You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப் பார்வை: மாணவர்களை கொலை செய்து உடலை அமிலத்தில் கரைத்த கும்பல்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
மாணவர்களை கொலை செய்து உடலை அமிலத்தில் கரைத்த கும்பல்
மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் கடந்த மாதம் கடத்தப்பட்ட மூன்று திரைப்பட மாணவர்கள் கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் அமிலத்தில் கரைக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் 20களில் இருக்கும் அந்த மாணவர்கள், எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்று கருதி ஜலிஸ்கோ நியூ ஜெனெரேஷன் கார்டெல் எனும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஹிட்லருக்கு பிடித்த இசைக்கலைஞரின் கடிதம் ஏலம்
அடால்ஃப் ஹிட்லருக்கு பிடித்தமான இசைக் கலைஞர் ரிச்சர்டு வாக்னர், தங்கள் கலாசாரத்தில் யூதர்கள் உண்டாகக்கூடிய பாதிப்பு குறித்து எச்சரித்து எழுதிய கடிதம் ஒன்று ஜெருசலேமில் 34,000 அமெரிக்க டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
யூதர்கள் எதிர்ப்பு மனநிலையில் இருந்த வாக்னர், பிரெஞ்சு தத்துவவியலாளர் எட்வொர்டு ஸ்க்யூரேவுக்கு ஏப்ரல் 1869இல் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.
241 ஆண்டுகள் சிறை தண்டனை
தனக்கு 16 வயதாக இருந்தபோது திருட்டு உள்ளிட்ட வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்ட பாபி பாஸ்டிக் எனும் 39 வயது நபருக்கு விதிக்கப்பட்ட 241 ஆண்டுகள் சிறை தண்டனையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அவருக்கு 112 வயதாகும் வரை பாபி சிறையிலிருந்து வெளியே போக பரோல் வழங்கப்படமாட்டாது.
பனிக்கட்டிகளிலும் பிளாஸ்டிக் நுண் துகள்கள்
ஆர்டிக் பெருங்கடலில் மிதக்கும் பனிக்கட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பிளாஸ்டிக் நுண் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளைவிடவும் இது இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகமாகும். 17 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் நுண் துகள்கள் உறைந்த கடல் நீரில் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்