டிரம்ப் விதித்த புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: வலுக்கும் விமர்சனங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த அதிக அளவிலான இறக்குமதி வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மட்டுமல்லாது, அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் குடியரசு கட்சி உறுப்பினர்களும் ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை விமர்சித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள், எதிர் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் எஃகு பொருட்கள் முதல் பால்-பாயிண்ட் பேனா வரை பல பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்துள்ளனர்.

அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு "உறுதியான மற்றும் சரிவிகித அளவிலான" நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுக்கப்படும் என்று டிரம்பிடம் தொலைபேசி மூலம் பேசிய பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் கூறியதாக அவரது அலுவகலகமான எலிசீ மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஸ்டீல் மற்றும் அலுமினியம் உற்பத்தியாளர்கள் மிகவும் முக்கியம் என்றும், சர்வதேச அளவில் அவற்றில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வரிவிதிப்பை டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.

Trade tariff

பட மூலாதாரம், Reuters

டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளது தங்களை அவமானப்படுத்தும் செயல் என்பர் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். "அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கனடா அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது," என்று அவர் கூறியுள்ளார்.

எஃகு மீது 25% இறக்குமதி வரி விதிப்பது மிகவும் அப்பட்டமானது என்று கூறியுள்ள பிரிட்டன் சர்வதேச வர்த்தகத்துக்கான செயலர் லயாம் ஃபாக்ஸ், "தங்கள் நெருக்கமான கூட்டாளி நாட்டுடன் பழிக்குப் பழி வாங்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது மோசமான பின்விளைவுகளையே உண்டாக்கும்," என்று கூறியுள்ளார்.

மார்ச் மாதம் இந்த வரிவிதிப்பை அறிவித்த டிரம்ப், பேச்சுவார்த்தை நடத்திய சில நாடுகளுக்கு விலக்கு அளித்தார்.

எஃகு பொருட்கள் மீது 25% மற்றும் அலுமினிய பொருட்கள் மீது 10% இறக்குமதி வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

US tariff

பட மூலாதாரம், Getty Images

ஜூலை 1 முதல் 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று கனடா கூறியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் எஃகு, பன்றி இறைச்சி, பழங்கள் ஆகியவை மீது வரிவிதிக்க மெக்சிகோ திட்டமிட்டு வருகிறது.

அமெரிக்கா மற்றும் உலக வர்த்தக அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் இரும்புத் தாது முதல் மூக்குப்பொடி வரை பல பொருட்களை உள்ளடக்கிய 10 பக்க பட்டியலை வரிவிதிப்புக்காக அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: