நாளிதழ்களில் இன்று: 'ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் செல்ல வேண்டும்'
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து (ஆங்கிலம்) - சென்ற நிதியாண்டில் 6.7% வளர்ச்சி

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2017-2018ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7%ஆக இருந்ததாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புலள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இது முன்பு கணிக்கப்பட்ட 6.6% எனும் அளவைவிட அதிகமாக இருந்தாலும், முந்தைய 2016-2017ஆம் நிதியாண்டின் 7.1% வளர்ச்சியைவிடவும் குறைவானதே.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் செல்ல வேண்டும்''

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு செல்லவுள்ளது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் நடுப்பக்க கட்டுரை எழுதியுள்ள முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயின் உதவியாளர் சுதீந்திரா குல்கர்னி, காங்கிரஸ் கட்சி விவாதங்களுக்கான கருவியாக இருக்க வேண்டும் என்று முன்பு பேசிய ராகுல் காந்தியும் நாக்புர் செல்ல வேண்டும் அல்லது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத்தை டெல்லியில் உள்ள தனது இல்லத்துக்கு அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மகாத்மா காந்தி இரு முறை ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தினத்தந்தி - தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

பட மூலாதாரம், Getty Images
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும் முயன்றால், அதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சிரிக்கையாக 'கேவியட்' மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஸ்டெர்லைட் வழக்குத் தொடர்ந்தால் தமிழக அரசிடமும் கருத்து கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

டெக்கன் கிரானிக்கல் - பாஜகவுக்கு தொடர்ந்து தனிப்பெரும்பான்மை

பட மூலாதாரம், Getty Images
நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வியை பாரதிய ஜனதா கட்சி சந்தித்து வந்தாலும்,மக்களவையில் பாஜக தொடர்ந்து தனிப் பெரும்பான்மையுடன் உள்ளது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில், நான்கு தொகுதிகள் காலியாக உள்ளன. ஆக தற்போதைய 539 உறுப்பினர்களில், இரு நியமன உறுப்பினர்கள் உள்பட பாஜகவுக்கு 274 உறுப்பினர்கள் உள்ளனர். இது தனி பெரும்பான்மைக்குத் தேவையான 272 உறுப்பினர்களைவிடவும் அதிகம்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












