You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காவிரி பிரச்சனையின் தொடக்கம் என்ன? - 3 எளிய கேள்வியும், பதிலும்
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
மீண்டும் முதல் பக்கத்தை ஆக்கிரமிக்க தொடங்கி இருக்கிறது காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை. தலைகாவிரியில் பிறந்து, நாகப்பட்டினத்தில் கடலுடன் கலக்கும் காவிரி, வழி நெடுக பலரின் தாகத்தை தணித்து, நிலமெங்கும் ஈரம் பூசி மண்ணை நெகிழ வைக்கிறது.
காவிரி - தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி என மூன்று மாநிலம் மற்றும் ஒரு ஒன்றிய பிரதேசத்தின் வாழ்வாதாரம். காவிரியுடன் இம்மாநில மக்களின் வாழ்க்கை மட்டும் பிணைந்திருக்கவில்லை, அரசியலும் பிணைந்திருக்கிறது. அதனால்தான் கொஞ்சம் உரசினாலும் நீர், நெருப்பாக எரிகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழகமெங்கும் போராட்டம் நடந்து வருகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் காவிரி தொடர்பாக முடிவு எடுத்தால் உணர்ச்சிபூர்வமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்கிறது மத்திய அரசு.
சரி. பல லட்சம் மக்களின் வாழ்வாதரமாக இருக்கும் காவிரி குறித்தும், அதனுடன் பிணைந்திருக்கும் அரசியல் குறித்தும் 3 கேள்விகளில் விளக்குகிறோம்.
காவிரி பிரச்சனை எப்போது தொடங்கியது?
இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பிரச்சனை. 1870-களில் மைசூர் சமஸ்தானம் காவிரியில் சில நீர் மேலாண்மை திட்டங்களை முன்னெடுத்தது. இதனால் தங்களுக்கு உரிய நீர் வராமல் போய்விடுமோ என்று சென்னை ராஜதானி அரசு அஞ்சியது. அதன் பின் மைசூரை கடும் பஞ்சம் ஒன்று தாக்கியது. இதனால் அவர்களின் திட்டங்கள் தள்ளிபோனது. பஞ்சத்திற்கு பின் மீண்டும் அந்த திட்டங்களை தூசு தட்டியது மைசூர் சமஸ்தானம். சென்னை மாகாணம் தொடர்ந்து இது குறித்து அவர்களுக்கு கடிதம் எழுதியது.
1890- ஆம் ஆண்டு மே 10 தேதி அன்று காவிரிப் பிரச்சனை குறித்து மைசூர் சமஸ்தானம் சென்னை பிரிட்டிஷ் அரசு இடையே முதல் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதுதான் காவிரி பிரச்சனையில் மேற்கொள்ளப்பட்ட முதல் பேச்சுவார்த்தை. ஆனால், அந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. அதன் பின் 1891 ஆம் ஆண்டு கோடை காலத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. அப்போதும் ஒரு முடிவு எட்டப்படவில்லை. இறுதியாக, 1892 ஆம் ஆண்டு ஊட்டியில் நடந்த பேச்சுச்வார்த்தையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.இதுதான் காவிரி நதிநீர் பிரச்சனையில் கையெழுத்தான முதல் ஒப்பந்தம்.
தகவல் - காவிரி அரசியலும், வரலாறும், ஆர். முத்துக்குமார்.
1892 ஆம் ஒப்பந்தத்தில் என்ன இருந்தது?
அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் மாகாணத்தின் நீர்நிலைகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டன. அதாவது, முதல் பகுதியில் (அட்டவணை அ) அந்த மாகாணத்தின் முதன்மையான ஆறுகள் சேர்க்கப்பட்டன (துங்கபத்ரா, துங்கா, பத்ரா, வேதவதி, வெட பினாகினி, சித்திராவதி, பாபக்னி, பாலாறு, தெற்கு பினாகினி, காவிரி, ஏமாவதி, இலட்சுமண தீர்த்தா, கபினி, சுவர்ணவதி, பகாட்சி) ; அட்டவணை ஆ மற்றும் இ -இல் சிறிய ஓடைகள், நீர்ப்பிடிப்புகள் சேர்க்கப்பட்டன.
சென்னை அரசின் ஒப்புதல் இல்லாமல் மைசூர் அரசு அட்டவணை அ-வில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறுகளில் அணைகள் கட்டக் கூடாது. அவ்வாறு புதிய நீர் தேக்கமோ, அணைக்கட்டோ கட்ட விரும்பினால் மைசூர் அரசு சென்னை அரசுக்கு அது குறித்த திட்டவிவரங்களைத் தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும்.
புதிய அணைகள் கட்டுவதில் இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்படவில்லையெனில், பிரச்சனையை இரு அரசாங்கங்களால் அல்லது இந்திய அரசால் நியமிக்கப்படும் தீர்ப்பாளர்கள் முடிவுக்கு விட்டுவிட வேண்டும்,
ஆ மற்றும் இ அட்டவணையில் உள்ள ஓடைகள், சிற்றாறுகள் போன்றவற்றில் மைசூர் அரசு தனது விருப்பத்திற்கேற்ப செயல்படலாம்.
சரி... மீண்டும் எப்போது பிரச்சனை தொடங்கியது?
கண்ணம்பாடி அணைக்கட்ட (கிருஷ்ணராஜசாகர்) மைசூர் அரசு திட்டமிட்டபோதுதான்.1906 ஆம் ஆண்டு மைசூரிலிருந்து 16 கி.மீட்டர் வடமேற்கே கண்ணம்பாடி என்ற இடத்தில் அணைகட்ட திட்டம் முன்மொழிந்தது.
இதே காலக்கட்டத்தில் மேட்டூர் அணை கட்டும் திட்டத்தை சென்னை மாகாண அரசு முன் வைத்தது. இவ்விரு அரசுகளுக்குமிடையே கண்ணம்பாடி அணை மற்றும் மேட்டூர் அணை கட்டுவது தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால் இந்திய அரசு, இப்பிரச்சனையைத் தீர்ப்பாளர் முடிவுக்குவிட்டது. 1913 ஆம் ஆண்டு சூன் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எச்.டி. கிரிஃபின் அவர்களைத் தீர்பாளராக நியமித்தது.
சென்னை மைசூர் அரசுகள் முறையே மேட்டூர், கண்ணம்பாடி அணைகளைக் கட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால், அதே நேரம் காவிரி மேலாண்மையில் ஆறரை அடி உயரத்திற்கு ஒரு நொடிக்கு 22,750 கன அடி தண்ணீர் அங்கு ஓடும்படியும் காவிரியில் மைசூர் தண்ணீர் விட வேண்டும் என்று கிரிஃபின் தீர்ப்பளித்தார்.
ஆனால், சென்னை அரசு இதனை ஏற்கவில்லை. மேலணையில் 7 அடி உயரமும் ஒரு நொடிக்கு 26,750 கன அடியும் தண்ணீர் வந்தால்தான் பழைய பாசனப் பகுதியைப் பாதுகாக்க முடியும் என்று இந்திய அரசுக்கு மேல் முறையீடு செய்தது சென்னை மாகாண அரசு.
இந்திய அரசு இந்த மேல்முறையீட்டை ஏற்கவில்லை. பின், சென்னை அரசு லண்டனில் உள்ள இந்திய அமைச்சருக்கு மேல் முறையீடு செய்தது. இதனை இந்திய அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
இந்தப் புள்ளியில்தான் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை தொடங்கியது.
பின், நீண்ட பிரச்சனைக்குப் பின் 1924 பிப்ரவரி 18ஆம் தேதி, கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டுவது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தகவல் - காவிரி, நேற்று - இன்று - நாளை; ஆசிரியர் - பெ. மணியரசன்.
பிற செய்திகள்:
- வளிமண்டலத்துக்குள் நுழைந்த சீன விண்வெளி நிலையம் - தென் பசிஃபிக் பகுதியில் விழும்
- #LIVE: ஈரோடு - திருச்சி அணிகளிடையே கடும் மோதல் #BBCStreetCricket - ஃபேஸ்புக் நேரலை
- ஸ்டெர்லைட்: குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள் - கமல்
- ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமானது எப்படி?
- 'தீரன்' இயக்குநருடன் அஜித்; மீண்டும் பேய் படத்தில் நயன்தாரா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்