூலர்கள் மற்றும் எம்பிராய்டரி அச்சிடுதல் ஆகியவற்றுக்கு ஜாஃபராபாத் புகழ் பெற்ற பகுதியாக திகழ்கிறது. இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய ஜாக்கெட் சந்தை என்கிறார் ஜாஃபராபாத் வணிகர் சங்கத் தலைவர் அமானுல்லா கான். இங்கு ஜாக்கெட்கள் தயாரிக்கப்படுவதுடன் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

    அமானுல்லா 

    அமானுல்லா 

    52 வயதாகும் அமானுல்லா கானுக்கு வளர்ந்து வரும் ஜாக்கெட் வர்த்தகம் உள்ளது என்பதுடன் அவர் வசதியானவராகவும் உள்ளார். அவர் விரும்பினால் எந்த சிறப்பான பகுதியிலோ அல்லது வளமான பகுதியில் வாழ்க்கை நடத்தலாம் என்ற போதிலும் அவர் ஜாஃபராபாத் பகுதியிலேயே இருக்க முடிவு செய்து விட்டார்.

    ஏன் இங்கு தங்கியிருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு தாம் சுமார் 25 ஆண்டுகளாக இங்கே வசிப்பதாகவும் இங்கு தங்கியிருப்பதில் ஏராளமான பயன்கள் இருப்பதாகவும் அவர் பதிலளிக்கிறார்.

    முதலாவதாக இந்தப் பகுதியை சுற்றி மசூதிகள் இருப்பதால், நமாஸ் செய்யும் வசதி இங்கு உள்ளது. இரண்டாவதாக தெரிந்தவர்கள் அல்லது குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடத்திற்கே ஒருவர் செல்லுவார் என்கிறார்.

    உங்கள் சமூகத்தினருடன் வாழ்வது உங்களுக்கு பாதுகாப்பு எண்ணத்தை அளிக்கிறதா என்ற கேள்விக்கு, ஜாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருப்பதால் தமக்கு இந்துக்களுடன் நல்ல உறவுள்ளது என்றும், பாதுகாப்பற்ற எண்ணம் தனக்கு கிடையவே கிடையாது என்றும் அவர் கூறுகிறார்.

    இத்தகைய முஸ்லிம் குடியிருப்புகள் வளர்வதில் பாதுகாப்பு இருப்பதுடன் ஒரு குறிப்பிட்ட திறன் உள்ள மக்கள் இணைந்து வாழ்வதும் காரணங்களாக உள்ளன என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக உதவி பேராசிரியரும் டெல்லியில் உள்ள முஸ்லிம் பகுதிகளை பிரித்தல் மூலம் சேர்த்தல் என்ற நூலின் ஆசிரியருமான கஜாலா ஜமீல் கூறுகிறார்.

    இந்த குடியிருப்புகளை கெட்டோ என்ற வார்த்தையை பயன்படுத்தி அழைப்பது தவறு என்கிறார் கஜாலா. அந்த வார்த்தைக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது என்றும் அதனை வேறு விதமாக பயன்படுத்துவது தவறு என்றும் அவர் கூறுகிறார்.

    “நீண்ட காலமாகவே சமுதாயத்திலும் கிராமங்களிலும் மக்கள் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், பல்வேறு சாதிகளைக் கொண்டவர்களின் வெவ்வேறு குடியிருப்புகள் உள்ளன. தலித்துகள் தனி குடியிருப்புகளில் வசிக்கின்ற போதிலும் அவற்றைக் குறிப்பிட கெட்டோ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை” என்கிறார் அவர்

    இன்றைய தினம் முஸ்லிம்கள் பாதுகாப்பற்றவர்களாக இருப்பதாக உணர்கின்றனர் என்றும், அதனாலேயே அவர்கள் இந்த முஸ்லிம்கள் நிறைந்த குடியிருப்புகளில் வசிக்கின்றனர் என்றும் ஜாஃபராபாத்தில் குடியிருக்கும் டாக்டர் ஃபாஹிம் பெய்க் கூறுகிறார்.

    ஜாஃபராபாத்தில் சிறிய மருத்துவமனை ஒன்றை நடத்தும் பெய்க், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நரேந்திர மோதி அரசு பதவிக்கு வந்த பின்னர், முஸ்லிம்களிடையே பாதுகாப்பு குறித்த பிரச்சனை இருப்பதால் இதுபோன்ற குடியிருப்புகளில் வசிப்பதையே முஸ்லிம்கள் விரும்புகின்றனர் என்கிறார்.

    “முஸ்லிம்கள் பெருமளவு கொல்லப்படும் கலவரங்கள் இந்தியாவில் நடைபெற்ற வரலாறு உள்ளன. இதனை தவிர்க்கும் வகையில் ஒரு குழுவாக வசிக்க முஸ்லிம்கள் முடிவு செய்தனர். ஜாஃபராபாத் பகுதியிலும் மக்கள் வீடுகள் வாங்கத் தொடங்கியபோதும் அவர்கள் சாலையோர வீடுகளை விரும்பவில்லை. உட்புறப் பகுதியில் வீடு வாங்குவது பாதுகாப்பானதாக இருக்கும் என அவர்கள் நம்பினார்கள்” என அவர் கூறுகிறார்.

    முஸ்லிம் அல்லாத குடியிருப்புகளில் வாழ முஸ்லிம்கள் ஏன் முயற்சி செய்யவில்லை?

    இந்தக் கேள்விக்கு பதிலளித்த பெய்க், பெரும்பாலான சமூகங்கள் பாதுகாப்புக்காக இந்த நுணுக்கத்தை கடைப்பிடிப்பதாக கூறினார்.

    “1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு பின் சீக்கியர்கள் இதையே செய்து ஒரே இடத்திலேயே வசிக்கத் தொடங்கினார்கள். இதனால்தான் மேற்கு டெல்லியில் திலக் நகர் போன்ற இடங்களில் சீக்கியர்களின் குடியிருப்புகளை நீங்கள் பார்க்கலாம். அவர்கள் தங்கள் வாழ்க்கையை சொந்தமான வழியிலேயே வாழ்கின்றனர். அவர்கள் ஆடம்பரமான குருத்வாராக்களை அமைத்துள்ளனர். தங்களது விருப்பங்களுக்கேற்ப உண்ணவும் பருகவும் செய்கின்றனர்” என்கிறார்.

    முஸ்லிம்கள் ஒன்றாக வாழ்வதற்கு பாதுகாப்பின்மை முதல் காரணம் என்ற போதிலும் கலாச்சாரம் இன்னொரு காரணம் என்பதை கஜாலா ஒப்புக்கொள்கிறார்.

    News image
    News image

    அக்லாக், அஃப்ரசூல், ஜுனேத்

    News image

    “என் புத்தகத்திற்கான ஆராய்ச்சிக்காக நான் ஏராளமான மக்களுடன் பேசினேன். தங்களது வாழ்க்கைமுறை மற்றும் வழிமுறைகள் வித்தியாசமாக பார்க்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த பகுதியில் அவர்கள் தங்கள் விருப்பம் போல் வாழ்வதற்கான வசதி இருக்கிறது. இதன் காரணமாகவே அவர்கள் வாழ விரும்புகின்றனர்” என்று அவர் கூறுகிறார்

    உதாரணத்திற்கு மேற்கு டெல்லியில் உள்ள திலக் நகர் பகுதிக்கு சென்றால், அனைத்து மாமிச கடைகளிலும் ‘ஜட்கா’ எனவும், ஜாஃபராபாத்தில் அனைத்து மாமிச கடைகளிலும் ’ஹலால்’ என எழுதியிருப்பதையும் பார்க்கலாம். இது குறித்து சிந்திக்கவும். முஸ்லிம்கள் ஜட்கா மாமிசத்தையும் சீக்கியர்கள் ஹலால் மாமிசத்தையும் உண்ண மாட்டார்கள்.

    “நகரங்கள் லாபம் ஈட்டும் எந்திரங்களாக சந்தை பிரிக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய காரணமாகும். முஸ்லிம் குடியிருப்புகளில் சில தயாரிப்பு பணிகள் இருப்பதுடன் அங்கு மலிவான ஊதியத்திற்கு தொழிலாளர்கள் கிடைக்கின்றனர். இது தவிர, முஸ்லிம்களின் பொருளாதார சூழ்நிலைகளின்படி பல்வேறு முஸ்லிம் பகுதிகள் மேற்கு நிஜாமுதீன் போன்ற முஸ்லிம்களின் வசதியான பகுதிகளும் உருவாகியுள்ளன”.

    ‘குர்தா-பைஜாமாவை பார்த்த பின்னர் மாறிய அணுகுமுறை’

    தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத 28 வயதாகும் ஷத்மன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பின்மையை உணர்வதாக கூறுகிறார். ஜாக்கெட்கள் விற்பனை செய்யும் பட்டதாரியான ஷத்மன், முஸ்லிம் பகுதிகளில் குற்றச்செயல்கள் முன்னிலையில் இருப்பதாக கூறுகிறார்.

    கல்வியறிவின்மை மற்றும் ஏழ்மை காரணமாக குற்றச்செயல்கள் நடப்பதாகவும் இந்தப் பகுதிகளின் மீது அரசுகளும் போதிய கவனம் செலுத்துவதில்லை என்கிறார் ஷத்மன். வாய்ப்பு கிடைத்தால் முஸ்லிம் அல்லாத குடியிருப்பு பகுதிகளில் நிச்சயமாக வசிப்பேன் என்றும் அவர் கூறுகிறார்.

    “மற்ற சமூகங்களுடன் கலக்கமுடியாது என்பது முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சனை. அதே நேரத்தில் இந்துக்கள் அல்லது வேறு எந்த சமூகமும் அவர்களை தங்களுடன் கலக்க அனுமதிப்பதில்லை. அவர்களுடன் நாம் இணைந்தால் அல்லது சேர்ந்து வாழ அவர்கள் இங்கு வந்தால்தான் இரு சமூகங்களுக்கு இடையே உள்ள இடைவெளி முடிவுக்கு வரும்” என்கிறார் அவர்.

    ஜாஃபராபாத்தில் பயிற்சி மையம் ஒன்றை நடத்தும் 35 வயதாகும் நதீம் அரின் இதே எண்ணத்தைக் கொண்டுள்ளார். முஸ்லிம்களை ஏற்க முஸ்லிம் அல்லாதவர்கள் முன்வராததால்தான் இதுபோன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் வாழ விரும்புகின்றனர் என்கிறார் அவர்.

    “இந்துக்கள் எங்களை ஏற்றுக்கொண்டால் அவர்களுடன் இணைந்து வாழக்கூடாது என ஏன் நாங்கள் நினைக்க வேண்டும். என்னிடம் இந்து குழந்தைகள் வரும்போது அவர்களுக்கு தேவையான வசதிகளை நான் அளிக்கிறேன்” என்கிறார் அவர்.

    சம்பவம் ஒன்றை நினைவுகூரும் அவர், “2010ம் ஆண்டு நான் ஒரு தேர்வுக்காக குவாலியருக்கு சென்றேன். இரண்டு நாட்கள் சக தேர்வு எழுதுவோர் என்னை நன்றாக நடத்தினார்கள். மூன்றாவது நாள் ஜுமா வழிபாட்டை முடித்துக் கொண்டு நான் குர்தா – பைஜாமா அணிந்தபடி தேர்வு மையத்திற்கு சென்றபோது அவர்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. நீ முஸ்லிமா என அவர்கள் என்னை பார்த்து மீண்டும் மீண்டும் கேட்டனர்” என்கிறார்.

    இந்தப் பகுதிகளில் வாழ்வதற்கு கல்வியும் இன்னொரு காரணம் என்கிறார் நதீம். இங்கு மதக் கல்வியும் நவீன கல்வியும் கிடைக்கிறது என அவர் கூறுகிறார்.

    News image

    “எனது குழந்தைகள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் கலந்து பழக வேண்டும் என நான் விரும்புகின்ற போதிலும், அவர்கள் இந்த முஸ்லிம் பகுதியை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என நான் நினைக்கிறேன். இங்கு கிடைக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்தை எனது குழந்தைகள் பின்பற்ற வேண்டும்” என்கிறார் இல்லத்தரசி சுபானா இஸ்லாம்.

    36 வயதாகும் அஞ்சும் இர்ஷாத், ஒரு சமூக ஊழியர். தனது உறவினர்கள் பலர் முஸ்லிம் அல்லாதவர்கள் வசிக்கும் பகுதிகளில் வசிப்பதாகவும் ஆனால், அவர்களுடன் பக்கத்தில் இருப்பவர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என கூறுகிறார். பக்ரீத் மற்றும் இதர பண்டிகைகளின் போது தனது உறவினர்கள் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாகவும் அவர் கூறுகிறார்.

    இத்தகைய பிரச்சனைகள் குறித்து தெரிவிக்கும் அவர், பூங்காக்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற வசதிகளைக் கொண்ட முஸ்லிம் அல்லாதவர்கள் வசிக்கும் பகுதிகளை தாம் விரும்புவதாக அவர் தெரிவிக்கிறார்.

    அரசின் செயல்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பகுதிகள்?
    News image

    முஸ்லிம் பகுதிகள் வாக்கு வங்கிகளாகவும் கருதப்படுகின்றன. பல்வேறு தேர்தல்களின் போது அவர்கள் வாக்கு வங்கிகளாக திகழ்வதாக பல தலைவர்கள் கூறியுள்ளனர்.

    இந்தப் பகுதிகள் சிறப்பு நோக்கம் கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளனவா? சமூக ஆர்வலரான பேராசிரியர் இம்தியாஸ் அஹமது இந்த கருத்தை ஏற்க மறுக்கிறார்.

    “முஸ்லிம் பகுதிகள் சிறப்பு நோக்கத்திற்காக எந்த அரசாலும் உருவாக்கப்படவில்லை என்பதுடன், அரசுகளின் பாரபட்சமான போக்கு காரணமாகவே அவர்கள் குடியேறியுள்ளனர். சுதந்திரம் பெற்ற பின்னர் அரசுகள் பல்வேறு வீட்டு சங்கங்களை அமைத்துள்ளபோதிலும், அவற்றில் அனைத்து சமூகங்களை சேர்ந்தவர்களும் குடியேற வேண்டும் என்ற நோக்கத்தில் கொள்கைகளை உருவாக்கவில்லை என்பதில் இருந்து இதனை தெரிந்து கொள்ளலாம்” என்று அவர் கூறுகிறார்.

    “இந்த வீட்டு வசதி சங்கங்களில் கோயில்களுக்கும் சில சமயங்களில் குருத்வாராக்களுக்கும் நிலம் இருக்கும். ஆனால், மசூதிகளுக்கு மட்டும் நிலம் இருக்காது என்பது மறைக்கப்பட்ட கொள்கையாகும். எனவே முஸ்லிம்கள் மசூதிக்கும் தங்களது கலாச்சாரத்திற்கேற்ற இதர வசதிகள் கொண்ட பகுதிகளுக்கு சென்றனர்”

    இந்தக் குடியிருப்புகள் அரசின் கொள்கை காரணமாக உருவாகவில்லை என நம்பும் கஜாலா, அரசுகள் அங்குள்ளவர்களுக்கு சில அன்பளிப்புகளை அளித்து அவர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதாக கருதுகிறார். எனினும் தற்போது முஸ்லிம்கள் தங்களின் குடியுரிமையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதால் அவர்கள் வசிக்கும் பகுதிகள் குறித்த எண்ணம் மாறியுள்ளது என்றும் அவர் நம்புகிறார்.

    ஆனால் இந்த முஸ்லிம் பகுதிகளுடன் தொடர்புடைய எதிர்மறை எண்ணத்தில் எப்படி மேம்பாடு கிடைக்கும்? மக்கள் எடுக்கும் முயற்சிகளால் இந்த பகுதிகள் குறித்த எண்ணத்தில் மாற்றம் ஏற்படும் என்கிறார் கஜாலா. இந்த தடைகளை எதிர்கொள்ள தங்கள் உரிமைகளை பயன்படுத்த மக்கள் தொடங்கும்போது, மினி பாகிஸ்தான் போன்ற எண்ணம் மக்களின் சிந்தனையில் இருந்து விலகும் என அவர் நம்புகிறார்.

    இந்தப் பகுதிகள் குறித்து இரு வகையான பாரபட்சமான எண்ணம் உள்ளது என்று இம்தியாஸ் கூறுகிறார். “முதலாவது, பாரபட்ச போக்கு அனுபவம் எதுவும் இன்றி உருவாக்கப்பட்டுள்ளது. எந்த முஸ்லிமையும் அறிந்து கொள்ளாமல் அல்லது அவர்கள் வாழும் பகுதிக்குக்கூட செல்லாமல் பாரபட்ச எண்ணத்தை உருவாக்கி இருப்பதால் அதை உடைத்தெறிய முடியாது. ஒவ்வொருவர் இடையே தொடர்பு வைத்திருக்கும் நிலையில் இரண்டாவது பாரபட்ச போக்கு நிலவுகிறது” என்கிறார் அவர்.

    “ஈத் பண்டிகையின் போது முஸ்லிம் அல்லாத ஒருவர் சேவையுடன் இணைத்துக் கொள்ளப்படும் போதும், ஒரு இந்து தீபாவளியை குஜியாவுடன் ஒரு முஸ்லிமை இணைத்துக் கொண்டு கொண்டாடும் போதுதான் இந்த பாரபட்சம் உடையும்”.

    முஸ்லிம்கள் இந்தப் பகுதிகளில் ஏன் குடியிருக்கின்றனர்?

    News image

    தேசிய தலைநகர் பகுதியின் (என்.சி.ஆர்.) நொய்டாவுக்குள் நீங்கள் நுழையும்போது, நீங்கள் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களுடன் ஒரு கான்கிரீட் காட்டை எதிர்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றில் அலுவலகங்கள் உள்ள போதிலும் பெரும்பாலானவை குடியிருப்பு வளாகங்கள்.

    ஒரு குடியிருப்புக்குள் நுழையும் போது, நான் யார்?, யார் வீட்டுக்கு நான் செல்ல வேண்டும்? நான் எதற்காக செல்கிறேன் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.

    900 அடுக்கு மாடி வீடுகள் உள்ள இந்த வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வசிக்கும் குடும்பங்களில் பலர் முன்பு முஸ்லிம் குடியிருப்புக்களில் வசித்தவர்கள்.

    வாடிக்கையாளர் சேவை தலைமைப் பொறுப்பில் உள்ள 28 வயதாகும் அர்ஷலான கவுஹர் வாராணசியை சேர்ந்தவர். டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஜாகிர் நகர் பகுதியில் ஆறு வருடங்கள் வசித்த டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்த அவர், ஐந்து மாதங்களுக்கு முன் இங்கு குடிவந்துள்ளார்.

    அவர் அந்த முஸ்லிம் பகுதியை விட்டு ஏன் வந்தார்? இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் அர்ஷலான், ஆறு வருடங்களில் அந்தப் பகுதியின் உள்கட்டமைப்பு வசதிகளில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்கிறார்.

    ”அரசுகள் மாறுவதையும், போராட்டங்களையும் நான் பார்த்துள்ள போதிலும் அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. வாரணாசியிலிருந்து வந்தபோது என்னிடம் இருந்த மனப்போக்கை நான் மேலும் தொடர விரும்பவில்லை. நான் ஒரு நல்ல முஸ்லிமாக மாறாமல் ஒரு நல்ல முஸ்லிமாக நான் மாறவேண்டும். அந்த குறுகிய தெருக்களில் கிடைக்காத ஒரு புதிய எதிர்காலத்தை எனது குழந்தைகளுக்கு நான் அளிக்க வேண்டும்” என்கிறார் அர்ஷலான்.

     முகமது ஹஸ்னைன்

     முகமது ஹஸ்னைன்

    நொய்டா விரிவாக்கத்தில் வசிக்கும் 41 வயதான முகமது ஹஸ்னைனும் இதே போன்ற எண்ணத்தைக் கொண்டுள்ளார். அவர் வசிக்கும் அடுக்குமாடி ஆயிரக்கணக்கான வீடுகளைக் கொண்ட சிறிய உலகம் என்றாலும் இங்கு வசிக்கும் முஸ்லிம்களின் பெயர்களை ஒரு பக்கத்திற்குள் எழுதிவிட முடியும். இங்கு 150 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன.

    குடியிருப்பு வளாகங்களில் இஸ்லாமிய சூழல் உள்ளதா?

    ஏற்றுமதி துறையின் ஆலோசகராக உள்ள ஹஸ்னைன் 20 ஆண்டுகள் பல்வேறு முஸ்லிம் குடியிருப்புகளில் வசித்துள்ளார்.

    முஸ்லிம் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேறியதற்கு குழந்தைகளை நல்ல முறையில் முன்னேற்ற வேண்டும் என்பதுதான். இந்தப் பகுதிகளில் குழந்தைகள் படிக்கவோ, எழுதவோ மற்றும் விளையாடுவதற்கோ போதிய வசதிகள் இல்லை என்று அவர் கூறுகிறார்.

    முஸ்லிம் குடியிருப்புகளில் வசிப்பதற்கு மசூதிகள் மற்றும் டினி தலீம் அங்கு இருப்பதுதான் காரணம் என சிலர் கூறுகின்றனர். வேறு குடியிருப்பு வளாகங்களில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்கள் இந்தப் பயன்களை எவ்வாறு பெறுகின்றனர்? இந்தக் கேள்விக்கு பதில் அளித்த 38 வயதாகும் நிகரிஷ் அன்வர், இங்கும் முஸ்லிம் சூழல் இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்கள் வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்கள் அல்ல. சூழல் என்பது வீடுகளில் இருப்பது, வளாகத்தில் அல்ல என்கிறார்.

    பண்டிகைகள் கொண்டாடப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஹஸ்னைன், ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாபெர்ரிரியில் ஒரு மசூதி உள்ளது என்றும் முஸ்லிம்கள் அங்கு கூடி தொழுகை செய்வதாக கூறுகிறார்.

    குடியிருப்பு வளாகத்திற்குள் மசூதி கட்ட ஏன் கோரவில்லை? இதற்கு பதில் அளித்த நிகரிஷ், இங்கு வசிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை உணவில் உப்பு சேர்க்கப்படுவது போன்ற குறைந்த அளவில் தான் உள்ளனர் என்பதால் மசூதி கட்டவேண்டிய தேவை என்ன? பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்பதால் இங்கு ஒரு கோயில் மட்டும் உள்ளது என்கிறார்.

    அதே நேரத்தில் மசூதிகள் மற்றும் முகலாய் உணவு உள்ள ஓட்டல்கள் இல்லாதது வெற்றிடமாக கருதப்படுவதாக கூறும் ஹஸ்னைன், இந்த வளாகத்தின் சுற்றுப்புறங்களில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்துவதுடன், அங்குள்ள ஓட்டல்களில் உணவருந்துகிறார்.

    தங்களது உணவு பழக்கங்களை ஒதுக்கிவிட்டு இந்த வளாகங்களில் குடியிருக்க முஸ்லிம் குடும்பங்கள் வருவது ஏன்?

    பேராசிரியர் இம்தியாஸ்

    பேராசிரியர் இம்தியாஸ்

    வாழ்க்கை என்பது குருமா-பிரியாணியை விட பெரியது என்கிறார் சமூக ஆர்வலரான பேராசிரியர் இம்தியாஸ் அஹமது. “இங்கு வசிக்கும் மக்களின் எண்ணத்தில் பாதுகாப்பு குறித்த சந்தேகம் உள்ளது, ஆனால் முஸ்லிமோ அல்லது இந்துவோ, இன்றைய தலைமுறையில் பாரபட்சம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால்தான் மக்கள் தங்களது சௌகரியத்தை பார்க்கின்றனர். அவர்களுக்கு அகலமான சாலைகள், தூய்மை மற்றும் கார்களை நிறுத்துவதற்கான இடம் தேவைப்படுகிறது. இவை அனைத்தும் இந்த வளாகங்களில்தான் கிடைக்கிறது” என்கிறார்.

    கலவரங்கள் குறித்து முஸ்லிம்கள் எவ்வளவு அச்சப்படுகிறார்கள்?

    News image

    இந்தியாவில் கலவரங்கள் நடைபெற்ற வரலாறு இருப்பதுடன் தற்போது அச்சமும் அதிகரித்துள்ளது. இந்த அச்சம் இந்திய முஸ்லிம்களிடமும் ஏற்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் முஸ்லிம் குடும்பங்கள் இந்த பிரச்னை பற்றி என்ன கருதுகிறார்கள்?

    கலவரங்கள் எங்குவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுடன் கலவரக்காரர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிறார் ஆலோசனை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நதீம் அக்தர் கான் (42).

    ”கலவரக்காரர்களின் உளவியல் என்பது நொய்டாவில் நான் வசிக்கும் இடம் உட்பட எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். இதன் பாதிப்புக்களை புரிந்து கொண்டுள்ள இதர சமூகத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். பாதுகாப்பின்மை மக்களால் உருவாக்கப்படுகிறது என்பதுடன் அது எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்” என்கிறார் அவர்.

    ஜஹிரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அனைவரும் கலந்து வாழும் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பட்டமேற்படிப்பு முடித்தவர். தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அவர், பாதுகாப்பு என்பது அல்லாவின் கரங்களில் தான் உள்ளது என்றும், அவரது அரவணைப்பில்தான் வாழ்வதாகவும் கூறுகிறார்.

    தாம் எந்தவிதமான பாரபட்சத்திற்கும் ஆட்படவில்லை என்றும், அது பிரச்சனை இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

    பெரும்பாலான நேரம் முஸ்லிம் குடியிருப்புகளில் வசித்த நினா இம்தியாஸ் (32) ஒரு பணிபுரியும் பெண்மணி. தாம் உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வசிப்பதாகவும் இதர நம்பிக்கை கொண்ட மக்கள் தமக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

    “வீட்டுவேலை செய்யும் முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரையில் பாரபட்சம் உள்ளது. அவர்கள் பணியமர்த்தப்படுவதில்லை. இங்கு நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளன. கன்யாபூஜை நடைபெறும் போது எனது மகள்களுக்கும் உணவு அளிக்கப்படுகிறது. தீபாவளி, ஹோலி மற்றும் இதர பண்டிகைகளின் போது, மக்கள் எங்களையும் அழைக்கிறார்கள். நாங்கள் அனைத்து பண்டிகைகளையும் நல்ல முறையில் கொண்டாடுகிறோம். கலவரங்களைப் பொறுத்தவரையில் அது நடக்க வேண்டும் என்று இருந்தால் நடக்கும்” என்கிறார் நினா.

    பாதுகாப்பின்மை குறித்து கருத்து தெரிவிக்கும் நிகரிஷ், முஸ்லிம் குடியிருப்பு பகுதிகளிலும் அது உள்ளது என்பதுடன் பிக்பாக்கெட் போன்ற பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கின்றன என்கிறார்.

    இப்பகுதியில் குடியிருப்பதால் அவர்கள் பற்றிய தவறான எண்ணம் நீங்குமா?

    News image

    இதே பகுதியில் வசிக்கும் ரூபினா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இன்னொரு பெண்மணி, தனது அடையாளத்தை வெளியிட மறுத்து கூறுகையில், நல்லவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்பதுடன் 10 சதவீதம் பேர் மட்டுமே பாரபட்சத்துடன் நடத்தப்படுகிறார்கள் என்றும், அதற்கும் அவர்களது செயல்பாடுகளே காரணம் என்றும் கூறுகிறார்.

    முஸ்லிம்கள் குடியிருக்க வீடு கிடைக்காமல் அவதிப்படுவதாக அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால், இது ஊடகம் உருவாக்கிய ஒரு பொய்யான புகார் என்று ஹஸ்னைன் கூறுகிறார். இது போன்ற பகுதிகளில் நாங்கள் தொடர்ந்து குடியிருந்தால் இப்புகார் மேலும் வலுப்பெறும் என்கிறார் அவர்.

    இந்த வளாகங்களில் முஸ்லிம்கள் குடியிருக்க வீடு கிடைப்பது கடினமானது எனக் கூறும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கஜாலா ஜஸ்மி, இந்த வளாகங்களில் சந்தை சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதால், இங்கு வீடு வாங்குவது தற்போது எளிதாகியுள்ளது என்கிறார்.

    “வீடு வாங்க வசதி உள்ள முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாத குடியிருப்பு பகுதிகள் குடியிருக்கின்றனர், இது விருப்பத்தின் அடிப்படையில் ஆனது என்பதால் அவர்கள் அங்குதான் வசிக்க வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

    “இந்து பகுதிகளில் வசிக்க நாங்கள் விரும்பமாட்டோம்”
    News image

    பல தரப்பு மக்களும் கலந்து வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் நீண்ட காலம் வாழ்ந்த கபிருன்னிசாவின் வாழ்க்கை முழுமையாக மாறியிருக்கிறது. அவர் தனது பழைய நாட்களை நினைவுகூர்ந்தார்.

    “அந்தப் பகுதியில் வாழ முடியும் என நம்பவே முடியவில்லை. 16 ஆண்டுகளாக வசித்த பகுதியிலிருந்து இங்கு வந்தோம், அங்கு வித்தியாசமான கலாச்சாரம் உள்ளது. அனைத்து மத பண்டிகைகளையும் நாங்கள் இணைந்து கொண்டாடுகிறோம்” என்கிறார் கபிருன்னிசா.

    அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரம் பற்றி குறிப்பிடும் அவர், “குழந்தைப் பருவம் தொடங்கி வளர்ந்தவராக ஆகும் வரை நாம் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டவர்கள் என்ற எண்ணத்தை அருகில் வசிப்பவர்கள் ஏற்படுத்தியதே இல்லை. அந்த வாய்ப்பை கடவுள் அளித்தால், அவர்களோடு இணைந்து மீண்டும் வாழுவோம்” என்கிறார்.

    2002 பிப்ரவரி 28ம் தேதி கலவரக்காரர்கள் அவரின் வீட்டைத் தாக்கினார்கள். எட்டு உறுப்பினர்களை கொண்ட தங்கள் குடும்பம் இந்த மோசமான அனுபவத்தை இரண்டு முறை எதிர்கொண்டதாக அவர் கூறுகிறார்.

    சந்த்கேடாவில் உள்ள கங்காநகர் சொசைட்டியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அவரது குடும்பம் வசித்து வந்தது. கலவரக்காரர்கள் அவர் வீட்டுக்குள் நுழைந்தனர். அருகிலிருந்த இந்துக்களின் உதவியால்தான் அவரது குடும்பம் தப்பியது.

    அருகில் குடியிருந்தவர்கள் பஞ்சாபி, மராத்தி, மலையாளம், தமிழ் மற்றும் வங்காளம் என வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள். அந்தக் கும்பல் கபிருன்னிசாவின் வீட்டை தாக்கி அதற்கு தீ வைத்தனர்.

    இந்த கொடுமையான நிகழ்வு பற்றி அவர் கூறுகிறார். “எனது தந்தை ஓ.என்.ஜி.சி.யில் பணிபுரிந்தார். இதன் காரணமாகவே பல தரப்பினர் வாழும் இந்தப் பகுதியில் நாங்கள் வசிக்க முடிந்தது என்பதுடன் நாங்கள் அனைத்து விதமான பண்டிகைகளையும் கொண்டாடுகிறோம். எனது நண்பர்கள் பங்கேற்காமல் நான் ஈத் பண்டிகையை கொண்டாடியது இல்லை என்பதுடன் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை தவறியதும் இல்லை” என்கிறார்.

    “இந்த காரணத்திற்காகவே மதங்கள் மற்றும் புரிதல்களுக்கு இடையிலான வேறுபாடுகளை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இன்று எங்கள் குழந்தைகளை இந்த மாற்றத்தை அறிந்து வருகின்றனர். பள்ளியில் முதல் நாளிலிருந்து இந்த விஷயம் அனைத்தையும் அவர்கள் கற்கத் தொடங்குகின்றனர்” என்றார்.

    ஓய்வு பெற்ற பின்னர் தனது தந்தை இதே பகுதியில் இருக்க முடிவு செய்ததாகவும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிக்கு மாற விரும்பவில்லை என்றும் கபிருன்னிசா கூறுகிறார். பாதுகாப்பு கண்ணோட்டத்தில் ஆபத்து இருக்கும் என தனது குடும்பம் சிந்திக்கவே இல்லை என அவர் கூறுகிறார். எனினும், 2002ம் ஆண்டு சம்பவம் தனது எண்ணத்தை மாற்றியது என்கிறார்.

    இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இதே பகுதியிலோ அல்லது இதர வளர்ந்த பகுதிகளிலோ இருப்பது குறித்து தனது குடும்பம் சிந்திக்கவில்லை என்றும், தாங்கள் தற்போது வசிக்கும் முஸ்லிம் அதிகம் வாழும் பகுதியிலேயே பாதுகாப்பை உணர்வதாகவும் அவர் கூறுகிறார்.

    அவர் சந்த்கேதாவில் உள்ள தனது பழைய வீட்டுக்கு ஒன்று அல்லது இருமுறை சென்று அருகில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வைத்து இருந்த பொருட்களை வாங்கினார்.

    முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஜுஹாபுரா பகுதியில் தற்போது வசிக்கும் கபிருன்னிசா, “எங்கள் வீட்டின் சந்தை விலை 10 முதல் 12 லட்சமாக இருந்தது. ஆனால், அதை ஐந்து லட்சத்திற்குத் தான் நாங்கள் விற்பனை செய்ய முடிந்தது. சில நாட்கள் நாங்கள் எங்கள் உறவினர்களுடன் தங்கியிருந்தோம். அதன் பின்னர் ஜுஹாபுராவில் வாடகைக்கு குடிவந்தோம். எனது சகோதரர்களுக்கு வேலை கிடைத்து திருமணமும் முடிந்தது. இப்போது எங்களுக்கு இரு அடுக்குமாடி வீடுகள் உள்ளது என்பதால் நாங்கள் இங்கே வந்துவிட்டோம்” என்கிறார்.

    அங்கு தன் வாழ்வில் மிக மகிழ்ச்சியான தருணம் கிடைத்தது என்றும், அதை தாம் மறக்கவே முடியாது என்றும், அதை ஒரு புதையல் போல் பாதுகாப்பேன் என்றும் கபிருன்னிசா கூறுகிறார். “பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள், சிறுவயது மற்றும் கல்லூரி நண்பர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. சில ஆண்டுகளுக்கு பின் அவர்கள் சமூக ஊடகம் மூலம் என்னை தொடர்பு கொண்டார்கள். இப்போது அவர்கள் மீண்டும் என் வாழ்வில் இணைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணங்களை நான் எப்போதும் என்னுடன் வைத்துக் கொள்வேன்” என்கிறார் அவர்.

    கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் கபிருன்னிசாவுடையது போல் இருக்காது. குல்பர்கா சொசைட்டியை சொந்த இடமாக கொண்ட இம்தியாஸ் சயீத் பதான் விஷயம் மாறுபட்ட ஒன்றாகும். பிப்ரவரி 28ம் தேதி நடந்த கலவரத்தில் கூட்டுக்குடும்பத்தில் உள்ள 10 பேரை அவர் இழந்து விட்டார்.

    இதே இடத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாஃப்ரி உட்பட 59 பேர் உயிரிழந்தனர்.

    இதற்கு யாரை குறை கூறுவது, சிறு வயது முதல் நான் பார்த்தவர்கள், பண்டிகைகளை இணைந்து கொண்டாடியவர்கள், எங்கள் வீட்டிற்கு தீ வைத்து கொளுத்தி, எனது உறவினர்களை கொன்று விட்டனர் என்கிறார் இம்தியாஸ்.

    “நான்கு மணி நேரம் என் வீட்டை அனைத்து பக்கங்களில் இருந்து தாக்கிய கூட்டத்தில் இருந்தவர்கள் இதே முகங்கள்தான்” என்கிறார் அவர்.

    கோபத்துடன் பேசும் அவர், “பேய்கள் வசிக்கும் பங்களாக்களுக்கு மீண்டும் திரும்புவதற்கு நான் விரும்பவில்லை. எங்கள் வாழ்வின் துயரத்தை பாருங்கள். நான் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கோம்திபூரில் வசித்து வருகிறேன். என் மாமனார் வீடு உதவி செய்கிறது” என்கிறார்.

    “எனது இரு குழந்தைகளும் இப்போது இளைஞர்களாக வளர்ந்துள்ள போதிலும் எனது பங்களாவில் 3 அறைகளில் கிடைத்த மகிழ்ச்சியை அவர்களுக்கு அளிக்க முடியவில்லை” என்கிறார் அவர்.

    “எங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இல்லை என்பதால் நாங்கள் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் வாழ முடியாது. எங்கள் சமூகத்தை சேர்ந்த சகோதரர்களுடன் வாழும்போது தான் நாங்கள் பாதுகாப்பை உணருகிறோம்” என்கிறார்.

    பி.பி.சி. செய்தியாளர்: முகமது ஷஹீத் (தில்லி)
    ஹரிஷ் ஜஹலை (அகமதாபாத்)
    புகைப்படங்கள்: ஆர்ஜீ ஆலம்
    தொகுப்பு தயாரிப்பு: ஷதாப் நஸ்மி
    வரைகலை: நிகித்தா தேஷ்பாண்டே
    வரைபடம்: ககன் நரே