You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வளிமண்டலத்துக்குள் நுழைந்த சீன விண்வெளி நிலையம் - தென் பசிஃபிக் பகுதியில் விழும்
கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் வளிமண்டலத்துக்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தென் பசிஃபிக், சீனப்பகுதிக்கு மேலே இருப்பதாக சீன மற்றும் அமெரிக்க அறிக்கைகள் கூறுகின்றன.
வளிமண்டலத்தில் திங்கட்கிழமை அன்று ஜி.எம்.டி நேரப்படி 00:15 மணிக்கு இது நுழைந்தது என சீனாவின் மனித விண்வெளி பொறியியல் அலுவலகம் கூறுகின்றன.
கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் திங்களன்று பூமியில் விழ வாய்ப்புண்டு என்று அதைக் கண்காணித்து வரும் விஞ்ஞானிகள் ஏற்கனவே கூறியிருந்தனர்.
வரும் 2022இல் மனிதர்களைக்கொண்ட விண்வெளி நிலையத்தை விண்ணில் நிறுவும் சீனாவின் லட்சிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியான தியன்கொங்-1 விண்கலம் 10 மீட்டர் நீளம் மற்றும் 8 டன்கள் எடை கொண்டதாகும்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஏவப்பட்ட அந்த விண்வெளி நிலையம் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தனது பணிகளை முடித்துக்கொண்டது.
தியன்கொங்-1 தங்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும், அதை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் 2016ஆம் ஆண்டு சீனா உறுதிப்படுத்தி இருந்தது.
தியன்கொங்-1 மீண்டும் திரும்புவதை உறுதி செய்ய சுற்றுப்பாதை பகுப்பாய்வு (Orbit analysis) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக அமெரிக்க வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ஆனால் பூமயின் எந்தப் பகுதியில் அது விழும் என்பதை கணிக்க பெரிதும் போராடினர். சா பாலோ அல்லது பிரேசிலில் விண்வெளி நிலையம் விழும் என முதலில் சீனா தவறாக கூறியது.
உடைந்த பாகங்கள் பெரும்பாலும் நீரில் விழும் என ஐரோப்பிய விண்வெளி அமைப்பு தெரிவித்திருந்தது.
அந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தாலும், அதன் பெரும்பாலான பகுதிகள் மண்ணை அடையும் முன்னரே எரிந்துவிடும் என்றும், அதன் மிகச் சில பாகங்களே பூமியின் மேற்பரப்பைத் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் காட்டப்படுவதுபோல அந்த விண்வெளி நிலையம் அதிகமான விசையுடன் பூமியில் நுழையாது என்றும், விண் கற்களின் வண்ணமிகு தூரல் போலவே அது வளி மண்டலத்துக்குள் நுழையும் என்றும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்