கர்நாடக தேர்தல் அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடை இல்லை
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
இன்று கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்து செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் இதனை தெரிவித்துள்ளார்.
மே 12 ஆம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த ராவத், காவிரி மேலாண்மை அமைப்பது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, கர்நாடக சட்டசபை தேர்தலுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
மேலும், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றுவதில் எந்த தடையும் இல்லை என்றும் ராவத் தெரிவித்தார்.
மே 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 15 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் ராவத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்:
கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையேயான காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.
அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 29ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது. மேலும், தமிழகத்துக்கு காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்த 192 டிஎம்சி தண்ணீரில் 177.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை என கர்நாடக அரசு தெரிவித்தது.
இதற்கு தமிழக அரசு 29ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்திருந்தது.
இன்று தமிழக அமைச்சர்கள் டெல்லி செல்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நேற்றைய தினம் டெல்லியில், தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காலவரையின்றி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












