காவிரி வழக்கு: தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு கேட்டதா? - உச்சநீதிமன்றம் கேள்வி

உச்சநீதிமன்றம் கேள்வி

பட மூலாதாரம், Getty Images

அமைச்சர்கள் பலரும் கர்நாடக தேர்தல் பணியில் இருப்பதால், காவிரி தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்க மேலும் இரண்டு வார காலம் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மே 3-க்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வரைவுத் திட்டத்தை தாங்கள் இன்னும் தயார் செய்யவில்லை என்று கூறி மத்திய அரசு ஏற்கனவே அவகாசம் கோரிய நிலையில், இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டது.

ஏப்ரல் 26ஆம் தேதி கர்நாடகா தரப்பிலிருந்து எழுதப்பட்ட கடிதத்தில், இந்த வாரியம் அல்லது குழுவில் இடம்பெறுவோரில், சம்மந்தப்பட்ட மாநிலங்களின் நீர்பாசனத்துறை அமைச்சர்கள் இடம்பெறலாம், ஆனால் அதிகாரிகள் இருக்க கூடாது என்று குறிப்பிட்டிருப்பது குழப்பத்தை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனால், வரைவு தயாரிக்கும் பணி கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் கேள்வி

பட மூலாதாரம், AFP

இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், வரைவு தயாரிக்கும் பணி முழுவதும் மத்திய அரசினுடையது என்றும், இதில் மாநிலங்களிடம் கலந்துரையாட வேண்டிய தேவை இல்லை என்றும் கூறியது.

இந்த விவகாரத்தில், தமிழக அரசு தரப்பின் கோரிக்கைகளை இதேபோல மத்திய அரசு கேட்டதா என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் எழுப்பியது.

எனவே, வரைவு அறிக்கை தயாரிக்க இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, எதனால் தாமதம் என்பது குறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கையை வரும் மே 8ஆம் தேதி சமர்பிக்குமாறு மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குடிநீருக்காக திறக்கப்படும் 5 டி.எம்.சி நீரில் ஒரு டி.எம்.சி நீர் மட்டுமே திறக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.

இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மீதமுள்ள 4 டி.எம்.சி நீரை குடிநீருக்காக திறக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவ்வாறு செய்யாவிட்டால், இதற்கான காரணத்தை அம்மாநிலத்தின் தலைமை செயலாளர் உச்சநீதிமன்றத்தில் வந்து கூறும் சூழல் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: