ஸ்டெர்லைட்: கொள்கை முடிவெடுத்து அரசாணை வெளியிட அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து கொள்கை முடிவெடுத்து புதிய அரசாணை வெளியிட வேண்டுமென தமிழக அரசை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Vedanta
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும், ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும், கூடுதல் நிவாரணம் அளிக்க வேண்டுமென்பது உட்பட 15 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்குகளில் அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், தூத்துக்குடியில் அமைதி திரும்பியுள்ளதாகவும் இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு நிவாரணமாக 20 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது என்றும் ஆலையை மூட அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சரியாக இல்லை என்றும் குடிநீர் வாரியம், மின்சார வாரியம் சார்பில் மட்டுமே இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன என்றும் கூறினார். அந்த அரசாணையை நீதிபதியிடமும் வழங்கினர்.
அந்த அரசாணையை படித்துப் பார்த்த நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அடங்கிய அமர்வு, இந்த அரசாணை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு போதுமானதாக இல்லை. அரசு கொள்கை முடிவெடுத்து ஆலையை மூடுவதாக அறிவித்தால் மட்டுமே அது நிரந்தரமானதாக இருக்குமெனத் தெரிவித்தனர்.
மேலும், இந்த ஆலையிடமிருந்து 100 கோடி ரூபாயை வசூலித்து அதை வைப்பு நிதியில் வைக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த அளவுக்கு ஆலை சூழலை மாசுபடுத்துவதாகக் கூறினர்.

பட மூலாதாரம், Getty Images
தமிழக அரசின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், "மனித உயிர்களுக்கு விலை நிர்ணயிக்க முடியுமா, மனித உயிரின் மதிப்பு 20 லட்ச ரூபாய்தானா?" என்று கேள்வியெழுப்பினர்.
அப்போது தூத்துக்குடியிலிருந்து ஆஜரான வழக்கறிஞர், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தொடர்ந்து துன்புறுத்திவருவதாகவும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்வதாகவும் இதிலிருந்து நிவாரணமளிக்க வேண்டுமென்றும் கோரினார்.
இந்த விவகாரம் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் மனு தாக்கல்செய்தால் விசாரிக்கப்படும் என்று கூறி, இந்த வழக்குகளை வரும் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












