You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆசாராம் சாமியார்: அரசியல் செல்வாக்கு முதல் பாலியல் வழக்கு வரை - யார் இவர்? #BBCSpecial
- எழுதியவர், பிரியங்கா தூபே
- பதவி, பிபிசி
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு, அந்த வழக்கின் சாட்சிகள் மீதான தாக்குதல் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள சாமியார் ஆசாராம் பாபு மீதான வழக்கின் தீர்ப்பு இன்று வரவுள்ளது.
ஹரியானா சாமியார் பாபா குர்மீத் ராம் ரஹீம் பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டபோது நடந்த வன்முறை சம்பவங்கள் போல ராஜஸ்தானிலும் நிகழக் கூடாது என்று அரசாங்கம் கவனமாக இருக்கும்.
ஆசாராமுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட சட்டப் போராட்டம் அசாத்தியமானது.
ஆசாராம் ஆன அசுமால் ஹர்பலனி
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் பெராணி கிராமத்தில் ஏப்ரல் 1941இல் பிறந்த ஆசாரமின் இயற்பெயர் அசுமால் ஹர்பலனி.
வர்த்தகம் செய்யும் சிந்தி சமூகத்தைச் சேர்ந்த அவரது குடும்பம் 1947 தேசப் பிரிவினைக்கு பிறகு அகமதாபாத்தில் குடியேறியது. அவர் 60களில் லீலாஷா எனும் சாமியாரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார். லீலாஷாதான் அசுமாலுக்கு ஆசாராம் என்று பெயர் சூட்டினார்.
1972இல் தனது முதல் ஆசிரமத்தை அகமதாபாத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் சபர்மதி நதிக்கரையில் அமைத்தார். குஜராத்தின் பிற நகரங்கள் வாயிலாக அவர் வேறு மாநிலங்களுக்கும் மெதுவாக விரிவடைந்தார்.
ஆரம்பத்தில் ஏழைகள், பின்தங்கிய மற்றும் பழங்குடியின மக்களை கவர்ந்த ஆசாராம், குஜராத்தின் நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர வர்க்க மக்களிடையேவும் பிரபலமாகத் தொடங்கினார்.
தொடக்க ஆண்டுகளில் அவரது சொற்பொழிவுக்கு பிறகு ஆசிரமத்தில் வழங்கப்பட்ட இலவச உணவால் அவர் பிரபலம் அடைந்தார். அவரது இணையதளத்தில் அவருக்கு 40 லட்சம் பக்தர்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அவரது மகனின் உதவியுடன் அவரது ஆசிரமத்திற்கு உலகெங்கும் 400 கிளைகளை நிறுவியுள்ளார்.
அரசியல் செல்வாக்கு
ஆசாராமின் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்ததால் அதை வாக்குகளாக மாற்ற அரசியல் கட்சிகள் முயன்றன. 1999-2000 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, நிதின் கட்கரி ஆகியோர் அவரது பக்தர்கள் ஆயினர். காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங், கமல்நாத், மோதிலால் வோரா ஆகியோரும் அந்தப் பட்டியலில்அடக்கம்.
பாரதிய ஜனதாவின் முன்னாள் மற்றும் இந்நாள் முதல்வர்களாக உள்ள சிவ்ராஜ் சிங் சவுகான், உமா பாரதி, ரமன் சிங், பிரேம் குமார் துமால், வசுந்தரா ராஜே ஆகியோரும் அவரது பக்தர்கள்தான்.
2000ங்களின் தொடக்கத்தில் இன்றைய பிரதமர் நரேந்திர மோதியும் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்திற்கு செல்லும் முக்கிய நபராக இருந்தார். 2008இல் அவரது மடேரா ஆசிரமத்தில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதும் அவரது ஆசிரமத்திற்கு செல்வதை அரசியல்வாதிகள் தவிர்த்தனர்.
மடேரா ஆசிரமத்தில் என்ன நடந்தது?
ஜூலை 5, 2008 அன்று 10 வயதான அபிஷேக் வகேலா மற்றும் 11 வயதான தீபேஷ் வகேலா ஆகியோர், மடேரா ஆசிரமத்திற்கு வெளியில், காய்ந்துபோன சபர்மதி நதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அதற்கு சில நாட்கள் முன்புதான் ஆசாராமின் குருகுலத்தில் அவர்களை அவர்கள் பெற்றோர் சேர்த்தனர்.
அப்போதைய மாநில அரசு அதை விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தது. அதன் அறிக்கை இன்று வரை வெளியாகவில்லை. 2012இல் அந்த ஆசிரமத்தின் ஏழு ஊழியர்கள் மீது கொலை செய்யும் நோக்கம் இல்லாமல் அவர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்போது அந்த வழக்கு அகமதாபாத் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஜோத்பூர் வழக்கு
ஆகஸ்ட் 2013இல், சாஜகான்பூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் ஆசாரமுக்கு எதிராக பாலியல் வல்லுறவு வழக்கு பதிவு செய்தது. அந்தப் பெண்ணின் தந்தை அந்த சம்பவத்துக்கு முன்பு அவரது சொந்த செலவில் ஆசாராம் பாபுவுக்கு ஆசிரமம் ஒன்றைக் கட்டியிருந்தார்.
அவரது 16 வயது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆகஸ்ட் 7, 2013 அன்று சிந்வாரா குருகுலத்தில் இருந்து அவரது தந்தைக்கு அழைப்பு வந்தது. அந்தப் பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாகவும் அதை ஆசாராம் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டது.
அடுத்தநாள் அந்தக் குடும்பம் கிளம்பி ஆசிரமத்துக்கு சென்றது. ஆகஸ்ட் 15 அன்று பேயை விரட்டுவதாகக் கூறி ஆசாராம் அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
லஞ்சம் , மிரட்டல் என அனைத்தையும் கடந்து தங்களைவிடவும் பல மடங்கு செல்வாக்கு நிறைந்த ஆசாராம் பாபுவுக்கு எதிராக அந்தக் குடும்பம் போராடி வருகிறது.
கொலை செய்யப்பட்ட சாட்சிகள்
பிப்ரவரி 28, 2014 அன்று ஆசாராம் மற்றும் அவரது மகன் நாராயண் சாய் பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம்சாட்டிய இரு சகோதரிகளில் ஒருவரது கணவர் சூரத் நகரில் தாக்கப்பட்டார்.
அடுத்த 15 நாட்களில் ஆசாராமின் காணொளி எடுக்கும் கலைஞர் ராகேஷ் படேல் தாக்கப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு தினேஷ் பங்காணி எனும் மூன்றாவது சாட்சியின்மீது திராவகம் வீசப்பட்டது.
கொலைவெறித் தாக்குதல்களில் அவர்கள் மூவருமே உயிர் பிழைத்தனர். மே 23, 2014இல் ஆசாராமின் தனிச் செயலராக இருந்த அம்ரித் பிரஜபதி மீது தாக்குதல் நடந்தது. மிகவும் அருகில் இருந்து சுடப்பட்ட 17 நாட்களில் அவர் இறந்தார்.
ஆசாராம் பாபு குறித்து 187 கட்டுரைகள் எழுதிய பத்திரிகையாளர் நரேந்திர யாதவ் கழுத்தில் வெட்டப்பட்டது. 76 தையல்கள் மற்றும் மூன்று அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு அவர் புதுவாழ்வு பெற்றார்.
ஜனவரி 2015ல் இன்னொரு சாட்சியான அகில் குப்தா முசாபர்நகரில் சுட்டுக்கொல்லப்பட்டடார். அடுத்த ஒரு மாதத்தில் ஆசாராமிடம் பணி புரிந்த ராகுல் சாஹான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லிவிட்டு வெளியே வந்ததும் தாக்கப்பட்டார். அந்தத் தாக்குதலில் அவர் உயிர் தப்பினாலும் 2015 நவம்பர் முதல் இன்று வரை அவரைக் காணவில்லை.
மே 13, 2015இல் பானிபட்டில் மகேந்திர சாவ்லா எனும் சாட்சி தாக்கப்பட்டார். அப்போது முதல் அவரது உடல் பாதி செயலிழந்த நிலையில் உள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில் ஜோத்பூர் வழக்கின் இன்னொரு சாட்சியான 35 வயதாகும் கிர்பால் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக சாட்சி சொல்லியிருந்தார்.
ஆசாராமின் வழக்கறிஞர்கள்
ஆசாராமுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர்கள் அனைவருமே அதிகம் கட்டணம் வசூலிப்பவர்கள். ராம்ஜெத் மலானி, ராஜூ ராமச்சந்திரன், சுப்பிரமணியன் சாமி, சித்தார்த் லுத்ரா, சல்மான் குர்ஷித், கே.டி.எஸ்.துள்சி, யு.யு.லலித் ஆகியோர் அந்தப் பட்டியலில் அடக்கம்.
இதுவரை பல்வேறு நீதிமன்றங்கள் ஆசாராமின் பிணை மனுக்களை 11 முறை நிராகரித்துள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்