நாளிதழ்களில் இன்று - ஐ.பி.எல். போட்டி: ’கடும் கட்டுப்பாடு, கமாண்டோ படை பாதுகாப்பு’
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினமணி - 'ஐ.பி.எல்.: கடும் கட்டுப்பாடு, கமாண்டோ படை பாதுகாப்பு'

பட மூலாதாரம், Getty Images
சென்னை சேப்பாக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று விவரிக்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்தக் கூடாது என தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையும் மீறி போட்டி நடத்தப்பட்டால், மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் விளைவாக சேப்பாக்கம் மைதானத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும்போது மைதானத்துக்கு வெளியேயும், உள்ளேயும் 100 ஆய்வாளர்கள், 200 உதவி ஆய்வாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கூடுதல் ஆணையர்கள், 3 இணை ஆணையர்கள், 13 துணை ஆணையர்கள், 29 உதவி ஆணையர்கள் ஆகியோர் பாதுகாப்பைக் கண்காணிக்கின்றனர். மேலும் கமாண்டோ படையின் ஒரு அணியும் அதி தீவிரப் படையின் 4 குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் பேக், செல்லிடப்பேசி, ரேடியோ, டிஜிட்டல் டைரி, மடிக்கணினி, டேப் ரிகார்டர், பைனாகுலர், ரிமோட் கன்ட்ரோல், ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய கார் சாவி, இசைக் கருவிகள், விடியோ கேமரா, பட்டாசு, தண்ணீர் பாட்டில்கள், சிகரெட், பீடி, பேட்டரி, கருப்புத் துணிகள், பதாகைகள், கொடிகள், உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள் ஆகியவை கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டு செல்ல முற்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.
மைதானத்துக்குள் பொருள்களை வீசுபவர்கள், ரசிகர்களுக்குத் தொந்தரவு செய்பவர்கள், தவறான வகையில் பேசுபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்." என்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி இந்து (ஆங்கிலம்) - 'காவிரி: தொடரும் போராட்டங்கள்'

பட மூலாதாரம், Getty Images
திங்கட்கிழமையும் சென்னையின் பல பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து (ஆங்கிலம் ) நாளிதழ். வேளச்சேரியில் மதிமுகவும், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

தினத்தந்தி - 'தமிழ்ப்பட இயக்குநர்கள் புதிய பேரவை தொடங்கினர்'
தமிழ் மற்றும் தமிழர் பிரச்சினைகளுக்காக போராட நடிகர் சத்யராஜ், பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்ட சினிமா இயக்குனர்கள் புதிய பேரவை தொடங்கினர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Twitter
"தமிழகத்தில் காவிரி பிரச்சனைக்கான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இளைஞர்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமிழ் திரையுலகம் சார்பில் நேற்று முன்தினம் மவுன போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் சினிமா இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, அமீர், தங்கர்பச்சான், கவுதமன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் தலைமையின் கீழ் புதிய பேரவை சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு 'தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது." என்கிறது அந்த செய்தி.

தி இந்து (தமிழ்) - '19 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது'
மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துவிட்டதால் தமிழகத்தில் 19 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன. இதனால் வரும் கல்வி ஆண்டு கலந்தாய்வில் பிஇ, பிடெக் படிப்புகளில் 4,665 இடங்கள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது என்கிறது தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி.
"தமிழகத்தில் 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 17 அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், 556 தனியார் சுயநிதி கல்லூரிகள் என 586 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகின்றன. 586 கல்லூரிகளிலும் பிஇ, பிடெக் படிப்புகளில் 2 லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. அவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
6 ஆண்டுகளாக பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் குறைந்து மாணவர்களின் பார்வை கலை அறிவியல் படிப்பு பக்கம் திரும்பத் தொடங்கியது. இதனால், ஆண்டுதோறும் பொறியியல் படிப்பில் காலியிடங்கள் அதிகரித்தன. கடந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்து 90 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. ஒருசில தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிக மிகக்குறைவாக இருந்தது. இதனால், பொறியியல் கல்லூரிகளை கலை அறிவியல் கல்லூரிகளாகவும், பாலிடெக்னிக் கல்லூரிகளாகவும் மாற்றும் முடிவுக்கு பல கல்லூரி நிர்வாகங்கள் வந்தன.
இந்நிலையில் 2018-19ல் நாடு முழுவதும் ஏறத்தாழ 200 பொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டு ஏஐசிடிஇ-யிடம் விண்ணப்பித்துள்ளன. இதனால், அகில இந்திய அளவில் பொறியியல் படிப்பில் 80 ஆயிரம் இடங்கள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பொறியியல் கல்லூரி மூட வேண்டுமானால் அந்த கல்லூரி எந்த பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறதோ அதனிடமிருந்து தடையின்மை சான்று (என்.ஓ.சி.) வாங்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் என்ஓசி பெற்ற பின்னரே மூடுவதற்கு அனுமதி கோரி ஏஐசிடிஇ-யிடம் விண்ணப்பிக்க முடியும்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

காவிரி விவகாரத்தில் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை

பட மூலாதாரம், தி இந்து

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'நிதி அமைச்சர்கள் கூட்டம், புறகணித்த தமிழக அரசு'
திருவனந்தபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்க இருக்கும் தென் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தை புறகணித்து இருக்கிறது தமிழக அரசு. 15 வது நிதி ஆணையத்தினால், தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டத்தை கேரள அரசு ஒருங்கிணைத்துள்ளது என்கிறது ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
- ‘சிரியா ரசாயன தாக்குதலுக்கு ஆதாரம் இல்லை‘: ரஷ்யா
- இமாச்சல்: பள்ளிப் பேருந்து பள்ளத்தில் சரிந்ததில் 23 குழந்தைகள் உள்பட 27 பேர் பலி
- காமன்வெல்த்: டேபிள் டென்னிஸ், பேட்மின்டனில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம்
- ஒரு தொலைக்காட்சித் தொடர் உருவாக்கிய துப்பாக்கி வீராங்கனை
- காவிரி: `ஸ்கீம்' என்ற வார்த்தையால் தொடரும் குழப்பம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












