பாலியல் வல்லுறவு செய்திகளை இந்திய ஊடகங்கள் வெளியிடும் விதம் சரியா? #BBCShe

    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி

"பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவரிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது அவரிடம் மிக பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது".

"ஊடக நபர்கள் இந்த சம்பவம் பற்றி அக்கம்பக்கத்தவரிடம் கேட்கின்றனர். பின்னர் அந்த சம்பவம் வெளியிடப்படுகிறது. இந்தப் பெண்களை தெரிந்தவர்களுக்கும் அந்த செய்தி தெரியவருகிறது".

பாட்னா கல்லூரியிலுள்ள மாணவியர். தங்களின் மனதில் உள்ளவற்றை பற்றி பேச தொடங்கியபோது, இன்று அவர்களின் எல்லா வேதனைகளையும், குழப்பங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தது போல தோன்றியது,

ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்வுகள் அனைத்தையும் அவர்கள் தெளிவாக விமர்சனத்திற்குட்படுத்தினர்.

பாலியல் வல்லுறவு சம்பவங்களைப் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடும் விதம் பற்றி, அவர்கள் இந்த அளவுக்கு கோபம் கொண்டிருக்கிறார்கள் என்பது முன்னர் எதிர்பார்க்கப்படாதது.

#BBCShe பணித்திட்டத்தின்படி, இந்தியாவின் 6 நகரங்களிலுள்ள பெண்களை நாங்கள் சந்திக்க தொடங்கியுள்ளோம். அவர்களின் முக்கிய கரிசனைகள் பற்றி நாங்கள் அவர்களோடு பேசவுள்ளோம். அவர்களின் கருத்துக்களை மனதில் வைத்துக் கொண்டு செய்திகளை எழுதலாம், ஆய்வுகளை மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தின் முதல் இடம் பாட்னாவாகும்.

கல்லூரி மாணவியரின் முன்னால் நான் ஒலிவாங்கியை வைத்தவுடன், திடீரென பலர் கைகளை உயர்த்தினர்.

அவர்கள் பேசியதை கேட்டபோது, டெல்லியின் அருகேயுள்ள வைசாலியில், ஒரு பெண் அவருடைய விடுதிக்கு அருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது.

அவருடைய சடலம் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளில் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய ஆடைகள் கிழிந்திருந்தன.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட அவரது அடையாளத்தை மறைக்க வேண்டும் என்கிற சட்டம் இருக்கிறபோதும், ஊடகங்கள் அவருடைய பெயரை வெளிப்படுத்திவிட்டன.

மகந்த் கல்லூரியில் முன்வரிசையில் இருந்து பேசியவர்கள் அனைவரும் கல்லூரியில் நடைபெற்ற பெண்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்.

இந்த பெண்கள் தின நிகழ்வுக்கு முன்னால், அவர்களின் வயதுக்கு சமமான குழுவிலுள்ள ஒரு பெண் மீது பாட்னாவில் ஆஸிட் வீசப்பட்டிருந்தது.

அந்த சம்பவம் நடைபெற்ற நாளில், அந்தப் பெண்ணை விட சில வயது மூத்தவரான தாய்வழி மாமா அந்த பெண்ணுடன் சென்றுள்ளார்.

அடுத்த நாள், ஆஸிட் வீச்சு பற்றி செய்திகள் வெளிவராமல், அந்த பெண்ணுக்கும், அவருடைய மாமாவுக்கு இடையிலான உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு செய்தித்தாள்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

இத்தகைய செய்தி வெளியீடுகள் பற்றி பெண்கள் மிகவும் கோபம் கொண்டிருந்தனர்.

"செய்திகளில் பெண்கள் பற்றி எப்போதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவர் என்ன அணிந்திருந்தார்? எப்போது அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்? அவரோடு சென்றது யார்?..." என்ற கேள்விகளே அதிகம் இடம்பெறுகின்றன.

"இத்தகைய சூழ்நிலையில் எந்தவொரு பெண் வெளியே செல்வாள்? அவர் அமைதியாகவே இருக்க விரும்புவார். சல்வார்-கமீஸ் அணிந்து வரும் பெண்களும் வன்முறையை சந்திக்க வேண்டியுள்ளது. ஆடை ஒரு பொருட்டல்ல."

மகந்த் கல்லூரியில் கூடியிருந்த பல பெண்கள் சல்வார்-கமீஸ் அணிந்திருந்தனர்.

ஜீன்ஸ் மற்றும் மேலாடையை சிலர் அணிந்திருந்தனர். அந்தப் பெண்களில் பெரும்பாலோர் பாட்னாவில் பிறந்து, அங்கேயே வளர்ந்தவர்கள்.

பீகார் அரசின் திட்டங்களாலும், உதவித் தொகையாலும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மகந்த் கல்லூரி மகளிருக்கான ஒரு கல்லூரியாகும்.

இந்தப் பெண்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள், அவர்களின் உரிமைகளை புரிந்துகொள்வது மற்றும் வெளிப்படையாக பேசுவது ஆகியவற்றுக்கு இந்த சூழல் மிகவும் முக்கியம் என்று உளவியல் துறையின் தலைவர் தெரிவித்தார்,

ஆனால், இத்தகைய மாற்றம் ஆண்களிடத்தில் ஏற்படுவதில்லை.

பீகாரிலுள்ள மூத்தப் பத்திரிகையாளர் ராஜ்னி சங்கரின் கருத்துப்படி, குற்ற அறிக்கை பெரும்பாலும் ஆண்களால் வழங்கப்படுகிறது. எனவே அவர்களில் சிலரின் பார்வையும், உணர்வும் எதிர்பார்ப்பதை விட குறைவாகும்.

அவருடைய கருத்தில் "சிலரின்" என்கிற சொல்லுக்கு கவனம் அளிப்பது முக்கியமாகும்.

வன்முறை பற்றி அவர்களுக்கு தேவையானதைவிட அதிக தகவல்களை சில ஆண் செய்தியாளர்கள் கண்டறிகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை "ருசிகரம்" எனக் கண்டறிந்து, அதில் சாகசம் காண்கின்றனர். இதில் "ருசிகரம்" பெறுவதுபோலும், சாகசங்கள் வருவது போலவும் பாலியல் வல்லுறவு பற்றி செய்திகள் தயாரிக்கின்றனர் என்று ராஜ்னி மேலும் கூறினார்.

தெற்காசியாவிலுள்ள பெண் ஊடக பணியாளர்கள் நிறுவனத்தின் பீகார் பிரிவின் தலைவராக ராஜ்னி சங்கர் பணியாற்றி வருகிறார். 'ஹிந்துஸ்தான்' செய்தி நிறுவனத்தின் பீகார் பிரிவின் தலைவராகவும் அவர் செயலாற்றி வருகிறார்.

ஆண் பத்திரிகையாளர்களுக்கு பயிலரங்குகள் ஏற்பாடு செய்து இந்த பிரச்சனைக்கு தன்னுடைய செய்தி நிறுவனப் பிரிவில் தீர்வு காண இவர் முயற்சித்துள்ளார்.

இது தொடர்பாக, மாற்றங்களே ஏற்படவில்லை என்றில்லை. பீகாரின் டைய்னிக் பாஸ்கார் செய்தித்தாளின் ஆசிரியரின் கருத்துப்படி, அவர் தன்னுடைய அணியில் ஆழமாக சிந்தித்து பெண்களை நியமனம் செய்துள்ளார்.

அவருடைய குழுவில், மொத்தமுள்ள 30 பத்திரிகையாளர்களில் 3 பேர் பெண்கள்.

இருப்பினும், இந்தப் பெண்கள் குற்ற அறிக்கையையோ, வேறு செய்திகளையோ வழங்குவதில்லை. இவர்கள் பெண்களோடு தொடர்புடைய பிரச்சனைகளை குறித்து மட்டுமே செய்திகள் வழங்குகின்றனர்.

கல்லூரியில் நான் நடத்திய உரையாடலின் உள்ளடக்கங்களை நான் அவரிடம் விவரித்தேன்.

அதிக உணர்வலைகளை எழுப்பக்கூடிய விதமாக செய்திகளை வழங்குவதால், பெண்கள் புகார் அளிப்பதற்கு முன்னால் இரண்டு முறை சிந்திக்க வேண்டிய நிலையை உருவாக்கும் ஊடகங்களின் அணுகுமுறை பற்றி அவரிடம் கேட்டேன்.

ஊடகம் பற்றிய இந்த முத்திரை பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ளதால், மாற்றத்திற்கு அதிக காலம் தேவைப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முதல்படியாக பெண் பத்திரிகையாளர்களை ஆதிகரிக்க வேண்டும். ஆண் பத்திரிகையாளர்களின் உணர்திறனை மேம்படுத்த வேண்டியது இரண்டாவது படியாகும் என்று அவர் கூறினார்.

இந்த கல்லூரியை சேர்ந்த மாணவிகளும் சில பரிந்துரைகளை வழங்கினர்.

"பாலியல் வல்லுறவு பற்றி செய்தி அறிக்கை இருக்க வேண்டும். அந்த பெண்ணை பற்றி அல்ல. அந்த செய்தி ஆண்களுக்கு அதிக கவனம் அளித்து வழங்கப்பட வேண்டும். ஆண்களுடைய ஆடை மற்றும் நடத்தை பற்றி கேள்விகள் எழுப்பப்பட வேண்டும்"

சம்பந்தப்பட்ட இளைஞர் கடும் தண்டனை பெற்றால், அது ஓர் எடுத்துக்காட்டாக தெரிவிக்கப்பட வேண்டும்.

பாட்னா கல்லூரி மாணவியரிடம் இருந்த கருத்து ஒற்றுமை என்னுடைய மனதுக்கு நிறைவாக இருந்தது.

"எங்களுக்கு அதிகாரம் அளிக்கும் விதமாக செய்திகளை தயாரியுங்கள். எங்களுக்கு அச்சத்தை ஊட்டுகின்ற விததில் வேண்டாம்" என்பதே அந்த கருத்து ஒற்றுமை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: