போதையால் பெருகும் தற்கொலை: பட்டியலில் தமிழகத்தின் இடம் என்ன? #BBCShe

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC
- எழுதியவர், ஜான்வீ மூலே
- பதவி, பிபிசி
பெருகிவரும் போதைப் பொருள் தொடர்புடைய தற்கொலைகளின் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் இருக்கிறது? இதோ மகாராஷ்டிராவை மையப்படுத்திய இந்த போதைப் பழக்கம் தொடர்பான கட்டுரையில் அதற்கான விடை இருக்கிறது.
"என் சிறுகுழந்தையின் கண் முன்பே நான் பிரவுன் சுகரை பயன்படுத்தி வந்தேன். அவன் பெயரைப் பயன்படுத்தி நான் காசுக்காக பிச்சைகூட எடுத்துள்ளேன்."
முன்னாளில் போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்த துஷார் நாட்டு என்பவர் போதைப்பொருள் பற்றிய தனது நினைவலைகளை பகிர்ந்து கொள்கிறார்.
அவருக்கு வெறும் 18 வயதானபோதே, எல்லா விதமான போதைப் பொருள்களையும் உட்கொள்ள ஆரம்பித்துவிட்டார். "அதன் உச்சமாக, எனது தயார் தற்கொலைக்கு முயன்றார். இறுதியாக, எனது மனைவி அளித்த புகாரில் என்னை சிறையில் அடைத்துவிட்டார்கள்."
அவர் ஒரு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பிறகு அவருக்கு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது. அங்கு சென்ற ஒவ்வொரு முறையும் அவரது குணாதிசயங்கள் மேம்பட்டன.
"என்னுடைய அகங்காரத்தின் காரணமாக என்னால் தொடர்ந்து போதை மருந்து எடுக்காமல் இருக்கமுடியவில்லை. மீண்டும், மீண்டும் போதை மருந்துகளுக்கு அடிமையானேன்," என்றார் அவர்.
ஒரு இளம் சமூக சேவகர் இவரைப்பற்றி எங்களிடம் கூறியதையடுத்து நாங்கள் நாக்பூரிலுள்ள ஒரு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் துஷாரை சந்தித்தோம்.

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC
இதுபோன்ற நிலைகளை பற்றி ஊடகங்கள் அதிகளவில் செய்திகளை வெளியிட வேண்டும் என்று பிபிசி ஷியிடம் பேசியபோது அவர் பரிந்துரைத்தார்.
நாம் அறிந்துகொண்ட விஷயங்கள் மிகவும் திடுக்கிட வைக்கும் வகையில் இருந்தன.
'உடாட்டா' மகாராஷ்டிரா?
ஒரு பாலிவுட் படம் எடுக்கப்படுமளவுக்கு பஞ்சாப் போதை மருந்துகளுக்கு எதிரான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.
ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தின் தரவுகளும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் போதை மருந்து காரணமாக தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன.
இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் நிகழ்ந்ததாகப் பதிவு செய்யப்பட்ட 3,647 தற்கொலைகளில் 1,372 தற்கொலைகள் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளன.

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC
552 தற்கொலைகளுடன் தமிழ்நாடு இரண்டாமிடத்திலும், கேரளா 475 மற்றும் பஞ்சாப் 38 என முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும் உள்ளன.
கன்னாபின்னஸ், ஹஷீஷ், பாங், ஓபியம், பிரவுன் சுகர் மற்றும் வேதிப் பொருள்களான டர்பன்டைன், ஒயிட்னர், நெய்ல் பாலிஷ், பெட்ரோல் போன்ற பல்வேறு வகையான போதை மருந்துகளை உட்கொள்பவர்களை சமூக சேவகர்கள் மற்றும் ஆலோசகர்கள் சந்திக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட பொருள்களில் பெரும்பாலானவற்றை போதைக்காக உட்கொண்டால் மதுபானம் அருந்தியது போன்ற வாடை வராது என்பதால் இவற்றை கண்டறிவது கடினமாக உள்ளது.
பெண்களின் நிலையென்ன?
பெண்களுக்கு மத்தியில் போதைப் பழக்கத்தை கண்டறிவது இன்னும் கடினமாக உள்ளது.
"பெண்களின் போதைப் பழக்கம் பெரும் களங்கமாக கருதப்படுகிறது. எனவே மக்கள் அதை மறைக்க முற்படுவதுடன், அப்பழக்கத்துக்கு ஆளான பெண்களை மருத்துவர்களிடமும் அழைத்து செல்வதில்லை," என்று கூறுகிறார் மகாராஷ்டிராவிலுள்ள முக்தாங்கன் என்ற போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குனரான முக்தா பன்டம்பேகர் என்பவர்.
மருத்துவ உளவியலாளரும் மற்றும் ஆலோசகருமான ஸ்வாதி தர்மாதிகாரி என்பவர், "ஆண்களுக்கு அளிக்கப்படுவதை போன்ற முறையான சிகிச்சைகள் பெண்களுக்கு கிடைப்பதில்லை. பெண்களுக்கு வெகு சில மறுவாழ்வு மையங்களே உள்ளன. பெண்களிடம் எளிதாக பணம் பிடுங்கப்படுகிறது," என்று கூறுகிறார்.
நாட்டிலேயே அதிகளவிலான அரசாங்க உதவிபெறும் மறுவாழ்வு மையங்கள் மகாராஷ்டிராவில்தான் உள்ளன.

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC
நாட்டிலுள்ள 435 போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களில் 69 மையங்கள் மகாராஷ்டிராவில் மட்டும் உள்ளன. அவற்றில் ஒன்றிரண்டு மையங்கள் மையங்கள் மட்டுமே பெண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன.
"போதைப்பொருட்களை எடுத்துக்கொள்ளும் ஒரு பெண்ணை சமூக சேவகர் பார்த்தால், அவரால் அவரை எங்கு அழைத்து செல்ல முடியும்?" என்று கேள்வியெழுப்புகிறார் முக்தாங்கனின் பிராந்திய ஒருங்கிணைப்பாளரான சஞ்சய் பகத்.
இதற்கென பயிற்சியளிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பெண்களுக்கான பிரத்யேக மறுவாழ்வு மையங்களை நடத்துவதென்பது எளிதானதல்ல.
2009 ஆம் ஆண்டில், முக்தாங்கன் 'நிஷிகந்த்' என்ற பெயரில் பெண்களுக்கென 15 படுக்கைகள் கொண்ட ஒரு சிறப்புப் பிரிவைத் தொடங்கியது."
"இங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பெண்களென்பதால், அனுமதிக்கப்படும் நோயாளிகள் வசதியாக உணருவார்கள்" என்று முக்தா கூறுகிறார்.
"தங்களது தந்தையர்கள், கணவர்கள் அல்லது பிள்ளைகளின் போதைமருந்து பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஓர் ஆதரவுக் குழு உள்ளது. தொழில்முறை மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் சேர்ந்து நோயாளிகளுக்கு உதவும் வகையில் நாங்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்."
இந்த உள்ளடக்கிய அணுகுமுறையானது போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வந்த சில பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளது.
போதைப் பழக்கத்தால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றிய ஒருங்கிணைந்த தரவு திரட்டப்படாததே உண்மையான பிரச்சனையாக உள்ளது.
தெரிந்தது கொஞ்சம்
2001 ஆம் ஆண்டு முதல் விரிவான தேசிய அளவிலான கணக்கெடுப்பு எதுவும் இல்லை.
2016 ஆம் ஆண்டில், இந்தியாவில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பற்றிய கணக்கெடுப்பை மத்திய அரசு அறிவித்தது.
இது 29 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது. இதில் பெண்களும் திருநங்கைகளும் அடங்குவர். இதற்கு முந்தைய ஆய்வுகளில் அவர்கள் சேர்க்கப்படவில்லை.
இந்த அறிக்கையானது வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC
ஆனால், கிடைத்த முடிவுகள் வல்லுநர்களையும் திகைக்க வைக்கின்றன. தேசிய கணக்கெடுப்பிற்கான முன்னணி தரவு சேகரிப்பு அலகை நடத்தி வரும் முக்தாங்கானின் சஞ்சய் பகத் கூறுகிறார்.
"இதுவரை கிடைத்த முடிவுகள் கலக்கத்தையே உண்டாக்குகிறது. அதாவது பிரச்சனையின் சிறுபகுதியை மட்டுமே கண்டறிந்துள்ளோம். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் வயது குறைந்துகொண்டே வருகிறது."
இறுதி அறிக்கை வெளியிடப்படும்போதுதான், இந்தியாவில் போதைப்பொருள் அடிமை பிரச்சனையின் உண்மையான வீரியம் தெரிய வரும்.
"விழிப்புணர்வை அதிகரிப்பதும் மற்றும் இதிலுள்ள ஆபத்துக்கள் குறித்த தெளிவை மக்களிடையே உருவாக்குவதுமே இதை சமாளிப்பதற்கான வழி" என்று முக்தா கூறுகிறார்.
புதிய வாழ்வை உருவாக்குதல்
தொழிற்சாலைகளால் சூழப்பட்ட நாக்பூரின் ஹிக்னாவிலுள்ளது மைத்ரீ மறுவாழ்வு மையம். அதன் உள்ளே இருக்கும் தங்குமிடத்தில் கிட்டத்தட்ட 115 போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இங்குதான், துஷார் நாட்டு ஆலோசகராக பணிபுரிகிறார்.
"சாலையோரத்தில் இறந்த நிலையில் கிடந்த தெரு நாயொன்றின் உடலை பார்த்தேன். இதே நிலை எனக்கும் ஒருநாள் ஏற்படும் என்று தோன்றியது. அப்போதிலிருந்து கடந்த 14 வருடங்களாக குடிப்பழக்கத்துக்கு ஆளாகாமல் இருந்து வருகிறேன்."

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC
இவர் தற்போது அமைதியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரது மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.
தனது அனுபவங்களை திரட்டிய துஷார் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
மைத்ரீ மறுவாழ்வு மையத்தின் நிறுவனரும் முன்னாள் போதைப்பொருள் அடிமையாளருமான ரவி பதயே மற்றும் துஷார் ஆகியோர் இணைந்து மற்றவர்கள் குணமடைவதற்கு உதவுகின்றனர்.
குடும்ப பின்னணி சார்ந்த பிரச்சனைகள், பணியிடத்திலுள்ள அழுத்தம், சக குழுவினரிடமிருந்து ஏற்படும் அழுத்தம் உள்ளிட்ட பலவிதமான அடிமையாதலுக்கான காரணிகளை ரவி விளக்குகிறார்.
"கொண்டாட்டம் பற்றிய எங்களது கருத்து மாறிவிட்டது. குடிப்பது அல்லது புகைப்பிடிப்பதிலிருந்து துவங்கும் இந்த பழக்கம் கடைசியில் போதைப்பொருள் அடிமையாதலுக்கு செல்கிறது."
கடந்த 12 வருடங்களுக்கு மேலாக, அதாவது தனது இளமைக்காலத்திலிருந்தே போதைப்பொருள் அடிமையாகி தவித்த வரும் யாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை மைத்ரீ மையத்தில் சந்தித்தோம்.

பட மூலாதாரம், SHARAD BADHE/BBC
தற்போது 28 வயதாகும் யாஷ், தனது வாழ்க்கையே வீணாகிவிட்டதென்று வருந்துகிறார்.
"நான் என் உடலை கெடுத்துக்கொண்டேன். தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் நான் பங்கேற்றுள்ளேன். இப்போது, என்னால் அதை செய்ய முடியாது."
அவர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தாழ்ந்த குரலில் பேசுகிறார். அவரது வெற்றுப் பார்வை அவர் சந்தித்த வலிகளை கூறுகிறது.
"நான் தற்போது பெரியளவில் மாறிவிட்டேன். எப்போதும் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்தால் மீண்டும் போதைக்கு அடிமையாகமாட்டோம் என்று எங்களது ஆலோசகர் கூறினார். நான் மிகவும் கடினமாக முயற்சித்து வருகிறேன். இச்சூழ்நிலையிலிருந்து என்னால் தப்பிப்பிழைக்க முடியும்."
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












