ஸ்டெர்லைட் மூடல்: அதிகரிக்கும் தாமிர தேவையை சமாளிக்க என்ன வழி?
- எழுதியவர், விக்னேஷ்.அ
- பதவி, பிபிசி தமிழ்
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து, விதிகளை மீறி சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாக அந்த ஆலையை நிரந்தரமாக மூடி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

பட மூலாதாரம், VEDANTA
கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்த, லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தாமிர உருக்கு ஆலையாகும். ஆண்டுக்கு சுமார் நான்கு லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்டுள்ள அந்த ஆலை, உலகிலேயே ஏழாவது மிகப்பெரிய தாமிர ஊருக்கு ஆலையாக இருந்தது.
அதாவது 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த சட்டப்போராட்டமும், மக்கள் போராட்டமும் இந்தியாவில் சக்திவாய்ந்த ஒரு தொழில்குழுமத்தின், உலகின் மிகப்பெரிய ஆலை ஒன்றை இழுத்து மூட வைத்துள்ளது.
மே 22 அன்று போராட்டத்தின்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட, பலர் காயமடைந்த இந்தப் போராட்டம் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு, இன்னல்களையும் மீறி வெற்றிபெற்ற சுற்றுச்சூழல் போராட்டமாக மட்டுமல்லாது மக்கள் போராட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையில் நேரடியாக 3,500 பேர் பணியாற்றியதாகவும் அதன் மூலம் 30,000 பேர் மறைமுக வேலைவாய்ப்பு பெற்றதாகவும் தொழில் துறை ஆய்வு நிறுவனம் ஒன்றின் தரவுகள் தெரிவிக்கின்றன.
வேலை இழந்தவர்களுக்காக வேறு பணி வாய்ப்புகள் வழங்குவதைவிடவும், ஸ்டெர்லைட் நிறுவனம் உற்பத்தி செய்த தாமிரத்திற்கு ஈடு அல்லது மாற்று என்ன, அதனால் உண்டாகும் பொருளாதாரத் தாக்கங்கள் என்ன, பற்றாக்குறையைச் சமாளிக்க என்ன வழி போன்ற பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
அதற்கு காரணம், இந்தியாவின் உள்நாட்டுத் தாமிரத் தேவையில் 36% தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது. மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு மின் உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், இணையதள சேவையைப் பரவலாக்குதல் போன்ற முயற்சிகளில் அரசும் தொழில்துறையும் முனைப்புடன் இருக்கும்போது, நாட்டின் தாமிரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கைவிடவும் சற்று அதிகமான தேவையைப் பூர்த்தி செய்த ஒரு தாமிர உருக்கு ஆலை மூடப்பட்டுள்ளது நிச்சயம் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி மீது ஒரு எதிர்மறையான தாக்கத்தை குறுகிய கால அடிப்படையிலும், நீண்டகால அடிப்படையிலும் உண்டாக்கும்.

பட மூலாதாரம், Getty Images
எனினும், பொதுமக்கள் போராட்டம், துப்பாக்கிச் சூடு, ஒரு சக்திவாய்ந்த பெரு நிறுவனத்திற்கு உண்டாக்கியுள்ள அவப்பெயர் உள்ளிட்ட காரணங்களால் இதுகுறித்து தொழில்துறை அமைப்புகள் எதுவும் பெரிதாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையின் மூடல் தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிய பிபிசி தமிழ் சில தொழில் அமைப்புகளை தொடர்புகொண்டபோதும், அவர்கள் பதிலளிக்கவில்லை.
தனது பெயரையும், தான் சார்ந்துள்ள தொழில் அமைப்பின் பெயரையும் வெளியிடக் கூடாது எனும் நிபந்தனையுடன் பேச ஒப்புக்கொண்டார், இந்தியாவின் முக்கியமான பல்துறை தொழில் அமைப்பு ஒன்றின் தாது மற்றும் கனிமங்கள் துறை வல்லுநர் ஒருவர்.
"இந்தியாவில் தாமிர உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களாக இருந்தவை வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைகள் மற்றும் பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ ஆலைகள். தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தேவையைவிட உற்பத்தி குறைந்துள்ளது, இது நிச்சயமாக மின் தொழில் துறையில் மோசமான தாக்கத்தை உண்டாக்கும்."
போட்டி நிறுவனத்துக்கு என்ன லாபம்?
எனினும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் அதன் போட்டி நிறுவனமான ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு பெரிய அளவில் பலன் உண்டாகப்போவதில்லை, என்கிறார் அவர்.
"ஹின்டால்க்கோ நிறுவனத்தால் உடனடியாக தங்கள் உற்பத்தியை அதிகரித்து, சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்து லாபமீட்ட முடியாது. உற்பத்தியை அதிகரிக்க அவர்கள் ஆலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். உற்பத்தித் திறனை அதிகரிக்க அதிக முதலீடுகள் மட்டுமல்லாது, அரசின் அனுமதியும் தேவை. கனிமம் மற்றும் தாதுத் தொழிலில் சுற்றுச்சூழல் உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெறுவது அவ்வளவு ஒன்றும் சுலபமானதல்ல."
மாற்று என்ன?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள கணினி உள்ளிட்ட எந்தக் கருவிகளையும் ஆலை நிர்வாகத்தினரால் அணுக முடியாது. அவ்வாறு அவர்களால் அவற்றை திரும்ப எடுத்துக்கொள்ள முடிந்தாலும், அவற்றை நாட்டிலுள்ள வேறு ஸ்டெர்லைட் ஆலைகளுக்கு மாற்றி, அவற்றைப் பொருத்தி உற்பத்தியை அதிகரிக்க முடியாது. ஆலையின் கட்டமைப்பில், அனுமதி கிடைத்தால் ஸ்டெர்லைட் நிர்வாகத்தால் பகுதி அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். அதுவும், உடனடியாக நிகழ்வதுபோல தெரியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
தற்போதைய குறுகிய கால தேவையை சமாளிக்க அலுமினிய கம்பிகளை மின்சார வையர்களில் பயன்படுத்தலாம். அவை, விலை குறைவு என்றாலும் பாதுகாப்பானவை அல்ல. அலுமினியம் பயன்படுத்துவது என்பது பின்னோக்கிச் செல்வதைப் போன்றது.
வேறு நாடுகளில் இருந்து தாமிரம் இறக்குமதி செய்வதும் உடனடியாக நிகழக் கூடியதல்ல. ஏனெனில், வெளிநாட்டு நிறுவனங்களுடன் இறக்குமதி ஒப்பந்தங்கள் செய்துகொள்ள இந்திய நிறுவனங்களுக்கு காலதாமதம் ஆகும்.
"இப்போதைய சூழ்நிலையில், தாமிரம் பயன்படுத்தப்படும் பொருட்களின் பற்றாக்குறை, அதனால் உண்டாகும் விலையேற்றம் ஆகியவற்றைத் தவிர்க்க முடியாது என்பது அடிப்படைப் பொருளாதார நியதி."
நீண்ட கால அடிப்படையில் சமாளிக்க, தாமிர இறக்குமதி மற்றும் இந்திய நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகியவையே தீர்வு என்கிறார் அவர்.
இவை இரண்டும் நடக்காதபோது, மின்துறை வளர்ச்சியில் தொய்வும், அதைச் சார்ந்துள்ள பிற தொழில் நடவடிக்கைகளில் சரிவும் உண்டாவது தவிர்க்க இயலாதது என்று கூறி முடித்தார்.
(பிபிசி செய்தியாளர் டெவினா குப்தா அளித்த தரவுகளுடன்)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













