கும்கி 2 கதை என்ன?; 'காட்டேரி' திரைப்பட வெளியீடு எப்போது? - சுவாரசிய திரைத்துளிகள்
முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.
கடைக்குட்டி சிங்கம் - பாடல்கள் வெளியீடு

கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டது. கிராமத்து பின்னணியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, கடைக்குட்டி சிங்கம் படம் பட்டினத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவரையும் கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று கூறினார். அதேபோல் அவருடைய அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் சூர்யாவோடு விரைவில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தையும் கார்த்தி வெளிப்படுத்தியுள்ளார். கடைக்குட்டி சிங்கம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக கொடுக்கப்பட்டது.

ஜீவா நடிக்கும் ஜிப்ஸி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

குக்கூ,, ஜோக்கர் படங்களை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கும் படம் ஜிப்சி. இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். Travel Story வகையில் ஜிப்சி படம் எடுக்கப்படவுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை தொடர்ந்து நடிகர்கள் தேர்வும், படப்பிடிப்பு நடக்கும் இடம் தேர்வு என ப்ரீ புரடெக்ஷன் வேலைகளில் ராஜூ முருகன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

அந்த வேலைகள் அனைத்தையும் முடித்திருக்கும் இயக்குனர் தற்போது சூட்டிங்கை தொடங்கியுள்ளார். ஜிப்சி படத்திற்கான முதல்கட்ட சூட்டிங் காரைக்காலில் ஆரம்பமாகியுள்ளது. இதை தொடர்ந்து ஜிப்சி படத்தின் சூட்டிங் வட இந்திய பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் நடாஷா சிங் ஹீரோயினாக நடிக்கிறார். அதேபோல் சந்தோஷ் நாராயணன் ஜிப்சி படத்திற்கு இசையமைக்கிறார்.

'காட்டேரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

யாமிருக்க பயமேன், கவலை வேண்டம் ஆகிய படங்களை இயக்கியவர் Dee Key. முதல் படம் வெற்றியடைந்த நிலையில் இரண்டாவது படமான கவலை வேண்டாம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் மூன்றாவது படத்திற்கு சிறிது காலம் எடுத்துக்கொண்ட Dee Key, முதல் படத்தின் பாணியில் ஹாரர் கதையை கையில் எடுத்தார்.
அந்த கதைக்கு நடிகர் வைபவ்-வை கதாநாயகனாக தேர்வு செய்து படத்தின் சூட்டிங்கை தொடங்கினார். காட்டேரி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தின் சூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் காட்டேரி படத்தில் வரலட்சுமி சரத்குமார், மீசைய முறுக்கு படத்தில் நடித்த அத்மிக்கா, நகைச்சுவை நடிகர் சதிஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
காட்டேரி படத்தின் சூட்டிங்கை முடித்திருக்கும் இயக்குனர் Dee Key அடுத்தகட்டமாக போஸ்ட் புரெடெக்ஷன் வேலைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறார். ஹாரர் காமெடி வகையில் உருவாகியிருக்கும் காட்டேரி படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

'8 தோட்டாக்கள்' பட இயக்குநரின் அடுத்த படம் தொடக்கம்

தமிழ் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த குறைந்த பட்ஜெட் படங்களில் 8 தோட்டாக்கள் படமும் ஒன்று. அந்த படத்தை வெற்றி என்பவர் தயாரித்து ஹீரோவாகவும் நடித்திருந்தார். த்ரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருந்த 8 தோட்டாக்கள் படத்துக்கு நல்ல விமரசனம் கிடைத்ததோடு கணிசமான லாபமும் தயாரிப்பாளருக்கு வந்தது.
இந்த நிலையில் வெற்றிவேல் தன்னுடைய இரண்டாவது படத்தை தொடங்கியுள்ளார். ஜீவி என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தை வி.ஜே கோபி நாத் என்ற அறிமுக இயக்குநர் டைரக்ட் செய்கிறார். அதேபோல் அஸ்வினி, மோனிகா என்ற புதுமுக நடிகைள் ஹீரோயின்களா நடிக்கின்றனர். ஜீவி படத்திற்கான சூட்டிங் (11.06.18) தொடங்கியுள்ளது. வெற்றி தயாரித்து நடித்த முதல் படமான 8 தோட்டாக்கள் தரமான வெற்றியை பதிவு செய்த நிலையில் இந்த இரண்டாவது படமும் தனக்கு ஹிட்டாக அமையும் என்று உறுதியாகயிருக்கிறார்.

கும்கி 2 கதை என்ன?

பட மூலாதாரம், TWITTER
பிரபு சாலமன் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த படம் கும்கி. இதில் விக்ரம் பிரபுவும், லட்சுமிமேனனும் லீட் ரோலில் நடித்திருந்தனர். கும்கி படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருக்கிறார் பிரபு சாலமன். ஆனால், முதல் பாகத்திற்கும் இரண்டாம்பாகத்திற்கு எந்த தொடர்பும் இல்லாமல் ஒரு புது கதை எழுதியுள்ளார்.
இது யானை சம்மந்தப்பட்ட கதை என்பதால் படத்திற்கு கும்கி 2 என்று பெயர் வைத்துள்ளதாக பிரபு சாலமன் கூறியுள்ளார். ஒரு குட்டி யானைக்கும் ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியலை கும்கி 2 படத்தில் படமாக்குகிறார் இயக்குனர். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்துள்ளது.
விரைவில் மூன்றாம் கட்டபடப்பிடிப்பை தொடங்க பிரபு சாலமன் திட்டமிட்டுள்ளார். கும்கி 2 படத்தில் மதியழகன் என்ற அறிமுக நடிகர் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளரான டி. இமானை மாற்றி நிவாஸ் கே பிரசன்னாவோடு முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார் பிரபு சாலமன்.

விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியீடு

பட மூலாதாரம், TWITTER
கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் பார்ட் 2 படத்தின் ட்ரைலர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக இந்த இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வேலைகள் கடந்த நான்க்கு ஆண்டுகளுக்கு மேல் நடைப்பெற்று வந்தது.
சூட்டிங் போஸ்ட் புரெடெக்ஷன் வேலைகள் என அனைத்து வேலைகளையும் முடித்த கமல்ஹாசன் இன்று படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் விஸ்வரூபம் 2 படம் உருவாகியுள்ளது. இதில் தமிழ் ட்ரைலரை ஸ்ருதிஹாசனும், ஹிந்தி ட்ரைலரை பாலிவுட் நடிகர் அமீர்கானும், தெலுங்கு ட்ரைலரை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட்டுள்ளனர். அதேபோல் படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். முதல் பாகம் பல பிரச்சனைகளை தாண்டி வெளியானது.
அதேபோல் இந்த பாகத்திற்கும் எதிர்ப்பு வருமா என்று கமல்ஹானிடம் கேட்டப்போது. அப்போது நடந்தது அரசியல் அது போன்ற ஒரு நிகழ்வு இப்போது ஏற்படாது. அப்படியே வருமென்றால் அதை அரசியல் வாதியாக சந்திக்க நான் தயாராகவுள்ளேன் என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருப்பதாகவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். விஸ்வரூபம் படத்தில் சேகர் கபூர், நாசர், பூஜாகுமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












