You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் நிர்பந்தங்களுக்கு நாடாளுமன்றமும் விதிவிலக்கல்ல: ரேணுகா சௌத்ரி
தனக்கு கீழ் உள்ளவர்களை பாலுறவுக்கு நிர்பந்திப்பது திரைத்துறையில் மட்டும் நடக்கவில்லை. எல்லாத் துறைகளிலும் நடக்கிறது. நாடாளுமன்றம் இதில் விதிவிலக்கு என்று நினைத்துவிடவேண்டாம் என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ரேணுகா செளத்ரி.
பாலிவுட்டில் நடிகைகள் சம்மதத்துடனேயே பாலியல் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதனால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதாகவும் பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான் கூறியிருந்தார். 69 வயதான சரோஜ் கான் 2000க்கும் மேற்பட்ட பாடல்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், சரோஜ் கான் கூறிருப்பது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பியும், காங்கிரஸ் தலைவருமான ரேணுகா சௌத்ரி, ''தனக்கு கீழ் உள்ளவர்களை பாலுறவுக்கு நிர்பந்திப்பது திரைத்துறையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடக்கிறது என்பது கசப்பான உண்மை. அதற்கு நாடாளுமன்றமோ, அல்லது வேறு எந்த பணியிடமோ விதிவிலக்கல்ல. மேற்கத்திய உலகை நாம் பார்த்தால், புகழ்பெற்ற பல நடிகைகளும், தாங்கள் அனுபவிக்கும் பாலியல் பிரச்சனைகளை #MeToo வில் வெளிப்படுத்துகின்றனர். நாமும் எழுந்து நின்று #MeToo சொல்வதற்கான நேரம் இது'' என கூறியுள்ளார்.
ஹாலிவுட் நடிகர் ஹார்வி மீதான பாலியல் புகார்களை நடிகைகள் வைக்கத் துவங்கியது முதல், பெண்கள் அவர்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து #MeToo என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி எழுதத் தொடங்கினர்.
அதன் பிறகு பல புகழ்பெற்ற நடிகைகளும், விளையாட்டு வீராங்கனைகளும் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை #MeToo ஹேஷ்டேக்கின் கீழ் பதிவு செய்தனர். இப்போது இந்தியர்களும் #MeToo ஹேஷ் டேக்கில் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்துகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்